• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

தடுப்பூசி

தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்ற உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா.

  • Share this:
கொரோனா என்னும் பெருந்தொற்று மீண்டும் நம்மை பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தவர்களை மீண்டும் வீட்டிற்குள் அடைத்துவிட்டது. இருப்பினும் இந்த சமயத்தில் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தடுப்பூசி. தடுப்பூசிதான் இந்த கொடிய வைரஸிடமிருந்து நம்மை பாதுகாக்கப்போகிறது.

இதை அரசு ’தடுப்பூசி திருவிழா’ என பாசிடிவாக விழிப்புணர்வு செய்து அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்கிறது. ஏனெனில் நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்தால்தான் இந்த கொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்க முடியும். மக்களை காப்பாற்ற முடியும். ஆனால் மக்களோ இதை போடலாமா வேண்டாமா என பல கேள்விகளை மனதில் வைத்துக்கொண்டு குழப்பத்தில் உள்ளனர். அப்படி பொதுவாக மக்களுக்கு எழும் கேள்விகளை மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவிடம் முன் வைத்ததில், விளக்கங்கள் உங்களுக்காக....

1) தடுப்பூசி ஏன் போட வேண்டும்..? அதன் முக்கியத்துவம் என்ன..?

நோயிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் தடுப்பூசி அவசியம் தேவை. குறிப்பாக இந்த கொரோனா என்னும் கொடிய நோயை கட்டுப்படுத்த வேண்டுமெனில் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். இல்லையெனில் இந்த பாண்டமிக் சூழல் நீடித்துக்கொண்டேதான் இருக்கும்.



2) தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் எந்த மாதிரியான பக்கவிளைவுகள் இருக்கும்..? சிறிய அளவிலான பக்க விளைவுகளுக்கு என்ன செய்ய வேண்டும்..?

தடுப்பூசி போட்ட 72 மணி நேரத்திற்கு காய்ச்சல், தலைவலி, உடல் அசதி வரலாம். சிலருக்கு வாந்தி கூட வரலாம். இது அனைத்தும் சாதாரண  பக்கவிளைவுகள்தான். இவற்றிற்கு காய்ச்சல் மாத்திரைகள் உட்கொண்டாலே போதுமானது. இதை மருத்துவரே பரிந்துரைப்பார். ஊசி போட்ட இடத்தில் அரிப்பு, வலி, தடிப்பு போன்ற சரும அலர்ஜியும் சிலருக்கு வரலாம். இதுவும் சாதாரண பக்கவிளைவுகள்தான்.

3) எந்த மாதிரியான பக்கவிளைவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்? எந்த பக்க விளைவுக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்..?

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் அதைக் கண்டு பயப்பட வேண்டாம். அவை அதிகபட்சமாக 3 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். மாறாக அறிகுறிகள் நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இருந்தாலோ அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தாலோ மருத்துவமனையை அணுகலாம். இரத்தம் உறையும் பிரச்னைகள் வருவதாக வெளிநாடுகளில் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இந்தியாவில் இல்லை. அப்படி வந்தாலும் மருத்துவர்கள் அதற்கு உரிய சிகிச்சைகளை அளித்து சரி செய்துவிடுவார்கள்.

4) யார் யார் எந்தெந்த வகை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..? எந்தெந்த வயதினர் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்..?

கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டுமே ஒரே வீரியம் கொண்ட தடுப்பூசிகள்தான். எனவே அவற்றில் எது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இப்போது அரசாங்கத்தின் அனுமதி படி 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போடப்படுகிறது. முன் களப்பணியாளர்கள் அனைத்து வயதினரும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இவர்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தினருக்கும், சுற்றத்தாருக்கும் நல்லது.

5) கொரோனா டெஸ்ட் எடுக்காமலே, சளி, காய்ச்சல் இருந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..?

சளி , காய்ச்சல் இருந்தால் கட்டாயம் டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பாசிடிவ் என வந்தால் ஒரு மாதம் கழித்துதான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எந்த அறிகுறியும் இல்லை, ஆரோக்கியமாக இருக்கிறேன் என்போர் டெஸ்ட் செய்துகொள்ளாமலே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.



6 ) வயதானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை உறுதிபடுத்த வேண்டுமா..?

நிச்சயமாக உறுதி செய்துகொள்வது நல்லது. காரணம் சிலருக்கு ஊசி போடும்போது அல்லது போட்ட பிறகு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உயரலாம். எனவே முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்துகொண்டு போடுவது நல்லது. ஏற்கெனவே அதிகமாக இருக்கும்போது ஊசி போட்டால் ஆபத்தாகிவிடும்.

7 ) தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் ஓய்வு அவசியமா..? எத்தனை நாள் ஓய்வில் இருக்க வேண்டும்..?

ஓய்வு கட்டாயம் அவசியமில்லை. எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்றால் வழக்கம்போல் செயல்படலாம். ஆனால் மூன்று நாட்களுக்கு மட்டும் அதிக அழுத்தம் தரும் வேலைகள் செய்வது, நீண்ட பயணம் மேற்கொள்வது, கடின உழைப்பு, வெளிப்புற உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி, காய்ச்சல் இருந்தால் 2 நாட்களாவது ஓய்வு எடுப்பது நல்லது.

8 ) இதய பாதிப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்ற மற்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்போர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..?

நோய்க்காக அதிக மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர், சிகிச்சை பெற்று வருவோர் மருத்துவரின் பரிந்துரையைக் கேட்ட பின் ஊசி போட்டுக்கொள்வது நல்லது. அதேபோல் அந்த நோய்க்காக அவர்கள் போட்டுக்கொள்ளும் மாத்திரைகளால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.



9 ) கர்ப்பிணிகள் , பால் கொடுக்கும் பெண்கள், குழந்தையின்மைக்காக சிகிச்சை பெறுவோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..?

கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம். குழந்தையின்மைக்காக சிகிச்சை பெறுவோர் சிகிச்சையின் தன்மையைப் பொருத்து மருத்துவரின் அனுமதியை பெற்று போட்டுக்கொள்ளலாம். கருத்தரிக்கும் சூழலில் இருக்கிறார்கள் எனில் போட்டுக்கொள்ள வேண்டாம். கருத்தரிக்க 1 மாதம், 2 மாதம் ஆகலாம். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறேன் எனில் ஊசி போட்டுக்கொள்ளலாம். எனவே மருத்துவரை கேட்டுக்கொண்டு போடுவது நல்லது.

படிக்க: கோவிட்-19 : கோவாக்சின் Vs கோவிஷீல்ட் எது சிறந்தது? தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் உண்டாகுமா?

10 ) திருமணமாகாத பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் திருமணத்திற்குப் பின் குழந்தை பிறப்பில் பிரச்னை வரும் என்று வதந்தி வருகிறதே..?

இது முற்றிலும் வதந்தி... தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போடப்படுகிறது. அதற்கும் கருப்பைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

11 ) தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பும் கொரோனா வருமா..? அதன் தீவிரம் எப்படி இருக்கும்..?

வரும், வராமலும் போகலாம். ஆனால் அப்படி வந்தால் தீவிரமாக இருக்காது. இறந்து போகக்கூடிய வாய்ப்பு இல்லை. இதுவரை ஊசி போட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வந்து இறந்ததாக எந்த வழக்கும் பதிவாகவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வரும் ஆனால் இறப்பு இருக்காது.

Corona Vaccine, Covaxin, Covishield

12 ) தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்..?

அதிக நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். உடனே செரிமாணிக்கக் கூடிய உணவுகள், காய்கறி, பழங்கள் சாப்பிடலாம். வெளிப்புற ஹோட்டல் உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், எண்ணெயில் பொறித்த உணவுகள், காரமான உணவுகளை 3 நாட்களுக்கு தவிர்த்தல் நல்லது.

13) தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் மது, சிகரெட் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டுமா..?

மதுவை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிகரெட் தவிர்க்கலாமா என இதுவரை அறிவிப்பு வரவில்லை. ஆனால் என்னை பொருத்தவரை சிகரெட்டையும் 3 அல்லது 5 நாட்கள் தவிர்ப்பது நல்லது. மது, சிகரெட் இரண்டையும் தடுப்பூசி போடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பும் பின்பும் தவிர்க்க வேண்டும்.

14) தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மற்ற சிகிச்சைகளுக்கான மாத்திரை அல்லது தலைவலி, வயிற்று வலி போன்ற தற்காலிக உபாதைகளுக்கான மாத்திரைகள் போட்டுக்கொள்ளலாமா..?

நீங்கள் மற்ற நோய்களுக்காக தினமும் சாப்பிடும் மாத்திரைகளை எப்போதும்போல் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தற்காலிக உபாதைகளுக்காக மெடிக்கல் சென்று நீங்களாகவே மாத்திரை வாங்கி போட்டுக்கொள்வதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். அப்படி எந்த மாத்திரைகளை எடுப்பதாக இருந்தாலும் மருத்துவரிடம் கேட்டுக்கொண்ட பிறகு போட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில் அவை வேறு ஏதேனும் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.



15) ஆயுர்வேதா, சித்தா, அக்குபஞ்சர் , ஒமியோபதி போன்ற மற்ற மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..? இதனால் பக்கவிளைவுகள் வராதா..?

தாராளமாக போட்டுக்கொள்ளலாம். இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது நல்லது.

16) தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தைரியமாக வெளியே செல்லலாமா..? தடுப்பூசிக்கு முன் இருந்த அதே பாதுகாப்பு அவசியமா?

அலுவலக வேலை, வீட்டு வேலைகளுக்காக செல்லலாம். ஆனால் எப்போதும்போல் நீண்ட பயணத்தை தவிர்ப்பது நல்லது. கொரோனா தீவிர நிலையில் இருப்பதால் நம்மையும், குடும்பத்தையும் பாதுகாப்பது அவசியம். அதோடு கொரோனா பரவலை குறைக்கவும் உதவும். அதேபோல் தடுப்பூசி போட்ட பிறகும் மாஸ்க் , சானிடைசர் பயன்பாட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தடுப்பூசிதான் போட்டுக்கொண்டோமே என அலட்சியமாக இருக்க வேண்டாம். ஏனெனில் இன்னும் நிறைய பேர் தடுப்பூசி போடவில்லை என்பதால் கொரோனாவின் தீவிரம் அப்படியேதான் இருக்கும். அனைவரும் போட்ட பிறகுதான் நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

17 ) தடுப்பூசி போட வேண்டாம் என பயப்படுவோருக்கு நீங்கள் சொல்வது என்ன..?

தடுப்பூசியைக் கண்டு பயம் வேண்டாம். அதனால் எந்த பாதிப்பும் வராது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே தடுப்பூசி. எவ்வளவு சீக்கிரம் அனைவரும் தடுப்போசி போடுகிறோமோ அவ்வளவு சீக்கிரமாக இந்த பெருந்தொற்றிலிருந்து மீளலாம். அனைவரும் ஊசி போட்டுவிட்டால் வைரஸின் தீவிரம் குறைந்துவிடும். இதுவும் மற்ற வைரஸை போல் வீரியத்தை இழந்துவிடும். எதிர்கால சந்ததியை காப்பாற்றுவது நீங்கள் போடும் தடுப்பூசியில்தான் இருக்கிறது...எனவே வந்தந்திகளை நம்ப வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: