திருப்புமுனை: சென்னை மாகாணத்தின் முதல் தொங்கு சட்டசபையின் பின்னணி

Youtube Video

நாடு விடுதலை அடைந்த பின் 1951-52ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழக மற்றும் தென்மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் முதல் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

 • Share this:
  வடமாநிலங்கள் மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் தொங்கு சட்டசபை என்பது தொடர் நிகழ்வாக இருந்தாலும், தமிழக வாக்காளர்கள் பெரும்பாலான சமயங்களில் வெற்றியாளர்களை அறுதியிட்டு உறுதி செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் நாடு சுதந்திரமடைந்த பின் நடந்த முதல் பொதுத் தேர்தலில் முதல் முறையாக தமிழகத்தை உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணத்தில், தொங்கு சட்டசபை உருவானது. அப்போது, மெட்ராஸ் மாகாணம், தமிழ்நாடு, கேரளாவின் வடக்குப் பகுதியான மலபார், கர்நாடகாவில் மங்களூரு, பெல்லாரி பகுதிகள் மற்றும் தற்போதைய ஆந்திராவை உள்ளடக்கியதாக இருந்தது.

  1951-1952ல் நடந்த பொதுத் தேர்தலின்போது நாடு முழுவதும் வலுவான கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்தது. அடுத்த பெரிய கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் அவ்வளவு வலுவாக இல்லை, கம்யூனிஸ்ட் கட்சிக்கு திராவிடர் கழகம் ஆதரவளித்தது. அதே நேரத்தில், தேர்தலில் பங்கெடுக்காத திமுக, வன்னியர் சமுதாயத்தினர் நடத்திய உழைப்பாளர் கட்சி மற்றும் காமன் வீல் கட்சிகளுக்கு ஆதரவளித்தது. மறுபுறம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட, 1947 வரை மாகாண முதல்வராக இருந்த தெலுங்கரான பிரகாசம், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியை தொடங்கியிருந்தார். அவர் கட்சியில் இருந்து வெளியேறியது முதல் தனி ஆந்திரா முழக்கம் வலுவடைந்தது. பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தன. ஆனால் பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்தியிருந்த வடு மாறாத நிலையில் மாநில பிரிவினையை கூட பிரதமர் நேரு விரும்பவில்லை.

  தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. மொத்தத்தில், 375 தொகுதிகளில் 152ல் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாகாணத் தலைவர் காமராஜரின் ஆதரவாளர்களான முதல்வர் குமாரசாமி ராஜா மற்றும் பக்தவச்சலம் உள்ளிட்ட அமைச்சர்கள் தோல்வி கண்டனர். காங்கிரஸுக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் 62 இடங்களில் வென்றிருந்தது.

  மேலும் படிக்க...திருப்புமுனை: மாற்று அணியாக உருவான மக்கள் நலக்கூட்டணி

  எதிர்பார்த்ததைப் போலவே தனி ஆந்திரா விவகாரம் தேர்தலில் எதிரொலித்தது. காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரகாசம், தோல்வியடைந்தாலும் அவரது கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 35 இடங்களில் வென்றிருந்தது. எதிர்பார்த்தபடியே ஆந்திர பகுதியில் 143 இடங்களில் 100 இடங்களில் காங்கிரஸ் தோற்றிருந்தது. இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை பெற முடியாமல் போயிற்று. பல மாதங்கள் கழித்து தட்டுத் தடுமாறி காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோதிலும் நாடு முழுவதும் வென்றிருந்த அப்பேரியக்கம் சென்னை மாகாணத்தில் மட்டும் பெரும்பான்மை பெறாத அதிர்ச்சி நிகழ்வுக்கு ஆந்திர பிரிவினை கோரிக்கை முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: