பல முறை முதல்வராக இருந்த மிகப்பெரிய ஆளுமையான மு. கருணாநிதியின் மகனாக இருந்தபோதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பதவியை மு,க.ஸ்டாலின் எளிதில் பெற்றுவிடவில்லை. 14 வயது முதலே அரசியலிலும் சமூகப் பணியிலும் தன்னை ஸ்டாலின் ஈடுபடுத்திக் கொண்டாலும், 1975-ல் நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தின்போது சிறை சென்று இன்னல் பலவற்றை எதிர்கொண்டாலும் அவருக்கு எவ்வித அங்கீகாரத்தையும் கட்சித் தலைவர் கருணாநிதி தந்துவிடவில்லை.
பின்னர், 1984-ல்தான் இளைரணி செயலாளர் என்ற குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியது. 1984ல் 30 வது வயதில்தான் அவருக்கு முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் களம் இறங்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் தோல்வி கண்டாலும் 1989ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு பேரவைக்குள் நுழைந்தார்.
1991-ல் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி. தொடர்ந்து கட்சிப் பணி என இருந்தார். 1996-ல் சட்டப்பேரவைக்குள் இரண்டாவது முறை நுழைந்தாலும், பஞ்சாயத்ராஜ் சட்டத்தில் திமுக அரசு திருத்தம் செய்த பின் முதல்முறையாக நடந்த நேரடி மேயர் பதவிக்கு தேர்தல் அவருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. ஆளுங்கட்சி வேட்பாளர் ஸ்டாலினுக்கு எதிராக ஜனதா கட்சியின் சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவை களமிறக்கினார். தனது வேட்பாளரை வாபஸ் பெற்று சந்திரலேகாவுக்கு ஆதரவளித்தார் ஜெயலலிதா. ஸ்டாலின், 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் வென்றார்.
சென்னையில் அப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம். அதற்கு தீர்வு காண ஸ்டாலின் முற்பட்டார். சென்னையில் ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா பல்கலைக்கழகம், எழும்பூர் என 10 இடங்களில் மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டது. இன்றளவும் ராயப்பேட்டை போன்ற நெரிசல் மிக்க பகுதிகளையும் கடக்க அப்பாலங்கள் உதவி வருகின்றன.
சிறுவயதில், ஸ்டாலினின் தொண்டைக்குள் ஒரு பின் சிக்கியபோது ரயில்வே கிராசிங்கில் காத்திருந்த வலியின் தாக்கமே மேம்பாலங்களில் ஸ்டாலின் ஆர்வம் காட்ட காரணம் என கருணாநிதி நகைச்சுவையாக கூறினாலும் உள்ளுக்குள் தந்தையாய் மகிழ்ச்சி கொண்டார். இதுதவிர 18 புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. மெரினாவில் சிங்கப்பூரை சேர்ந்த ஓனிக்ஸ் நிறவனத்தின் மூலம் நவீன சுத்திகரிப்பு முறைகள் அமலாகின. இவ்வாறாக பல திட்டங்களை செயல்படுத்தி தந்தை வைத்த டெஸ்டில் பாஸ் ஆனார் ஸ்டாலின்.
சிக்கல்களை ஏற்படுத்திய பெரம்பூர் மேம்பாலத்தையும் பின்னர் 2006 ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் கட்டி முடித்தார். பின்னாளில் உள்ளாட்சி அமைச்சர் மற்றும் துணை முதல்வர் போன்ற மிகப் பெரிய பொறுப்புகளை ஸ்டாலினுக்கு கருணாநிதி வழங்க காரணமாக அமைந்தது மேயர் பதவிக்காலம். அதன் காரணமாக கருணாநிதியும் ஸ்டாலினும் பின்னாளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தாலும், ஸ்டாலின் மேயரான தருணம் தருணம் தமிழக தேர்தல் வரலாற்றிலும், மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவராக விளங் கும் ஸ்டாலினின் வாழ்விலும் திருப்புமுனை தருணங்கள் என்றால் மிகையாகாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.