Explainer - மேற்கு வங்கத்தில் சட்டமன்ற மேலவையை அமைக்க ஒப்புதல் அளித்த மம்தா - மத்திய அரசு ஒத்துழைக்குமா?

மம்தா பானர்ஜி

மேற்குவங்க அரசின் சமீபத்திய ஒப்புதலை தொடர்ந்து புதிய சட்டமன்ற சபை அமைக்கப்பட்டதும், சட்டமன்றத்தின் இரு அவைகளை கொண்ட ஏழாவது இந்திய மாநிலமாக மேற்கு வங்கம் மாறும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்த வார துவக்கத்தில் மேற்கு வங்கத்தில் புதிய சட்டமன்ற சபை (சட்ட மேலவை) அமைக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின் போது மே 17 அன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற மேலவை உள்ளது. மேற்குவங்க அரசின் சமீபத்திய ஒப்புதலை தொடர்ந்து புதிய சட்டமன்ற சபை அமைக்கப்பட்டதும், சட்டமன்றத்தின் இரு அவைகளை கொண்ட ஏழாவது இந்திய மாநிலமாக மேற்கு வங்கம் மாறும். சட்டமன்ற மேலவை என்பது கிட்டத்தட்ட ராஜ்யசபா போன்றதே. 3 எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு மேலவை உறுப்பினர் என்பது தோராயமான கணக்கு.

இந்திய அரசியலமைப்பின் 169-வது பிரிவின்படி, குறிப்பிட்ட மாநிலத்தின் சட்டமன்றம் ஒரு சிறப்பு பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், ஒரு மாநிலத்தின் மாநில சட்டமன்ற மேலவையை உருவாக்க அல்லது ரத்து செய்ய முடியும். பொதுவாக மேலவை தன்னிச்சையாகச் சட்டங்களை இயற்றும் உரிமை பெற்றிருக்கவில்லை. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே உண்டு. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படுமெனில் கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மேற்கு வங்கத்தின் சட்டமன்ற மேலவை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரி கட்சிகளின் கூட்டணி அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதை அடுத்தே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டமன்றத்திற்கு மற்றொரு சபையை அமைப்பது மாநில அரசின் கைகளில் இல்லை. இதற்காக மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். எனவே ஏற்கனவே மத்திய மற்றும் மம்தா அரசுக்கு பல மோதல்கள் இருக்கும் நிலையில் சட்டமன்ற மேலவை அமைக்கப்படும் விவகாரம், மேற்குவங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே புதிய கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற மேலவையை உருவாக்க தேவையான விதிகளை விரைவாக உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மம்தா வலியுறுத்தி உள்ளார். இந்த செயல்முறையை விரைவில் முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்குமாறு நாடாளுமன்ற விவகாரத் துறையையும் அவர் கோரியுள்ளார். மேல் சபை அமைக்கப்பட்டதும், அது சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படாதவர்களுக்கு அல்லது சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறாத சில தலைவர்களுக்கு இடமளிக்க இது வழி வகுக்கும்.

Also read... மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதத்துடன் கோமியமும் அனுப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.

மேலவை வரலாறு:

இந்தியாவில் நீண்ட வரலாற்றை கொண்டவை மேலவை மற்றும் கீழவை என்று 2 அவைகளை கொண்ட சட்டமன்றங்கள். முதலில் பிரிட்டிஷ் கவர்னர்களுக்கு ஆலோசனை கூறும் சபையாக தான் சட்ட மேலவை உருவானது. மாண்டகு-செல்ம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள் 1919-ஆம் ஆண்டில் தேசிய அளவில் மாநில கவுன்சில் உருவாக்க வழிவகுத்தன. எனினும் அரசியலமைப்பை உருவாக்கும் போது, மாநிலங்களில் மேலவை இருப்பதில் அரசியலமைப்பு சபையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் 1935-ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் இந்திய மாகாணங்களில் இரு சட்டமன்றங்களை அமைத்தது. இந்தச் சட்டத்தின் கீழ் தான் 1937-ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் ஒரு சட்டமன்றம் முதன்முதலில் செயல்படத் தொடங்கியது.

ஒரு மேல் சபையானது அவசரகால சட்டத்தை சரிபார்க்க செயல்படுகிறது மற்றும் சட்டமன்றங்களில் மாறுபட்ட குரல்களைக் கொண்டுவருகிறது. விதிமுறைப்படி, ஒரு மாநில சட்டமன்ற இரண்டாவது அவையை உருவாக்க அல்லது கலைக்க , மாநில சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இது சபையின் பலத்தின் பெரும்பகுதியால் ஆதரிக்கப்பட வேண்டும். இதனிடையே பீகாரை சேர்ந்த பேராசிரியர் கே டி ஷா மேலவை பற்றி கருத்து தெரிவிக்கையில், " உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் மற்றும் இன்சிடென்டல் சார்ஜ் உள்ளிட்டவை காரணமாக பொதுக்கருவூலத்தில் இருந்து கணிசமான செலவினம் இதற்காக ஆகும்.

மேலவை என்பது கட்சி தலைவர்களுக்கு அதிக ஆதரவை பெற்று தர, தேவையான சட்டத்தைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த மட்டுமே உதவுகிறது" என்று கூறி உள்ளார். துவக்கத்தில் அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் பீகார், பம்பாய், மெட்ராஸ், பஞ்சாப் மாகாணங்கள் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்டவை மேலவை சட்டமன்றக் குழுவைக் கொண்டிருக்குமாறு செய்தனர். பின் அவர்கள் தங்கள் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஏற்கனவே இருக்கும் இரண்டாவது அவையை கலைக்க அல்லது புதிய அவையை அமைப்பதற்கான விருப்பத்தை மாநிலங்களுக்கு வழங்கினர்.

மேற்கு வங்க கவுன்சில் கலைக்கப்பட்டது ஏன்?

மேற்கு வங்க சட்டமேலவை 1969 வரை இருந்தது. ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த சபையில் நடந்த நிகழ்வுகள் அதை கலைக்க வழிவகுத்தது. 1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் பல மாநிலங்களில் காங்கிரஸ் அதிகாரத்தை இழக்க வழிவகுத்தது. மேற்கு வங்கத்தில், 14 கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய முன்னணி, ஆட்சி அமைத்தது. முதல்வர் அஜோய் குமார் முகர்ஜி துணை முதல்வராக ஜோதி பாசுவுடன் அரசாங்கத்தை வழிநடத்தினார். ஆனால் இந்த கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஆளுநர் தரம் விரா இந்த அரசை பதவி நீக்கினார். முன்னதாக முதல்வராக இருந்த எம்.எல்.ஏ.வான பி சி கோஷ் மீண்டும் காங்கிரஸின் ஆதரவோடு பதவியேற்றார். மேற்கு வங்க சட்டமன்ற இரு அவைகளில் வெவ்வேறு காட்சிகள் அரங்கேறின. சட்டமன்றத்தில், சபாநாயகர் ஆளுநரின் நடவடிக்கைகளை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறினார்.

ஆனால் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய மேலவை கோஷ் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானம் சட்டமன்றத்தை கலைக்க வழிவகுத்தது. 1969ல் இடை தேர்தல்களுக்குப் பிறகு, இரண்டாவது ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. இந்த ஆட்சி வந்ததும் முதல் வேலையாக மேற்குவங்கத்தில் இருந்த மேலவை கலைக்கப்பட்டது. அரசியலமைப்பின் 168-வது பிரிவு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு சட்ட அவையை உருவாக்க அல்லது ரத்து செய்ய சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அதற்கான தீர்மானத்தை மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும். பின் இது தொடர்பான ஒரு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும். மேற்கு வங்க சட்டமன்றம் இந்த தீர்மானத்தை மார்ச் 1969-இல் நிறைவேற்றியது, நான்கு மாதங்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தன. பஞ்சாப் இதே வழியை பின்பற்றியது, அந்த ஆண்டின் பிற்பகுதியில் அதன் சட்டமேலவையை ரத்து செய்தது.

பிற மாநில மேலவைகள்..

தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக தலைமையிலான அரசு 1986-ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவையை ரத்து செய்தது. ஆனால் மேலவையை அமைக்க திமுக முழுமுயற்சி எடுத்து வருகிறது. 2018 மத்திய பிரதேச தேர்தலிலும் காங்கிரஸ் இதே போன்ற வாக்குறுதியை அளித்தது. ஆந்திராவில், சட்டமன்ற மேலவை 1958-ல் அமைக்கப்பட்டது, பின் 1985-ல் கலைக்கப்பட்டு, 2007-ல் காங்கிரஸால் மீண்டும் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு, தெலுங்கு தேசம் கட்சி ஆதிக்கம் செலுத்திய சட்டமன்ற மேலவை மூன்று மூலதன மசோதாக்களை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு பரிந்துரைத்தது. இது ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்றத்தை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்தது.

2010-ல் அசாம் சட்டமன்றமும், 2012 ல் ராஜஸ்தான் சட்டமன்றமும் அந்தந்த மாநிலங்களில் சட்டமன்ற மேலவை அமைப்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்த இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. மேலும் ஆந்திர மாநில மேலவையை கலைப்பதற்கான மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. 2 காரணங்களுக்காக சட்டமன்ற மேலவை முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒன்று தேர்தல்களில் போட்டியிடாத கலைஞர்கள், விஞ்ஞானிகள் போன்ற நபர்களை அரசியலில் பங்களிக்க வைப்பதை உறுதிப்படுத்துகிறது. மற்றொன்று சட்டமன்றத்தால் எடுக்கப்படும் அவசர முடிவுகள் மீது ஒரு கண் வைத்திருக்க உதவுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: