• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • Explainer : கருப்பு பூஞ்சை குழந்தைகளை பாதிக்குமா.? 3வது அலையால் ஏற்படப்போகும் பாதிப்பு என்ன?

Explainer : கருப்பு பூஞ்சை குழந்தைகளை பாதிக்குமா.? 3வது அலையால் ஏற்படப்போகும் பாதிப்பு என்ன?

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்கும் நிலையில் மூன்றாவது அலையும் வரலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி மூன்றாம் அலை வரும்போது குழந்தைகளை தாக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்றி கொரோனாவால் கருப்பு பூஞ்சையும் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளையும் தாக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன் விரிவான தகவலை தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். 

தடுப்பூசி இல்லாத நிலையில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தால், விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதுவரை பெற்றோர்களும், வீட்டில் இருக்கும் பெரியவர்களும் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை தவிர்ப்பதுடன், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.



குழந்தைகளுக்கு ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால்?

பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு, எரிச்சல் மற்றும் தொண்டை வலி, உடல் வலி, சோர்வு ஆகியவை தென்படும். பருவக் காயச்சலுக்கு இருக்கக்கூடிய அறிகுறிகள் என்றாலும் குடும்ப மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையின்பேரில் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் அவர்களை தனிமைப்படுத்தி 2 நாட்களுக்கு உடன் இருந்து பெற்றோர் பார்த்துக் கொள்ளலாம்

பெற்றோர் எப்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்?

குழந்தையின் உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றம் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீடித்த மற்றும் கடுமையான காய்ச்சல், சுவாச பிரச்சனை, சாப்பிடுவதில் சுணக்கம், வாந்தி, கடுமையான வயிற்று வலி, தலைவலி, கண்கள் சிவப்பு நிறத்தில் மாறுதல் மற்றும் வீங்குதல், உதடுகளில் மாற்றம், உடலில் தடிப்புகள் ஏற்படுதல் ஆகியவற்றை கண்டால், பெற்றோர் தாமதிக்காமல் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.



கருப்பு பூஞ்சை குழந்தைகளை பாதிக்குமா?

கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமிகோசிஸ் எனப்படும் அரிய பூஞ்சை, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க நபர்களை பாதிக்காது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களை மட்டுமே தாக்கும் சந்தர்பவாத பூஞ்சை தொற்று, பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளை மிகவும் அரிதாகவே தாக்குகிறது. கொரோனா தொற்றுக்குள்ளான நீரிழிவு நோயாளிகள் மற்றும் இணை நோய்களை உடையவர்கள், கண்மூடித்தனமாக ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களை மட்டுமே அதிகளவில் தாக்குகிறது. ஐ.சி.யூவில் இருக்கும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

வைரஸ் காற்றில் பரவுவதால் குழந்தைகளை வெளியே அனுப்பலாமா?

புதிய வழிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து வெளியாகும் சுவாசத் துளிகள் மூலம் 10 மீட்டர் வரை பரவுவதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும். மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். புதிய நபர்கள் இருக்கும் இடத்தில் மாஸ்க் இல்லாமல் குழந்தைகளை அனுப்பக் கூடாது. மாஸ்க் அணிவது மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றிவிடாது என்பதால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி தொலைவு இடைவெளி இருக்க வேண்டும்.



மேலும், மாஸ்க் அணிவது குறித்தும், எப்படி அணிய வேண்டும் என்பதையும் பெற்றோர்கள் தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். வாய், மூக்கு ஆகியவை முழுமையாக மூடி இருக்கும் வகையில் மாஸ்க் அணிய கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் நபர்கள் யாரேனும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், குழந்தைகள் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும். சோப்பு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 20 நொடிகள் வரை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்பதையும் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

CoronaVirus : கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்கு மிகவும் சவாலாக இருக்குமா..?

குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்?

12 வயதினருக்கு வரை கொரோனா தடுப்பூசிகள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பரிசோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் வந்தபிறகு அடுத்த 6 முதல் 8 மாதங்கள் கழித்து 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வரலாம். குழந்தைகளுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். சுவாச பாதை வழியாக கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் செல்வதால், அதனை தடுக்கும் வகையில் நாசில் வேக்சினையும் ஆய்வாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.



3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்குமா? காரணம் என்ன?

மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்பதற்கான எந்த சான்றுகளும் இல்லை. முதல் அலை கொரோனா வைரஸ் மூத்த குடிமக்கள் அதிகளவில் பாதித்தது. 2வது அலையில் இளம் வயதினர் அதிகளவு பாதிக்கப்பட்டனர். இருப்பினும், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் இளம் வயதினருக்கான பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் கீழானவர்கள் இதுவரை பெரிதாக பாதிக்கப்படவில்லை என்பதால், ஒருவேளை 3வது அலை கொரோனா வைரஸ் பரவினால் குழந்தைகளை அதிகளவு பாதிக்க வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.

தொற்றில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு வைரஸ் எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்கள் இருக்கும்?

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வைரஸூக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், சரியான கால வரையறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்?

சரிவிகித ஊட்டசத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும். புரதம் மற்றும் இரும்பு சத்து மிக்க உணவுகளையும், வைட்டமின்கள் நிறைந்த கூட்டு உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். நல்ல உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.



குழந்தைகளை வீட்டில் சமாளிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளை உற்சாகமாக வைத்திருக்கும் பொறுப்பு பெற்றோர்களிடம் உண்டு. அவர்களின் தனித்திறமை வளர்ப்பதற்கான சரியான நேரம் மற்றும் வீட்டு வேலைகளை கற்றுக்கொள்வதற்கான சூழலாக கொரோனா விடுமுறை உள்ளது. நாள்தோறும் செடிகளுக்கு தண்ணீர் விடுதல், வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். நடனம், பாடல், இசை, செஸ் உள்ளிட்டவற்றில் அவர்களின் தனித்திறமையையும் வளர்க்கலாம். பெற்றோர்கள் கூடுதல் சிரத்தை எடுக்கும்பட்சத்தில் இந்த கொரோனா விடுமுறையில் குழந்தைகள் தங்களுக்கான தனித்திறமையில் ஜொலிக்க வாய்ப்புகள் உள்ளன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: