Home /News /explainers /

திருப்புமுனை: அரசியல் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ‘பஞ்ச் டயலாக்’

திருப்புமுனை: அரசியல் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ‘பஞ்ச் டயலாக்’

Youtube Video

சினிமாக்களில் நாம் இன்று பார்க்கும் பஞ்ச் டயலாகுகளுக்கும், ஒன்லைனர்களுக்கும் நம் அரசியல்வாதிகள்தான் முன்னோடிகள் என்று சொல்லலாம்.

  தேர்தல்களத்தில் பிரசார உத்தியைப் போலவே சில முத்தாய்ப்பான முழக்கங்களாலும் மக்களின் மனங்களைத் தொட முடியும் என்பதை உணர்த்திய திருப்புமுனை தருணத்தை இப்போது பார்க்கலாம்.

  தமிழக அரசியல்வாதிகளின் நாவன்மையும், சொல்லாடல் திறனும் வேறு எந்த மாநிலத்தவருக்கும் கைவருமா என்பது சந்தேகமே.  சினிமாக்களில் நாம் இன்று பார்க்கும் பஞ்ச் டயலாகுகளுக்கும், ஒன்லைனர்களுக்கும் நம் அரசியல்வாதிகள்தான் முன்னோடிகள் என்றும் சொல்லலாம்.

  அந்தவகையில் 1984ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வைக்கப்பட்ட முழக்கங்கள், வித்தியாசமானவை… மக்கள் மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளக்கூடியவையாக இருந்தன. வழக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தினரிடம் இருந்துதான் இதுபோன்ற முழக்கங்கள் அதிக அளவில் எழுப்பப்படுவது வழக்கம்.

  ஆனால் இம்முறை இது வெளியானது எதிர்முகாமிலிருந்து. திமுக மற்றும் இந்திரா காங்கிரசிடம் இடையே இருந்த நெருக்கம் வெகுவாக குறைந்திருந்த சமயம். எம்ஜிஆருக்கு உடல் நலம் பாதித்தது. இப்போதைப்போல் சென்னை அப்போது ஒரு மருத்துவத் தலைநகராக உருவெடுத்திருக்க வில்லை. அதனால் எம்ஜிஆரின் சிகிச்சைக்கு ஆபத்பாந்தவனாக வழிகாட்ட வந்த பிரதமர் இந்திரா காந்தி. அமெரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில் சேர உதவினார். அவர் அங்கு சிகிச்சைக்கு சேர்ந்த சில நாள்களிலேயே பாதுகாவலர்களால் அக்டோபர் 31ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் பிரதமர் இந்திரா.

  ஆனால், இத்தகவல் எம்ஜிஆரின் உடல் நிலை கருதி அவருக்குத் தெரிவிக்கப் படவில்லை. சஞ்சய் காந்தி அகால மரணத்துக்குப் பிறகு அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகியிருந்தாலும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார் இந்திராவின் மூத்த புதல்வர் ராஜிவ் காந்தி. ஆனால் இந்திராவின் அகால மரணத்துக்குப்பிறகு முழுநேர அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் மக்களவை இரண்டுக்கும் தேர்தல் சேர்ந்தே டிசம்பர் 24ல் வந்தது. இந்திரா இருந்தபோது நிலவிய இணக்கத்தின் நீட்சியாக அதிமுக-வும், காங்கிரசும் கைகோர்த்தன. அதிமுக-வை பொருத்தவரை கட்சித் தலைவரே இல்லாத வித்தியாசமான, ஆபத்தான தேர்தலாக அது பார்க்கப்பட்டது.

  அந்த குறையைப்போக்க, அதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொண்டர்கள் நூதனமான பஞ்ச் முழக்கங்களை முன்வைத்தனர். இந்திரா காந்தி, பயங்கரவாதிகளின் குண்டுக்கு இரையான காரணத்தால் அவரது சாவுக்காக மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனக் கோரி சாவுக்கு ஒரு ஓட்டு என்றும், நோய்வாய்ப்பட்டு ப்ரூக்ளின் மருத்துவமனையில் படுத்திருந்த எம்ஜிஆரை குறிக்கும் வகையில் நோவுக்கு ஒரு ஓட்டு என பேரவை தேர்தலுக்கும் தொண்டர்கள் வாக்கு கோரினர். தமிழக தெருக்களிலும் சந்து முனைகளிலும் ‘சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு’ என முழங்கி, அனுதாப ஓட்டுகளை அள்ளினர்.

  மேலும் படிக்க... திருப்புமுனை: ஜெயலலிதா அரசியலில் உச்சம்தொட காரணம் இதுதான்..!

  இதுபோதாதென இந்திராவை பறிகொடுத்த ராஜிவ் காந்தியையும், பேசும் திறன் பாதிக்கப்பட்ட எம்ஜிஆரையும் குறிக்கும் வகையில், ‘தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு’ என தாய்க்குலங்களை கவரும் பஞ்ச் வசனங்களையும் பயன்படுத்தினர். உணர்ச்சிப்பூர்வமான தமிழக மக்களுக்கு சொல்லவா வேண்டும். கைச்சின்னத்துக்கும், இரட்டை இலைக்கும் மாற்றி மாற்றி ஓட்டுக்களைக் குத்தி வெற்றிபெற வைத்தது வரலாறு. அனுதாப அலையை உருவாக்கித் தந்த அந்த இரு வாசகங்கள் தேர்தலில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Politics, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி