ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

இந்திய அரசியலமைப்பு தினம் 2021: வரலாறு மற்றும் முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு தினம் 2021: வரலாறு மற்றும் முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு இன்றோடு 72 ஆண்டுகள் ஆகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி (இன்று) இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

சுவாரஸ்யமாக அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது, சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க (ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது. பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட 2 ஆவண பிரதிகள் இருந்தன. அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின. இதனிடையே இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு இன்றோடு 72 ஆண்டுகள் ஆகிறது.

ஏன் கொண்டாடப்படுகிறது?

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும் நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும் போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை தொடந்து இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 19, 2015 அன்று, அரசிதழில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு, நவம்பர் 26-ம் தேதியை இந்திய அரசியலமைப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முக்கியத்துவம்..

மேலும் இந்திய அரசியலமைப்பு தினமானது அரசியலமைப்பின் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும், அம்பேத்கரின் லட்சியங்களையும் சிந்தனைகளையும் மக்களிடையே பரப்பவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக இந்த நாள் இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பின் படி, இந்தியா ஒரு இறையாண்மை, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடாகும்.

Also read... INSAS துப்பாக்கி வகைக்கு பதிலாக புதிய ரக AK-203 துப்பாக்கிகளை பயன்படுத்த மத்திய அரசு முடிவு

நாட்டு குடிமக்களுக்கான நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறது. இதனிடையே அரசியலமைப்பின் சித்தாந்தத்தை நிலைநிறுத்த மற்றும் கடைப்பிடிக்க நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த அரசியலமைப்பின் முகவுரையை வாசிப்பது இந்நாளில் கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கிய பகுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by:Vinothini Aandisamy
First published: