கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில் தொடர்ந்து கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸிஜன் விநியோகத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பலர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட தீவிர அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு இடம் கிடைக்காமல் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே வரிசையில் இருக்கும் போது, கணிசமான எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சையில் இருக்கும் நபர்களில் சிலர் மூச்சுத்திணறல் பிரச்னை காரணமாக ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் (oxygen concentrators) எனப்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற ஆக்ஸிஜன் வழிமுறைகளின் உதவியுடன் சுவாசிக்கிறார்கள். கொரோனாவின் பிடியில் நாடு இருக்கும் நிலையில் உயிர்காக்க உதவும் ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து பார்ப்போம்.
ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் என்றால் என்ன..?
ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் என்பது ரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு இயல்பை விட குறைவாக இருக்கும் நபர்களுக்கு, செயற்கையாக ஆக்ஸிஜனை வழங்க பயன்படும் ஒரு மருத்துவ சாதனம்.கோவிட்-19 தொற்று ஒரு சுவாச நோய்.
இது சுவாச குழாயை பாதிப்பது மட்டுமல்லாமல், தீவிர கோவிட் நோயாளிகளின் உடலில் உள்ள ஆக்ஸிஜன் செறிவு அளவை கடுமையாக பாதிக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு வைரஸ் காரணமாக உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் நுரையீரல் தொற்று அதிகரிப்பதால், ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மிகவும் மதிப்புமிக்கவையாக இருக்கின்றன. நம்மை சுற்றியுள்ள காற்றில் சுமார் 78% நைட்ரஜன், 21% ஆக்ஸிஜன் இருக்கிறது. மற்ற வாயுக்கள் மீதமுள்ள 1%.
ஒரு நபரின் சிறந்த ஆக்ஸிஜன் அளவு என்பது 94 -99% வரை இருக்க வேண்டும். ஆனால் ரத்த ஆக்ஸிஜன் அளவு (SpO2) அளவீடுகள் 93% க்கும் குறைவாக இருக்கும் நபர்களுக்கு சுற்றி இருக்கும் காற்றை உள்ளிழுத்து நைட்ரஜனை வடிகட்டி அகற்றி, தூய்மையான ஆக்ஸிஜனை வழங்குகிறது ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ்.
ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் வகைகள்..
தொடர்ச்சி ஓட்டம் (continuous flow) மற்றும் பல்ஸ் டோஸ்( pulse dose ) என 2 வகையான ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் சந்தையில் நமக்குக் கிடைக்கின்றன. இதில் தொடர்ச்சி ஓட்ட கான்சன்ட்ரேட்டர்ஸ் ஆன் செய்தது முதல் அதை அணைக்கும் வரை அதே ஆக்ஸிஜன் ஓட்டத்தை தரும். ஆனால் பல்ஸ் டோஸ் சாதனங்கள் நோயாளியின் சுவாச முறையை அடையாளம் கண்டு, ஆக்ஸிஜன் உள்ளிழுக்கம் தேவைப்படும் போது ஆக்ஸிஜனை தருகிறது. ஆகையால் பல்ஸ் டோஸ் அலகுகளால் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜனை தொடர்ச்சியான ஓட்ட ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ்களை போலவே அளவிட முடியாது, ஏனெனில் அவை ஒரு நிமிடம் நிலையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யாது.
கொரோனா குணமடைந்த பின்பும் பாதிப்பும் குறையவில்லையா..? பழைய நிலைக்கு திரும்ப டிப்ஸ்..!
இதை யாருக்காக, எப்போது பயன்படுத்தலாம்?
கோவிட்-19 சிக்கல்களை தவிர, இந்த ஆக்ஸிஜன் சிகிச்சை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படலாம். இது குறித்து நிபுணர்கள் கூறியுள்ளதாவது: 92 அல்லது 94 என்ற அளவில் ஆக்சிஜன் செறிவு உள்ள நபர்களுக்கு, செறிவூட்டலைப் பராமரிக்க அதிக ஆக்ஸிஜனை எடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் செறிவு 95-க்கு மேல் இருந்தால், நீங்கள் ஆக்ஸிஜனை எடுக்க தேவையில்லை. இது 94க்கும் குறைவாக இருந்தால் நெருக்கமான கண்காணிப்பு தேவை. ஆனால் ஆக்ஸிஜன் தேவை இல்லை, ஏனென்றால் நோயாளி ஆரோக்கியமாக இருக்க இந்த ஆக்ஸிஜன் அளவு ரத்தத்தில் இருந்தால் போதுமானது.
ரத்த ஆக்ஸிஜன் அளவு 93%க்கும் குறைவாக இருக்கும் மக்களுக்கு, அவர்கள் தங்களுக்கு ஆக்ஸிஜன் செறிவுகளை ஏற்பாடு செய்ய ஆரம்பிக்கலாம் மற்றும் வீட்டிலேயே சிகிச்சையைத் தொடங்கலாம். இருப்பினும், 90-94 க்கு இடையில் ஆக்ஸிஜன் செறிவு அளவைக் கொண்ட லேசான அல்லது மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மட்டுமே ஆக்ஸிஜன் செறிவூட்டியை சார்ந்து இருக்க வேண்டும், அதை வீட்டிலேயே பயன்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். SpO2 நிலை 80-85 க்குக் கீழே இருப்பவர்களுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படலாம் என்று கூறியுள்ளனர்.
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கான்சன்ட்ரேட்டர்ஸ் வேறுபாடு என்ன.?
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அவற்றில் நிரப்பப்பட்டுள்ள அளவு ஆக்ஸிஜனை மட்டுமே கொண்டிருக்கும், தீர்ந்து விட்டால் வேறு ஆக்சிஜன் சிலிண்டரை மாற்ற வேண்டும். ஆனால் ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் அப்படி இல்லை. இது ஒரு ஏசி மெஷின் போல செயல்படுகிறது. இது சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, அதை சுத்திகரித்து, மருத்துவ ஆக்ஸிஜனாக வழங்குகிறது. கான்சன்ட்ரேட்டர்ஸை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும், ஒவ்வொரு முறையும் மீண்டும் நிரப்ப தேவையில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oxygen, Oxygen concentrator, Oxygen cylinder