Corona Variants Explainer | டெல்டா, டெல்டா பிளஸ், எப்சிலான், லாம்ப்டா- கொரோனா உருமாறிய வைரஸ் வகைகளின் தாக்கம் என்ன?

மாதிரிப் படம்

கொரோனா வைரஸ் உலகம் முழுதும் 19 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 871 பேரை இதுவரை பாதித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 41 லட்சத்து ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 6,24, 715 பேரும் இந்தியாவில் 4,13, 640 பேரும், பிரேசிலில் 5,41,323 பேரும் ரஷ்யாவில் 148,419 பேரும் கொரோனாவுக்கு இதுவரை பலியாகியுள்ளனர்.

  • Share this:
    கொரோனா வைரஸ் உருமாறிக்கொண்டே தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டது, ஒருவரிடத்திலிருந்து இன்னொருவருக்குப் பரவும் போது அது வேறொன்றாக மாறி விடும் தன்மை கொண்டுள்ளது. இந்தியாவைப் புரட்டிப் போட்டது டெல்டா ரகம், இப்போது டெல்டா பிளஸ், எப்சிலான், லாம்ப்டா, கப்பா என்று பெயரிடப்பட்டு உருமாறிய வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருகிறது.

    உலகச் சுகாதார அமைப்பு உலகம் நெடுகும் தயாரிக்கப்படும் வாக்சின்கள் இந்த மாறுபாடடைந்த கொரோனா வகைகளைக் கட்டுப்படுத்துமா என்பதை கண்காணித்து வருகின்றனர். இதை “variant of interest,மற்றும் “variant of concern,” என்று இரண்டாகப் பார்க்கின்றனர், முதலாம் வகை பொருத்திருந்து பார்க்கக் கூடிய வகை. இரண்டாவது பெருந்தொற்றாக, அதிவேகமாகப் பரவக்கூடியது என்று இரு தரமாகப் பிரித்துள்ளனர்.

    டெல்டா வேரியண்ட் என்றால் என்ன?

    டெல்டா வேரியண்ட் என்று பெயரிடப்பட்ட B.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வெகு எளிதாக தொற்றி மிக வேகமாகப் பரவக்கூடியது. ஸ்பைக் புரோட்டீனில் இது உருமாற்றம் பெறுகிறது. இதனால் மனித செல்களை எளிதாக தொற்றுகிறது. அதாவது இதை ஒருவர் மிக எளிதாக தொற்றி கொள்ள முடியும் அதே போல் மிக வேகமாக அடுத்தவர்களுக்குப் பரப்பவும் முடியும். இதுதான் இப்போது அமெரிக்காவில் பெரும்பாலும் காணப்படுவதாகும்.

    coronavirus paramedical
    கொரோனா வைரஸ்


    ஆய்வாளர்கள் கூறுவதென்னவெனில் ஆல்பா கொரோனா வைரஸை விட டெல்டா வகை மிக வேகமாகப் பரவக்கூடியது என்பதே. வாஷிங்டன் போஸ்ட் செய்திகளின் படி முதன் முதலில் ஆல்பா வைரஸ் இங்கிலாந்தில்தான் பரவியது. B.1.1.7 என்று அறியப்படும் ஆல்பா வகை கொரோனா முதன் முதலில் சீனா வூகானிலிருந்து பரவிய கொரோனாவைரஸைக் காட்டிலும் 50% கூடுதலாக பரவக் கூடியது.

    டெல்டா வைரஸ் ஒருவருக்கு தொற்றினால் இவரிடமிருந்து குறைந்தது 3 அல்லது 4 பேருக்குப் பரவும் என்று நிபுணர்கள் அறுதியிட்டுள்ளனர். முதலில் தொற்றத் தொடங்கிய கொரோனா ஒன்று அல்லது இருவருக்கு பரவும் ஆனால் டெல்டா 3-4 பேருக்கு பரவக்கூடியது. இந்த டெல்டா வேரியண்ட் தடுப்பூசிகளையும் மீறி தொற்றக்கூடியது என்கின்றனர் ஆய்வாளர்கள், ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    டெல்டா பிளஸ் என்றால் என்ன?

    கொரோனா வைரஸின் இன்னொரு உருமாறிய வகையான B.1.617.2.1 அல்லது AY.1 என்பது டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. இது டெல்டாவிலிருந்து மாறுபாடு அடைந்ததால் இது டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நுரையீரல் செல்களை தாக்கக் கூடியது, நேரடியாக நோய் அறிகுறிகள் இல்லாமல் நுரையீரலுக்குள் ஊடுருவக்கூடியது. வாக்சின்களுக்கும் பெப்பே காட்டுவதாகும். இது முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிறகு இது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



    டெல்டா வகை எங்கிருந்து வந்தது?

    டெல்டா வகை முதன் முதலில் இந்தியாவில் டிசம்பர் 2020-ல் கண்டறியப்பட்டது. இதுதான் இந்தியாவின் பெருந்தொற்று கடுமையாகப் பரவி பேரழிவுக்குக் காரணமான வேரியண்ட் ஆகும். இப்போது உலகச் சுகாதார அமைப்பின் கணக்குகளின்படி இப்போது இது 111 நாடுகளில் பரவியுள்ளது. பிறகு நடப்பு ஜூலை மாதத்தில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் பரவியுள்ளது. புதிதாக பரவும் கொரோனா வைரஸில் 97% டெல்டா வைரஸ்தான்.

    டெல்டா வகை வைரஸ் அறிகுறிகள் என்ன?

    கொரோனா முதன் முதலில் பரவத் தொடங்கிய போது என்ன அறிகுறிகள் சொல்லப்பட்டதோ, அதேதான் டெல்டாவுக்கும். தொடர்ச்சியான இருமல், தலைவலி, காய்ச்சல், தொண்டை கட்டு ஆகியவை. ஆனால் இங்கிலாந்தில் டெல்டா பாதித்த நோயாளிகள் சிலர் வேறு சில நோய் அறிகுறிகளையும் கூறினர். இதன் படி இருமல், வாசனை, ருசி போவது என்பது அவ்வளவாக இல்லாமல் தலைவலி, மூக்கு ஒழுகுதல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் பிரதான நோய் அறிகுறிகளாகக் கூறப்பட்டது.



    இது வரை பரவிய கொரோனா வகைகளில் டெல்டா மிகவும் ஆபத்தானதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. டெல்டா வைரஸால் தான் அதிகம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் சிகிச்சை பலனின்றி இறப்பதும் நடந்துள்ளது. குறிப்பாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களே அதிகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மரணமும் அதிகம் ஏற்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை டெல்டா வகை அதிகம் தாக்கியுள்ளது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை தாக்கினாலும் பெரிய அளவில் இல்லாமல் மிதமான தாக்கமாகவே இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    எப்சிலான் வகை உருமாறிய கொரோனா:

    உருமாறிய கொரோனாவின் இன்னொரு வகை எப்சிலான் என்று அழைக்கப்படுகிறது இது B.1.427/B.1.429 என்று பெயரிடப்பட்டுள்ளது, முதன் முதலில் தெற்கு கலிபோர்னியாவில் இது பரவியது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஸ்பைக் புரோட்டீனில் எப்சிலான் 3 உருமாற்றங்களை அடைந்துள்ளது. ஸ்பைக் கிளைக்கோ புரோட்டீன் மூலம் செல்களைத் தாக்குகிறது. இது கோவிட் சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை மீறும் வைரஸ் வகையாகும். இந்த எப்சிலான் வகை 30 நாடுகளில் பரவியுள்ளது. இது மற்ற வகைகளை காட்டிலும் 20% கூடுதலாகப் பரவக்கூடியது. ஆனால் இது கவலையளிக்கக் கூடிய வகையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவில் உள்ளது. இதுவரை 52,000 பேருக்கு இது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    லாம்ப்டா வேரியண்ட்:

    லாம்ப்டா வேரியண்ட் கொரோனா வகை C.37 என்று அழைக்கப்படுகிறது முதன் முதலில் இது பெரூ நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2020-ல் டெல்டாவுக்கு முந்தியே இது பரவியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தென் அமெரிக்கா முழுதும் பரவியது. லாம்ப்டாவும் பலவகைகளில் உருமாறியதுதான், மற்ற வைரஸ் வகைககள் போலவே அதிகமாகத் தொற்றக்கூடியது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிய இன்னும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் 1%க்கும் கீழ்தான் இது பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
    Published by:Muthukumar
    First published: