75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச்.12) தண்டி யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரையை மீண்டும் நினைவுகூறும் வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அருகிலுள்ள மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாயின் நினைவு இடமான அபய் காட் அருகே உள்ள ஒரு மைதானத்தில் இருந்து 21 நாட்கள் நீண்ட "தண்டி யாத்திரை"-யை பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நடைபெற்ற மாநில அளவிலான உயரதிகார குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த குஜராத் முதலமைச்சர் திரு விஜய் ரூபானி, இதனை தெரிவித்தார். மகாத்மாகாந்தி பயணம் மேற்கொண்ட 386 கிலோமீட்டர் தூரம் உள்ள பாதையில் இப்போதும் யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். 81 பேர் இந்த பாத யாத்திரையில் பங்கேற்க உள்ளதாகவும், இவர்கள் செல்லும் வழியில் 21 இடங்களில் பல வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் 75வது ஆண்டு சுதந்திர இந்தியாவை கொண்டாடும் வகையில் ஆசாதி கா அமிர்தம் மஹோத்ஸவ் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
தண்டி யாத்திரை எதனால் நடந்தது?
ஆங்கிலேயர்கள் பிடியில் இந்தியா சிக்கியிருந்தபோது இந்தியர்கள் மீது அவர்கள் விதித்த உப்பு வரிக்கு எதிராக அகிம்சை வழியில் மகாத்மா காந்தி திட்டமிட்ட போராட்டம் தான் தண்டி யாத்திரை அல்லது உப்பு சாத்தியகிரகம். கடந்த 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் தண்டி யாத்திரை துவங்கியது. 1930ம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.
காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார். காந்தி தலைமையில், 78 பேர் மார்ச் 12ம் தேதி அன்று 24 நாட்கள் அணிவகுப்பைத் தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி அன்று தண்டியை அடைந்தனர். உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி தண்டி யாத்திரையில் மகாத்மா காந்தியுடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர். ஏப்ரல் 6ம் தேதி அன்று காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக லட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.
தண்டியில் உப்பு தயாரித்த பின்னர், அங்கிருந்து தெற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ள தரசனா சால்ட் ஒர்க்ஸ் நகருக்குச் சென்றார். மே 5 இல் தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் உப்பெடுக்கத் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டார். தண்டி நடைப்பயணம் மற்றும் பிந்தைய நிகழ்வான தாராசனா சத்தியாகிரகம் ஆகியவை இந்திய விடுதலை இயக்கத்தின் மீது உலகம் முழுதுமான கவனத்தை ஈர்த்தது.
நாளை நடைபெறும் தண்டி யாத்திரையில் யார் பங்கேற்பார்கள்?
இது குறித்து குஜராத் விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை அமைச்சர் ஈஸ்வர்சிங் படேல் கூறியதாவது, “உப்பு சத்தியாகிரகத்தில் 1930ம் ஆண்டு காந்தியுடன் பாதயாத்திரை சென்றவர்களின் சந்ததியினர் கவுரவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். இருப்பினும், அவர்களின் வயது காரணமாக, கிட்டத்தட்ட 386 கி.மீ நடைப்பயணத்தில் பங்கேற்க அவர்கள் அழைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 1930 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியுடன் அகமதாபாத்தில் இருந்து தண்டி வரை சென்ற 78 பேரின் நினைவாக 81 நடைப்பயணிகள் இந்த பாதையில் பயணிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த யாத்திரையில் காந்தியுடன் தொடர்புடைய ஆறு இடங்களில் பெரிய நிகழ்ச்சிகள் அரகேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அவற்றில், காந்தியின் பிறப்பிடமான போர்பந்தர், ராஜ்கோட், வதோதரா, பர்தோலி (சூரத்), மாண்ட்வி (கட்ச்) மற்றும் தண்டி (நவ்சாரி) ஆகிய பகுதிகள் அடங்கும். நடைபயிற்சி செய்பவர்களுக்கான இரவு நேர நிறுத்தங்களில் சுமார் 21 இடங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் ரூபானி கருத்துப்படி, 21 நாட்களில் ஒவ்வொரு நாளும் அரசியல் தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த யாத்திரையை காங்கிரஸ் எவ்வாறு நினைவு கூர்ந்தது?
2005 ஆம் ஆண்டில், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தண்டி யாத்திரையின் 75 ஆண்டுகளை நினைவுக்கூரும் வகையில் இதேபோன்ற பயணத்தை ஆரம்பித்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2005ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து ஒரு அணிவகுப்பைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குடன் தண்டியில் நடந்த சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டத்திலும் சோனியா காந்தி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணிவகுப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் மும்பையை தளமாகக் கொண்ட மகாத்மா காந்தி அறக்கட்டளை இணைந்து மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி நடத்தினார். அவர் முழு வழியிலும் நடந்து சென்றார்.
அக்கால காங்கிரஸ் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களான அகமது படேல், சல்மான் குர்ஷித், ராகுல் காந்தி ஆகியோரும் பல்வேறு வழிகளில் நடந்து சென்றனர். இந்த அணிவகுப்பிற்கு பங்கேற்பாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏப்ரல் 6, 2005 அன்று அணிவகுப்புக்கு தலைமை தாங்கிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், 386 கி.மீ பாதையை ஒரு ‘பாரம்பரிய பாதை’ (Heritage Route) என்று நியமிப்பதாக அறிவித்திருந்தார்.
Also read... Explainer: 'வேக்சின் பாஸ்போர்ட்' என்றால் என்ன? தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்!
இது மலையேற்ற நட்பு பாதையாக திட்டமிடப்பட்டது. காந்தி தங்கியிருந்த அனைத்து தளங்களும் பாரம்பரிய தளங்களாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும், சபர்மதி ஆசிரமத்திற்கு உடனடியாக 10 கோடி ரூபாய் கார்பஸ் அறிவிப்பதாகவும் சிங் கூறியிருந்தார். தண்டியைப் பொறுத்தவரை, அப்போதைய யுபிஏ அரசாங்கம் காந்திய ஆய்வுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நூலகத்தைத் திட்டமிட்டு அதில் 1930ம் ஆண்டு யாத்திரையில் பங்கேற்ற 78 பேரின் சிலைகளை அமைக்க முடிவெடுத்தது. தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் என அழைக்கப்படும் இந்த திட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.
நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமரின் திட்ட அட்டவணை?
தற்காலிக திட்டத்தின் படி, பிரதமர் சபர்மதி ஆசிரமம் பாதுகாப்பு மற்றும் நினைவு அறக்கட்டளை நிர்வகிக்கும் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ஹ்ரிடே குஞ்ஜை காலை 10:30 மணியளவில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் பார்வையிடுவார் என்று ஒரு ஆசிரம அதிகாரி தெரிவித்துள்ளார். ஹ்ரிடே குஞ்ச் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் அபய் காட் அருகே உள்ள மைதானத்திற்குச் சென்று ஒரு கூட்டத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு ஒரு மணி நேரம் நீடிக்கும். இது குஜராத்தில் 75 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது. பின்னர் யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Independence day, Mahatma Gandhi, PM Modi