• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • Explainer: இந்தியாவில் நீடிக்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு - மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

Explainer: இந்தியாவில் நீடிக்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு - மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

கோப்புப் படம்

கோப்புப் படம்

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும் சுமார் 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இறக்குமதி செய்வதற்கான டெண்டரை வெளியிடுமாறு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எந்த மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன?

மகாராஷ்டிராவில் மருத்துவ ஆக்ஸிஜனின் நுகர்வு மாநிலத்தின் முழு உற்பத்தி திறனான 1,250 டன்களை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பால் அம்மாநிலத்தில் சுமார் 6.38 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவற்றில் 10% அதாவது 60,000 முதல் 65,000 நோயாளிகள் ஆக்ஸிஜன் ஆதரவில் உள்ளனர். இது மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். எனவே, மருத்துவ ஆக்சிஜனை சத்தீஸ்கரில் இருந்து 50 டன்னையும், குஜராத்திலிருந்து 50 டன்னையும் மகாராஷ்டிரா மாநிலம் தினமும் எடுத்து வருகிறது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் ஆலையில் இருந்து மேலும் 100 டன் ஆக்சிஜனை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16 ஆம் தேதி நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் சுமார் 59,193 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அங்கு தினமும் 250 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த மாநிலத்திற்கு என சொந்த உற்பத்தி ஆலைகள் எதுவும் இல்லை. இதனால் குஜராத், சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை ஆக்ஸிஜன் வழங்குவதற்காக நம்பியுள்ளது. அண்டை மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அங்கிருந்து மத்திய பிரதேசத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் சீராக இருக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதேபோல, குஜராத்தில் 49,737க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு ஒரு நாளைக்கு 500 டன்களைக் கடந்துள்ளது.

தொற்றுநோய்களின் போது அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரம் குழு -2 (Centre-appointed Empowered Group-2), மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான்,கர்நாடகா, உ.பி., டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் தேவையை வரும் நாட்களில் பதிவு செய்ய உள்ளது. இந்த 12 மாநிலங்களுக்கு உபரி ஆக்ஸிஜனைக் கொண்ட மாநிலங்களில் இருந்து மூன்று தொகுதிகளாக 17,000 டன் ஆக்சிஜன் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also read... COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின் 2-ம் அலை காரணமாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் பெரிய ஆக்சிஜன் சேமிப்பு டேங்கர்கள் இல்லை. இதனால் சிறிய மருத்துவ இல்லங்களில், தினசரி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குவதை நம்பியுள்ள கிராமப்புறங்களில் இந்த பிரச்சினை கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எங்கே, எவ்வளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது? அதன் விநியோகத்தில் உள்ள தடைகள் என்ன?

பொதுவாக இரும்பு மற்றும் எஃகு தொழில், மருத்துவமனைகள், குப்பிகளை தயாரிக்கும் மருந்து அலகுகள் மற்றும் கண்ணாடித் தயாரிக்கும் தொழில் போன்றவற்றில் ஆக்சிஜனின் தேவை உள்ளது. ஆனால் தற்போது, பெரும்பாலான மாநிலங்கள் தங்களது முழு ஆக்ஸிஜன் உற்பத்தியையும் மருத்துவ பயன்பாட்டிற்காக திருப்பிவிடப்பட்டுள்ளன. 7,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி சில முக்கிய மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியாளர்களில் ஐனாக்ஸ் ஏர் தயாரிப்புகள், லிண்டே இந்தியா, கோயல் எம்ஜி கேஸ் பிரைவேட் லிமிடெட், நேஷனல் ஆக்ஸிஜன் லிமிடெட் ஆகியவை அடங்கும். இவற்றில் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்றால் அது ஐனாக்ஸ் நிறுவனம் தான்.

இங்கு ஒரு நாளைக்கு 2000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுகுறித்து ஐனாக்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, "நாட்டின் மொத்த மருத்துவ ஆக்ஸிஜன் தேவையில் 60%-த்திற்கு நாங்கள் பங்களித்து வருகிறோம். நாங்கள் நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயு உற்பத்தியை நிறுத்திவிட்டு, அனைத்து வளங்களையும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திருப்பிவிட்டோம், ”என்று கூறினார். கடந்த ஆண்டு தொற்றுநோயின் முதல் அலையின் போது, தொழில்துறை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் பல சிறிய உற்பத்தி நிறுவனங்களும் சில விவரக்குறிப்புகளை மாற்றியதன் மூலம் மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதுவே, மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை விரிவாக்க உதவியது.

உற்பத்தியாளர்கள் 99.5% தூய்மையுடன் திரவ ஆக்ஸிஜனைத் தயாரிக்கிறார்கள். இது ஜம்போ டேங்கர்களில் சேமிக்கப்படுகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் கிரையோஜெனிக் டேங்கர்கள் மூலம் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதையடுத்து, விநியோகஸ்தர் மட்டத்தில், ஆக்ஸிஜனை வாயுவை வடிவமாக மாற்றவும், ஜம்போ சிலிண்டர்கள் மற்றும் துரா சிலிண்டர்களில் நிரப்பவும் மறுசீரமைப்பு செயல்முறை பின்பற்றப்படுகிறது. இந்த சிலிண்டர்கள் பின்னர் சிறிய சப்ளையர்களுக்கு அல்லது நேரடியாக மருத்துவமனைகளுக்கு செல்கின்றன. தற்போது பிரச்சனை என்னவென்றால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆக்ஸிஜனை சேமித்து கொண்டு செல்ல போதுமான சிலிண்டர்கள் மற்றும் டேங்கர்கள் இல்லை என்று ஒரு தொழில் நிபுணர் கூறியுள்ளார்.

அதேபோல, தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய, புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை உடனடியாக அமைக்கவோ அல்லது ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்தவோ இயலாது. கடந்த ஒரு ஆண்டில், ஐனாக்ஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு முறையே 200 மற்றும் 150 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய மேற்கு வங்கம் மற்றும் உ.பி.-யில் ஆலையை அமைக்க முடிவெடுத்தது. இந்த ஆலை நிறுவும் செயல்முறைக்கு மொத்தமாக 24 மாதங்கள் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் அதிகமான ஆலைகள் அமைப்பதற்கான திட்டங்கள் இருப்பதாககவும், ஆனால் அது தற்போது நிலவி வரும் நெருக்கடியை தீர்க்காது என்றும் ஐனாக்ஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்வதில் உள்ள தடைகள்:

மருத்துவ ஆக்ஸிஜனின் 24 × 7 சாலை போக்குவரத்தை உறுதிப்படுத்த போதுமான கிரையோஜெனிக் டேங்கர்கள் இந்தியாவில் இல்லை என்பதே முதல் தடையாக பார்க்கப்படுகிறது. இப்போது ஆக்ஸிஜன் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் போது, உற்பத்தியாளரிடமிருந்து நோயாளியின் படுக்கைக்கு எடுத்துச் செல்லப்படும் பயண நேரம் 3-5 நாட்களில் இருந்து 6-8 நாட்களாக அதிகரித்துள்ளது. ஒரு மருத்துவமனை மிகச்சிறியதாகவோ அல்லது தொலைதூர இடத்தில இருந்தாலோ ஆக்சிஜனை அங்கு எடுத்துச் செல்லும் நேரம் அதிகமாகிறது. அதே போல சிறிய சப்ளையர்களிடம் ஆக்சிஜனின் ஓட்டம் சீராக இருக்க போதுமான ஜம்போ மற்றும் துரா சிலிண்டர்கள் இல்லை என்று புகார் கூறியுள்ளனர். போக்குவரத்து மற்றும் தளவாடங்களுக்கான செலவு அதிகரித்ததால் சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான செலவும் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு சிலிண்டரை ரீபில் செய்ய ரூ.100-150 செலவாகும். இப்போது சிலிண்டருக்கு ரூ.500-2000 வரை செலவாகிறது.

ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

வழக்கமாக, ஒவ்வொரு 100 நோயாளிகளில் 20 பேர் அறிகுறி கொண்டவர்களாக மாறுகிறார்கள், அவர்களில் மூன்று பேர் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஒவ்வொரு 100 நோயாளிகளுக்கும் தேவைப்படும் ஆக்ஸிஜன் மையம் 10 முதல் 15 வரை இருக்கும். எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்ய கீழ்காணும் சில தீர்வுகளை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

* பிரஷர் ஸ்விங் அப்சார்ப்சன் (PSA) ஆலைகளை நிறுவ தொலைதூர பகுதிகளில் உள்ள 100 மருத்துவமனைகளை அடையாளம் காண அதிகாரம் குழு-2 திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அவற்றின் சொந்த ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து மருத்துவமனைகளை தன்னம்பிக்கை கொள்ளச் செய்யலாம். இது போக்குவரத்து செலவுகள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை குறைக்கும். இந்த நிலையில் சுமார் 162 பி.எஸ்.ஏ ஆலைகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

Also read... 

* குறைந்தது 10 நாட்கள் நீடிக்கும் பொருட்களை சேமிக்க மருத்துவமனைகள் பெரிய சேமிப்பு தொட்டிகளை அமைத்து வருகின்றன. கடந்த ஒரு வருடத்தில், பல சிவில் மருத்துவமனைகள் சிலிண்டர்களுக்கான அன்றாட காத்திருப்பைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற ஜம்போ டேங்கர்களை அமைத்துள்ளன.

* பாரம்பரிய சாலைப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜனை விரைவாகக் கொண்டு செல்ல ரயில்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய பிரதேச அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஏர்லிப்ட் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை செய்ய பரிந்துரைத்துள்ளார்.

* இரும்பு மற்றும் எஃகு ஆலைகளில் இருந்து உபரி ஆக்ஸிஜன் பங்குகள் மருத்துவ பயன்பாட்டிற்காக திருப்பி விடப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் போக்குவரத்திற்காக ஆர்கான் மற்றும் நைட்ரஜன் டேங்கர்களை திருப்பிவிடவும் அதிகாரம் பெற்ற குழு -2 முடிவு செய்துள்ளது. இதற்காக, பெட்ரோலிய மற்றும் பாதுகாப்பு அமைப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தொழில்துறை சிலிண்டர்களை மீண்டும் நிரப்பவும் குழு அறிவுறுத்தியுள்ளது.

* அதேசமயம் ஆக்ஸிஜன் வீணாவதை தடுக்கவும், தேவையற்ற பயன்பாட்டினை தவிர்க்கவும் வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஆக்ஸிஜனை வழங்கும் மருத்துவமனை குழாய்களில் கசிவுகள் ஏற்படக்கூடும் என்று தொழில்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு நிபுணர் குழு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் 40 லிட்டர் மற்றும் சாதாரண வார்டுகளில் ஒரு நிமிடத்திற்கு ஒரு நோயாளிக்கு 15 லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கலை நிர்ணயித்தது. ஆக்ஸிஜன் ஆதரவில் நோயாளிகளை தினமும் கண்காணிக்க குழு அறிவுறுத்தியுள்ளது. மேலும் 94% க்கும் குறைவான ஆக்ஸிஜன் செறிவு அளவைக் கொண்டவர்கள் மட்டுமே ஆக்ஸிஜன் ஆதரவைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: