Home /News /explainers /

திருப்புமுனை: ஜெயலலிதாவுக்கு காத்திருந்த முதல் சவால்... ஆளும்கட்சி ஆட்டம் கண்ட தேர்தல்...

திருப்புமுனை: ஜெயலலிதாவுக்கு காத்திருந்த முதல் சவால்... ஆளும்கட்சி ஆட்டம் கண்ட தேர்தல்...

Youtube Video

ஒரு அரசியல் கட்சிக்கு அதன் சின்னம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திய தருணம் குறித்து இப்போது பார்க்கலாம்.

  எம்,ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அவரது துணைவியார் ஜானகி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக ஆர். எம், வீரப்பன் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் துணை நின்றனர். மாறாக நெடுஞ்செழியன் எனும் சூப்பர் சீனியரை தவிர்த்து திருநாவுக்கரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பல இளம் நிர்வாகிகள் ஜெயலலிதா பின்னால் அணி வகுத்தனர். அதிக எம்எல்ஏ-களின் ஆதரவு இருந்ததால் ஜானகி 1988 ஜனவரியில் முதல்வராகி பெரும்பான்மை இல்லாததால் 24 நாள்களில் ஆட்சியை இழந்தார். அதைத் தொடர்ந்து அதிமுக-வின் சின்னமான இரட்டை இலைக்கு , ஜெயலலிதா அணி சொந்தம் கொண்டாடியது.

  இது தொடர்பான விசாரணை பல மாதங்கள் நடைபெற்றது. 1989 ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இரட்டை இலைச் சின்னம் இருதரப்புக்கும் கிடையாது என கூறி தேர்தல் ஆணையம் டிசம்பரில் முடக்கியதுடன் ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னத்தையும், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னத்தையும் ஒதுக்கியது.

  பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்துடன் கருப்பையா மூப்பனார் தலைமையில் காங்கிரஸை தனியாக களமிறக்கினார். மறுபுறம், 13 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் அமராத திமுக,...அதிமுக பிளவுபட்டிருந்ததால் நம்பிக்கையுடன் களமிறங்கியது. நான்கு முனை போட்டி நிவவிய சூழலில் 151 இடங்களில் திமுக வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

  இத்தேர்தலின் முடிவில் அதிமுக அணிகளுக்கு மக்கள் தெளிவான வழிகாட்டுதலைத் தந்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஜானகி அணிஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றிருந்தது. மறுபுறம், ஜெயலலிதா அணி, 27 தொகுதிகளில் வென்றிருந்தது ஜெயலலிதாதான் எம்ஜிஆரின் வாரிசு என அக்கட்சியின் பெரும்பாலான வாக்காளர்கள் சொல்லாமல் சொல்லியிருந்தனர். தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. அதிமுக தொண்டர்களின் மன ஓட்டத்தை அறிந்து கொண்ட ஜானகி, அரசியலுக்கு விடை தந்தார்.

  அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கான இணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு அணிகளும் பிப்ரவரியில் இணைந்தன. முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைந்த அதிமுக வசமானது. அதிமுக தொடங்கியபோது எம்ஜிஆருக்கு திண்டுக்கல் மக்களவை கொகுதி இடைத்தேர்தல் சவாலாக அமைந்தது. அதேபோல் ஜெயலலிதாவுக்கும் முதல் சவால் காத்திருந்தது.

  சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது சுயேச்சை வேட்பாளர்கள் உயிரிழந்ததால் நிறுத்தப்பட்ட மதுரை கிழக்கு மற்றும் திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன் அசுர பலத்தில் ஆட்சியைப் பிடித்திருந்த திமுக-வுடன் ஜெயலலிதா பலப்பரீட்சை நடத்த வேண்டியிருந்தது. மதுரை கிழக்கு தொகுதியில் எஸ்.ஆர். ராதாவும். மருங்காபுரியில் பொன்னுசாமியும் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டன. மதுரை கிழக்கில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் மருங்காபுரியில் திமுக-வும் போட்டியிட்டன. மார்ச்சில் நடைபெற்ற அத்தேர்தல் முடிவுகள் ஆளும் திமுக-வுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஆட்சியமைத்து 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஆளும் கூட்டணி இரு இடங்களிலும் தோல்வி கண்டது. காங்கிரஸ் கட்சி இரு தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்திருந்தது.

  மேலும் படிக்க... ஐடி சோதனையில் சிக்கிய 175 கோடி ரூபாய்.. கணக்கில் வராத வருவாய்.. சிக்கிய அரசு ஒப்பந்ததாரர்..

  இந்த தேர்தலின் முடிவுகள் இரட்டை இலை சின்னத்தின் வலிமையை உணர்த்துவதாகவும், அடுத்து வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் போக்கை படம்பிடித்துக் காட்டுவதாகவும் அமைந்தது, இதுபோதாதென அடுத்த சில மாதங்களிலேயே நடந்த 1989 மக்களவைத் தேர்தலில் 39-ல் 38 தொகுதிகளை அதிமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி பேரவைத் தேர்தலில் டெபாசிட்டை இழந்த காங்கிரஸ், அதிமுக-வின் பலத்தை அறிந்து அதனுடன் கூட்டணியை ஏற்படுத்தி 11 மக்களவை தொகுதிகளை வசப்படுத்தியது. 9 மாத காலங்களில் கிடைத்த இந்த இரு மிகப்பெரு வெற்றிகள் இழந்த செல்வாக்கை அதிமுக மீட்டெடுத்த திருப்புமுனை தருணங்களாக அமைந்தன என்றால் மிகையாகாது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Explainer, Jeyalalitha, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி