Home /News /explainers /

திருப்புமுனை : அதிமுக ஆட்சியை பின்னாளில் பறித்த முன்னாள் வெற்றி அஸ்திரம்

திருப்புமுனை : அதிமுக ஆட்சியை பின்னாளில் பறித்த முன்னாள் வெற்றி அஸ்திரம்

திருப்புமுனை : அதிமுக ஆட்சியை பின்னாளில் பறித்த முன்னாள் வெற்றி அஸ்திரம்

எந்த ஊழல் விவகாரத்தை வைத்து 1977ல் அதிமுக ஆட்சியைப் பிடித்ததோ அதே அஸ்திரம் அதிமுக ஆட்சியை பின்னாளில் பறித்தது. அந்த திருப்புமுனை தருணத்தை இப்போது பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  1977ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக மீது அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ஊழல் புகார்களை அடுக்கின. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தமிழக தேர்தல் வரலாற்றில் ஊழல் விவகாரம் பிரதானமாக முன்வைக்கப்பட்ட பிரசார களமாக 1977 பேரவைத் தேர்தல் அமைந்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் முறையாக எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைத்தது.

  ஊழல் விவகாரத்தை பிரதானமாக வைத்து முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த அதிமுக அதே ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தோல்வி கண்டது. ஜெயலலிதா தலைமையில் அமைந்த முதல் ஆட்சிக்காலத்தின் முடிவில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய ஊழல் புகார்கள் ஏராளம். இருந்தபோதிலும் பெரும்பாலான மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1995ம் ஆண்டில் நடைபெற்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம்.

  சசிகலாவின் சகோதரி வனிதா மணியின் இளைய மகனை தத்தெடுத்த ஜெயலலிதா அவருக்கு நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியான சத்திய பிரியாவுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார். சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற அந்த திருமணம் நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடந்தது. எம்ஆர்சி நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு 75 ஆயிரம் சதுர அடி பரப்பில் பந்தல் அமைக்கப்பட்டது. மணவறை கான்கீரிட்டில் அமைக்கப்பட்டு அருகில் குளிர்சாதன வசதியுடன் கூடிய கழிவறைகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன.

  சென்னை நகரில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்குவதற்கு ஹோட்டல் அறைகள் பல லட்சம் ரூபாய் செலவில் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன. பல லட்சம் பேருக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. முக்கிய பிரமுகர்களுக்கு வெள்ளித் தட்டில் பட்டுப்புடவை, பட்டு வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் சகிதம் விலையுயர்ந்த அழைப்பிதழ்கள் தரப்பட்டன.

  மண விழாவுக்கு வருவோர் உணவருந்த தலா 25 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 10 பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. மண நிகழ்ச்சியில் சசிகலாவும் முதல்வர் ஜெயலலிதாவும் தங்க வைர நகைகளை அணிந்து காணப்பட்டனர். இந்த புகைப்படம் எதிர்க்கட்சிகளுக்கு பின்னாளில் பிரசார ஆயுதமாக மாறியது.

  இதனிடையே நடிகர் ரஜினிகாந்த். சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட ஏராளமானோருடன் ஜெயலலிதாவுக்கு மோதல் ஏற்பட்டு இருந்தது. 1996-ல் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் முடிவடைந்த போது அவர் மீதும் அமைச்சர்கள் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன.

  சட்டமன்ற தேர்தல் பிரசார களத்தில் அதிமுகவுக்கு எதிராக ஊழல் என்ற அஸ்திரத்தை எதிர்க்கட்சிகள் கூட்டாக பயன்படுத்தின.

  சுடுகாட்டுக் கூரை டெண்டர், ஊராட்சிகளுக்கு தொலைக்காட்சி வாங்கியது, டான்சி நிலத்தை ஜெயலிலதா வாங்கியது தொடர்பாக பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த போதிலும் வளர்ப்பு மகன் திருமணம் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் புதைந்து போயிருந்தது.

  அதைக்கணித்த எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணம் பற்றி மேடைதோறும் பேசினர். தேர்தலுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என காட்டமாக விமர்சித்திருந்தார்.

  இவ்வாறு பல தரப்பினரின் எதிர்ப்பையும் பெற்றிருந்ததால் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அதிமுகவுக்கு பாதகமாக அமைந்தது. அதிமுகவின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் சுதாகரனின் திருமணம் ஒரு மையப்புள்ளி போல் அமைந்ததை யாரும் மறுக்க முடியாது 1977ல் அதிமுக கையில் எடுத்த ஊழல் அஸ்திரம் அதற்கெதிராக 1996-ல் பூமராங் போல் திரும்பி ஆட்சியை பறித்து, தேர்தலில் திருப்புமுனையாக அமைந்தது.

  மேலும் படிக்க... திருப்புமுனை: ஜெயலலிதா அரசியலில் உச்சம்தொட காரணம் இதுதான்..!   

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: ADMK, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி