தேமுதிகவின் ஏற்ற இறக்கம் என்னென்ன? அக்கட்சி தொட்ட உயரம் என்ன?

விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை விஜயகாந்த் தொடங்கியதிலிருந்து, அக்கட்சி தொட்ட உயரம் என்ன? அடைந்த சரிவு என்ன? 

 • Share this:
  2005-ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. போட்டியிட்ட முதல் தேர்தலில் 8.4 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது. அதுமட்டுமின்றி பாமக கோட்டையாக இருந்த விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றிபெற்று சட்ட மன்றத்திலும் முதல்முறையாக கால்பதித்தார். அடுத்ததாக 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10.9 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலையை எட்டியது.

  அதனைத் தொடர்ந்து 2011-ல் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை மாற்றி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. ஆனால் வாக்கு சதவிகிதம் 7.9 ஆக குறைந்தது.

  அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே எதிர்க்கட்சியாக அங்கம் வகித்த தேமுதிக சட்டமன்றத்தில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறியது. . அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 14 இடங்களில் தேமுதிக போட்டியிட்டது. அந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் 5.1 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றது. அப்போதிலிருந்தே தேமுதிகவின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைய தொடங்கியது.

  இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நல கூட்டணி தேர்தலை சந்தித்தது. இதில் 104 தொகுதியில் போட்டியிட்டு 2.4 சதவிகிதம் வாக்கை மட்டுமே பெற்றது தேமுதிக. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்துக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.

  மேலும் படிக்க.. சமக தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு: ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு

  பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக நான்கு தொகுதிகளை பெற்று தேர்தலில் களம் கண்டது. ஆனால் அதிலும் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.2 என்ற அளவிற்கு குறைந்து விட்டது. தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்த தேமுதிக பெரிய கட்சிகள் கொடுக்கும் இடங்களை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: