Explainer: கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு நாள் பலனளிக்கும்? ஏற்கனவே கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் போட்டு கொள்ளலாமா?

Explainer: கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு நாள் பலனளிக்கும்?  ஏற்கனவே கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் போட்டு கொள்ளலாமா?

மாதிரி படம்

தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உடைய நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவிட்-19 என்னும் கொரோனா பேரிடர் நம் நாட்டிற்குள் நுழைந்து ஓராண்டுகளை கடந்து விட்ட நிலையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் சமூகம் இன்னும் அச்சம் மற்றும் பாதுகாப்பற்ற தன்மையுடன் உள்ளது. நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உடைய நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் தடுப்பூசி குறித்து பல தவறான தகவல்கள் பரவின.

இதனால் பலர் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள தயங்கினர். மேலும் பலர் வைரஸைக் கையாள வினோதமான மற்றும் தவறான முறைகளை நாடுகின்றனர். கொரோனா தொற்று, தடுப்பூசி மற்றும் மக்களின் பல சந்தேகங்களுக்கு புதுவையிலுள்ள ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால் பதிலளித்துள்ளார். கேள்விகளையும் அதற்கு மருத்துவர் ராகேஷ் அகர்வால் அளித்துள்ள பதில்களும் கீழே உள்ளன.

ஒருவர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டு கொண்ட பின், அவரது உடலில் கோவிட்-19 ஆன்டிபாடிகள் உருவாக்கியுள்ளதா என்பதை சரிபார்க்க வழி இருக்கிறதா?

ஆம். இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது மற்றும் கோவிட் -19 தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2, வைரஸுக்கு எதிரான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்குகிறது. தடுப்பூசி போட்ட நபரின் ரத்தத்தை சோதிப்பதன் மூலம் ஆன்டிபாடிகள் உருவாகி இருப்பதை சரிபார்த்து கொள்ளலாம். எனினும் இந்த சோதனை கடினம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து எடுத்து கொள்ளும் பெரும்பாலானவர்களுக்கு ஆன்டிபாடிகள் தோன்றுவதால் இந்த சோதனை ஒரு வழக்கமாக பரிந்துரைக்கப்படவில்லை,

மேலும் கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்காத சிலர் கூட செல்லுலார் நோயெதிர்ப்பு வளர்ச்சியின் மூலம் கோவிட் -19 தொற்றுக்கு எதிரான சில சக்தியை பெறுகிறார்கள்.

தடுப்பூசியின் 2-வது டோஸுக்கு பின் ஒரு நபருக்கு எவ்வளவு நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்?

ஒருவர் தொற்றுக்கு எதிரான முதல் டோஸ் தடுப்பூசியை போட்டு கொண்ட சுமார் 15 நாட்களுக்குள், அவரது உடலில் ஒரு குறிப்பிட்ட அளவு நோயெதிர்ப்பு சக்தி உருவாகும். இருப்பினும் இது நீண்ட காலம் இருக்காது. 2-வது டோஸ் போடு கொண்ட பின்னர் ஆன்டிபாடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது. இரண்டாவது டோஸ் எடுத்ததில் இருந்து சுமார் 15 நாட்களில் இவை உச்சத்தை நெருங்கும்.

எவ்வளவு நாள் பலனளிக்கும் இந்த தடுப்பூசி?

ஒரு சில நோய்களுக்கான தடுப்பூசிகளில், சிலவற்றின் விளைவு காலப்போக்கில் குறையும். ஒரு சிலவை வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். எந்தவொரு தடுப்பூசியும் தரும் பாதுகாப்பு காலத்தை தடுப்பூசி போட்ட நபர்களைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே அறிய முடியும். அந்த வகையில் இந்த தடுப்பூசி இப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதால், அது உடலில் செயல்படும் பாதுகாப்பு காலத்தை நம்பத்தகுந்த வகையில் அறிய தற்போது வழியில்லை.

கோவிட் 19 தடுப்பூசி சோரியாசிஸ் போன்ற தன்னுடல் தாக்க நோய்களை மோசமடைய செய்யுமா?

இல்லை, ஏனென்றால் இந்த தடுப்பூசி குறிப்பாக கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 இன் புரதங்களுக்கு எதிராக வேலை செய்யும். உடலில் உள்ள பிற புரதங்களுக்கு எதிராக அல்ல. இதனால் தடுப்பூசி எடுத்து கொண்டால் தன்னுடல் தாக்க நோய்கள் அதிகரிக்காது. கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்கனவே உலகளவில் பல மில்லியன் மக்களுக்கும், இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை தன்னுடல் தாக்க நோய்களின் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் இல்லை.

Also read... Explainer: ஆன்லைன் ட்ரோலிங் செய்வோருக்கு எச்சரிக்கை...!

ஏற்கனவே கோவிட்-19 தாக்கிய ஒருவருக்கு இந்த தடுப்பூசி செலுத்தினால் என்ன ஆகும்?

ஏற்கனவே கோவிட் -19 தொற்றால் பாதிக்கபட்ட ஒருவர் தடுப்பூசி போட்டு கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. உண்மையில், அத்தகைய நபர்கள் மற்றவர்களைப் போலவே கோவிட் -19 தடுப்பு மருந்தை எடுக்கலாம். ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த அளவு ஆன்டிபாடிகளே இருக்கும். தடுப்பூசி மூலம் பாதுகாப்பு ஆன்டிபாடிகள் மற்றும் ரத்தத்தில் அதிக அளவு ஆன்டிபாடிகள் உருவாகும். இது அவர்களுக்கான கோவிட் -19 தொற்றின் இரண்டாவது தாக்குதல் அபாயத்தை மேலும் குறைக்கிறது.

கோவிட் -19 தைராய்டு சுரப்பியை பாதிக்குமா?

தற்போதைய நிலவரப்படி கோவிட் -19 தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் அல்லது ஹார்மோன்களின் சமநிலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அப்படி விளைவு ஏற்பட்டாலும் சிறிதாக இருக்க தான் வாய்ப்பு உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: