யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி... முழு விபரம்!

நகைக் கடன் தள்ளுபடி

நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலம் 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

  • Share this:
கூட்டுறவு  வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதேவேளையில், ஏழைகள் மட்டுமே பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு  பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்ததையடுத்து இது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்து வந்தது.

இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக்கூடியவர்களின் விவரங்களை தமிழக அரசு கடந்த மாதம் கோரியது. இதனால் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பயின் கடன் தள்ளுபடியின் குளறுபடி

இந்நிலையில்,  நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர்,  கடந்த  ஆட்சியில் பயர்கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஏற்கனவே ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி , எவ்வாறு 2 லட்சத்து 42 ஆயிரத்து 783 நபர்களுக்கு , 2 ஆயிரத்து 749 கோடியே 10 லட்சம் ரூபாய் தவறாக தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை விளக்கி பேசியதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: 5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


அதேபோன்ற தவறுகள் நகைக்கடன்களிலும் நடைபெற்றுள்ளது என்பதை அமைச்சர் விளக்கி பேசியதாகவும், எனவே, நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் தீவிரமாக மற்றும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தகுதிகளின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி

அதன்படி, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய முழு புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர், ”நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 பவனுக்கு உட்பட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறு வகையில் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்தார்.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு மருத்துவ உதவி... தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2021


51 விதமாக தகவல்கள் சேகரிப்பு 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “ நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன” என்று கூறினார்.

அவ்வாறு புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகைக் கடன்கள் வழங்கப்பட்டதிலும் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ நகைக் கடன் தள்ளுபடி செய்கையில் சரியான, தகுதியான ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவே 5 பவனுக்கும் குறைவாக நகைக் கடன் பெற்றவர்களில் சில தேர்வுகளில் தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை” என்று கருதப்படுவதாக குறிப்பிட்டார்.

யார் யாருக்கு தள்ளுபடி கிடையாது

இது தொடர்பாக மேலும் விளக்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “2021ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்க்ள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன் பெற்றவர்கள்; தவறாக AAY (அந்தியோதயா அன்ன யோஜன) குடும அட்டையைப் பெற்று அவற்றை பயன்படுத்தி நகைக் கடன் பெற்றவர்கள்; மற்றும் இதுபோன்ற மேலும் சில நேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய இயலாது” என்று அற்வித்துள்ளார்.

முறைகேட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை

இது குறித்த விவரமான வழிமுறைகளை கூட்டுறவுத் துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும் என்றும் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், “ நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் அறிக்கையில் அறிவுப்பு வெளிவந்தவுடன், முறையற்ற வகையில் தள்ளுபடி பெற வேண்டும் என்கிற தவறான நோக்கத்தோடு நகைக் கடன்களைப் பெற்றிருப்பதும், குறிப்பாக, சில மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்களின் மீது தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும்” என்று கூறினார்.

அரசுக்கு ரூ.6000 கோடி செலவு

தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பவனுக்கு உட்பட்டு நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்றும் இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Murugesh M
First published: