இணையதள பயன்பாடு அதிகரிப்பிற்கு பிறகு சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருட காலமாக கொரோனா தாக்கத்துக்கு பிறகு பொருட்கள் வாங்குவது, பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது என அனைத்து தேவைகளையும் இணையம் வழியாகவே நாம் மேற்கொண்டு வருகிறோம்.
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால் வெளியே செல்லவே அச்சத்தில் இருக்கிறோம். ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் சென்று தான் ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையில் நம் பெரும்பாலான தேவைகளுக்கு கை கொடுத்து வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இணையம்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு கைகொடுக்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது. கம்ப்யூட்டர், இணையம் போன்றவற்றில் நடைபெறும் குற்றங்கள் சைபர் கிரைம் என்று அழைக்கப்படுகிறது.
சைபர் கிரைம் என்றால் என்ன ?
ஒருவருடைய கணினி, மொபைல்போன் போன்றவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் சைபர் கிரைம் எனப்படுகிறது. அதாவது குற்றச்செயல்களில் கணினி ஒரு கருவியாகவோ அல்லது குற்றச்செயல்கள் ஒரு கணினிக்கு எதிராகவோ நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டும்.
சைபர் கிரைம் குற்றங்கள் எந்தெந்த முறைகளில் நடைபெறும் ?
முறையான அனுமதியின்றி ஒருவருடைய கணினியையும், நெட்வொர்க்கையும் ஹேக் செய்வதன் மூலம் அதனை பயன்படுத்துவது, வைரஸ் போன்றவற்றை புகுத்தி அந்த கணினியை செயல்படாமல் செய்வது அல்லது அந்த கணினியில் உள்ள தகவல்கள் அழிந்து போக செய்வது, மென்பொருள் இயக்கத்தில் சில மாறுதல்களை புகுத்தி அதனை முறையாக செயல்படாமல் செய்வது, அல்லது அதன் பயன்பாட்டை மாற்றுவது, Email Bomb எனப்படும் அதிகப்படியான எண்ணிக்கையில் போலி இமெயில்கள் அனுப்புவது, போன்றவையாகும்.
சைபர் கிரைமின் வகைகள் என்னென்ன?
அரசுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் சைபர் டெரரிசம், தனி மனிதருக்கு எதிராக நடைபெறுவது சைபர் போர்னோகிராபி, சைபர் ஸ்டாக்கிங், சைபர் டிஃபேமேசன், சொத்துக்கள் மற்றும் பணத்தின் மீதான குற்றங்களான சூதாட்டம், கிரெடிட் கார்டு ஏமாற்று வேலை போன்றவைகளாகும்.
பிஸிங் என்றால் என்ன?
ஈமெயில் மூலமோ, போன் மூலமோ தொடர்பு கொண்டு ஒருவருடைய வங்கி கணக்கு எண், கடவுச்சொல், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்றவற்றை திருடுவது அல்லது நம்பிக்கைக் குரிய வகையில் பேசி பெறுவது போன்றவையாகும்.
சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிரான சட்டம் என்ன ?
கணினி வழியாக திருட்டு, ஏமாற்றுவேலை, தகாத முறையில் நடந்துகொள்வது போன்ற அனைத்தும் சைபர் கிரைமின் கீழ் வரும். அவற்றிற்காக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
சைபர் கிரைம் குறித்து எவ்வாறு புகார் அளிப்பது ?
சைபர் கிரைம் குற்றங்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் முறையான தகவல்களுடன் நீங்கள் சைபர் கிரைம் அலுவலகத்துக்கு புகாரளிக்கலாம். அப்போது உங்களுடைய பெயர், நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த விவரம், அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டும். உடனடி பாதுகாப்போ, நடவடிக்கையோ தேவையெனில் உங்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களையும் தொடர்புகொள்ளலாம்.
சைபர் ஸ்டாக்கிங் என்றால் என்ன ?
கணினி, இணையம் வழியாக ஒருவரை அவர் சம்மதம் இல்லாமல் அச்சுறுத்தும் வகையில் பின்தொடர்வது, துன்புறுத்துவது போன்றவைகளாகும்.
ஃபைனான்சியல் கிரைம் என்றால் என்ன ?
ஃபைனான்சியல் கிரைம் என்பது சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்கள் அல்லது பணம் ஆகியவற்றிற்கு எதிரான குற்றங்களாக வரையறுக்கப்படுகின்றன. அதாவது ஒருவரின் சொத்தின் உரிமை அல்லது பணம் ஆகியவற்றை குற்றவாளி தனது சொந்த பயன்பாடு மற்றும் நன்மைக்காக மாற்றுவதும் இதில் அடங்கும். அதிநவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள வங்கிக் கணக்குகளை கொள்ளையடிக்க முடியும்.
இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ள நிலையில் அதனால் நிகழ்த்தப்படும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கான போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இணையகுற்றங்களை தடுப்பதில் மிகவும் கடுமையான முயற்சிகளை இந்திய அரசாங்கம் எடுத்துக்கொண்டுதான் உள்ளது. இருப்பினும் இணையத்தை பயன்படுத்துவதில் நாமும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber crime, Internet