Home /News /explainers /

திருப்புமுனை: திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு நிகரான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

திருப்புமுனை: திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு நிகரான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Youtube Video

தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை சந்தித்தது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல். அது பற்றிய தொகுப்பை இப்போதும் பார்க்கலாம்.

    2009ம் ஆண்டில் நடைபெற்ற மதுரை திருமங்கலம் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு நிகராக தேர்தல் முறைகேடுகளில் மற்றொரு பரிமாணத்தை காட்டியது சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து மீண்ட ஜெயலலிதா 2015ம் ஆண்டில் ஆர்.கே.நகரில் வென்று மீண்டும் முதல்வரானார். பின் 2016ல் உயிரிழந்தபோது தொகுதி காலியானது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டார். ஓபிஎஸ் ஒதுங்கிய நிலையில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா சிறை சென்ற நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓ.பி.எஸ் அணி சார்பில் வடசென்னை மைந்தன் மதுசூதனன் களமிறக்கப்பட்டார். அதிமுக சார்பில் கட்சியில் மீண்டும் சேர்ந்து ஒரு மாதமே ஆகியிருந்த டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடினர்.

    அதனால் 1989ம் ஆண்டுக்குப் பிறகு இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் முடங்கியது. சசிகலா அணியினருக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும், ஓபிஎஸ் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரும் ஒதுக்கப்பட்டது. பின்னர் ஓபிஎஸ் தரப்புக்கு மின்கம்பமும், சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டன.

    ஆர்.கே. நகரில் தினகரனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் களமிறங்கினர். மறபுறும், மதுசூதனனுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் பிரசாரம் செய்தனர்.

    சில மாதம் முன்பு வரை தோளோடு தோள் நின்ற அதிமுக தொண்டர்கள் இரு பிரிவாய் பிரிந்து வாக்கு சேகரித்தனர். ஆர்.கே.நகரில் பணமும், பரிசுப் பொருள்களும் ஆறாய் ஓடுவதாக எதிர்க்கட்சிகள் பொருமின. தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் வருமான வரித்துறை திடீர் சோதனையில் அமைச்சர் விஜயபாஸகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. அதில் பணப்பட்டுவாடாவுக்கு ஆதாரம் இருப்பதாக அறிக்கை தரப்பட்டதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா புகாருக்காக தேர்தல் நிறுத்தப்பட்டது தமிழக தேர்தல் வரலாற்றில் கரும்புள்ளிபோல் ஆனது.

    இதனிடையே டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓபிஎஸ் அணியும் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றியது. மீண்டும் இடைத்தேர்தல் டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.

    மீண்டும் அதே களம். ஆனால் காட்சிகள் மாறின. எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் குழாமும், ஆர்.கே. நகர் தெருக்களில் களமறங்கியது. ஆனால் கடந்த முறை எதிர்த்த மதுசூதனனுக்காக.

    மேலும் படிக்க... திருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..

    டிடிவி தினகரன் குக்கர் சின்னத்துக்காக வாக்கு கோரினார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவுக்கான டோக்கன்களும், குக்கர்களும் வினியோகிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பணமழையில் நனைவதாக பத்திரிகைகள் எழுதின. இம்முறையும் தேர்தல் ரத்தாகுமோ எனும் அளவிற்கு புகார்கள் பறந்தன.

    எப்படியோ அரும்பாடுபட்டு தேர்தலை ஆணையம் நடத்தி முடித்தது. 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலைச் சின்னத்தை குக்கர் தோற்கடித்திருந்தது. இந்த எதிர்பாரா முடிவால் தேர்தல் பார்வையாளர்கள் விக்கித்துப் போயினர். மேலும் ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார் டி.டி.வி.தினகரன்.

    பணப்பட்டுவாடாவுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டதும் இடைத்தேர்தலில் முதல்முறையாக சுயேச்சை வேட்பாளர் வென்றதும் அதுவும் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி அளித்ததும் தேர்தலில் திருப்புமுனை தருணங்கள் என்றால் மிகையாகாது. அந்தத் தேர்தலில் தி.மு.க டெபாசிட் கூட பெறாமல் தோல்வியடைந்தது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: RK Nagar

    அடுத்த செய்தி