முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / சிவசேனா விவகாரம்: ஈபிஎஸ் vs ஓபிஎஸ் யாருக்கு எச்சரிக்கை மணி?

சிவசேனா விவகாரம்: ஈபிஎஸ் vs ஓபிஎஸ் யாருக்கு எச்சரிக்கை மணி?

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

சிவசேனாவைப் போலவே அ.தி.மு.க மீதான உரிமை கோரல் விவகாரமும் உச்சநீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் உள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கடந்த ஆண்டு முதல் இந்நாள் வரை தமிழ்நாடு அரசியல் களத்தை பரபரப்பு குறையாமல் வைத்திருக்கிறது அதிமுக உட்கட்சி விவகாரம். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மாதங்கள் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சனைக்கு எண்டு கிடையாதா என்பதுபோல் நீண்டுகொண்டிருக்கிறது. அதிமுகவில் நடந்துகொண்டிருக்கும் இந்த விவகாரத்தை மகாராஷ்டிரா அரசியலுடன் நம்மால் ஒப்பிட முடியும். ஏனெனில், இதே போன்றதொரு சூழல்தான் அந்த மாநிலத்திலும் நடந்திருக்கிறது. அதனை சற்று புரட்டிப் பார்க்கலாம்.

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனா கட்சியையும் வில் அம்பு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. இது இந்திய அளவில் கவனிக்கத்தக்க ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் ஆதரவு அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் செய்தது சரி என்று உச்சநீதிமன்றமும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான உத்தரவை இன்று பிறப்பித்தது. இது உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. சிவசேனா கட்சியின் விவகாரம் யாருக்கு மிகவும் முக்கியமோ இல்லையோ எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், சிவசேனாவைப் போலவே அ.தி.மு.க மீதான உரிமை கோரல் விவகாரமும் உச்சநீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் உள்ளது. எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாவோ பாதகமாகவோ வரலாம்.

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளர், எதிர்கட்சித் தலைவர், இடைக்காலப் பொதுச்செயலாளர், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என்று ஒவ்வொரு முயற்சியிலும் தொடர்சியாக தான் நினைத்ததை செய்து முடித்துவருகிறார். மறுபுறம், மேற்சொன்ன விவகாரங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர் பின்னடைவு. இருப்பினும், ஓபிஎஸ் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்று உரிமைகோருவதை எடப்பாடி பழனிசாமியால் கண்டுகொள்ளாமல் தனது பணியைத் தொடர முடியவில்லை. ஏனென்றால், ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தோ, கட்சியிலிருந்தோ நீக்கப்பட்டதற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முன்னிருக்கும் மிகப்பெரிய சிக்கலே அதுதான். அந்த சிக்கல் எப்போது வேண்டுமானாலும் ஈபிஎஸுக்கு எதிராகத் திரும்பலாம் என்று கணிக்கப்படுகிறது.

சிவசேனா விவகாரத்தை பொதுவாக அணுகும்போது, எம்.பி, எம்.எல்.ஏ ஆதரவு அதிகம் கொண்ட ஏக்நாத் ஷிண்டேவுக்கு கட்சி கிடைத்ததுபோல, எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிகம் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்குதான் அ.தி.மு.க கிடைக்கும் என்று தோன்றலாம். ஆனால், எம்.பி, எம்.எல்.ஏ ஆதரவைக் கடந்து பா.ஜ.க முழு ஆதரவு ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்ளது. இன்னும், சொல்லப்போனால் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆதரவு ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைப்பதற்கு காரணமே பா.ஜ.கதான். எனவே, சிவசேனா விவகாரத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தவருக்கு வெற்றி என்பதைவிட பா.ஜ.க ஆதரவு இருந்தவருக்கு வெற்றி என்றே புரிந்துகொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் ஆதரவு இருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் என கூறப்படுக்கிறது.

சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ‘ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைய வேண்டும் என்றே விரும்புகிறோம்’ என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தினார். அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரமாக இருந்தாலும் எங்களது விருப்பம் இதுதான் என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்தார். அண்ணாமலையும் எந்த இடத்திலும் ஓபிஎஸ்-ஐ தவிர்க்கும் வகையில் பேசவில்லை. இத்தகைய சமிஞ்சைகள் எல்லாம் பா.ஜ.க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதற்கான வெளிப்பாடு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியும் பிஸியாக இருக்கும்போது, ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர் கூட்டத்தை சமீபத்தில் கூட்டினார். ஈபிஎஸுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுகிறார். அதுமட்டுமில்லாமல், இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெறுவது கடினம் என்கிறார். பா.ஜ.க ஆதரவு இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் இதைச் செய்திருக்க மாட்டார் என்பதே அரசியல் உற்றுநோக்கர்களின் கணிப்பாக உள்ளது. மேலும், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்தது தைரியமான ஒரு முடிவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்கூட எடப்பாடியால் அ.தி.மு.க மீது இன்னும் அழுத்தமாக உரிமைகோர முடியும். ஒருவேளை அவரது அணி தோற்கும் பட்சத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.கவால் வெற்றி பெற முடியாது என்ற பிம்பமே ஏற்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சிவசேனா விவகாரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கான எச்சரிக்கை மணி என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆக, இடைத்தேர்தலுக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையான பொதுத்தேர்தல் காத்திருக்கிறது!

First published:

Tags: AIADMK, EPS, OPS, Two Leaves