ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கணபதி நகர் பகுதியில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரப்புரை மேற்கொண்டார்.
அதில் பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர், ராகுல் காந்தியின் அன்பை பெற்றவர் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு
முதல்முறையாக மக்களை சந்திக்க வந்திருக்கின்றேன். கலைஞரின் பேரன் பெரியாரின் பேரனுக்கு வாய்ப்பு கேட்டு வந்து இருக்கின்றேன். 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க வேண்டும்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக வேட்பாளரை ஓட்டு கேட்கவிடாமல் விரட்டியடிக்கின்றனர். இதை தொலைகாட்சியில் பார்க்க முடிகின்றது. அந்த விரக்தியில், இங்கு வந்தபோது ஆம்பளையா? என பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆம்பளையாக இருந்தால் மீசை இருக்க வேண்டும், வேட்டி கட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார். அவருக்கு மீசை இருக்குன்னு தெரியும். தலைமை செயலகத்தில் சிபிஜ சோதனை நடத்தியபோது, தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடத்திய போது அந்த மீசை என்ன செய்தது.
5, 6 நாள் சேவிங் பண்ணாமல் இருந்தால் மீசை வந்துவிடும். பெண்ணின் சம உரிமைக்கு போராடிய பெரியாரின் மண்ணில் இருந்து இதை பேசியிருக்கின்றீர்கள். நீங்கள் மக்களால் தேர்வு செய்யபட்டவரா? நீங்க எப்படி முதல்வரானீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்” என கூறினார்.
அதிமுக ஆட்சியில் அடிமையாக இருந்தவர்கள் இப்பவும் அடிமையாக இருக்கின்றனர். அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார். சட்டமன்றம் நிறைவேற்றிய 19 தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் கவர்னர் இருக்கின்றார். அவங்க பிரச்னைக்கு மோடிகிட்ட போனங்க. வேற மக்கள் பிரச்சினைக்கு போயிருக்காங்களா?
அதிமுக ஆட்சி போனவுடன் இருவரும் சண்டை போடுகின்றனர். தவறுதலாக என் வண்டியில் ஏற போயிட்டாங்க. அப்பவே கமலாலயத்துக்கு மட்டும் போயிடாதீங்க என சொன்னேன். இப்ப இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்துக்கு போயிட்டு இருக்காங்க. எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தை விட்டுவிட்டு குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்து இருக்கின்றார் இபிஎஸ்.
சசிகலாவை ஏமாற்றி, ஒ.பி.எஸ்-ஐ ஏமாற்றி, மக்களையும் ஏமாற்றி இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. மோடிக்கும் அமித்ஷாவிற்கும் மட்டுமே உண்மையாக இருக்கின்றீர்கள்.
ஆட்சி வந்த பின்பு அறிவித்த பணிகள் தொடங்கி, கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை முடிவடையும் நிலையில் இருக்கிறது. மதுரையில் கலைஞர் நூலகம் 6 மாதம் முன்பாகவே முடிந்துவிட்டது. ஜூன் 3ம் தேதி திறக்க இருக்கின்றனர். பிரதமர் மோடி 2019ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தார். இப்போது வரை கட்டவில்லை. இதற்கு 300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈரோட்டிற்கு 1000 கோடி அளவில் பல்வேறு திட்டங்கள் வழங்கபட இருக்கிறது. தேர்தலுக்கு 7 நாள் இருக்கிறது. உங்கள் ஒவ்வொரு வாக்கும் 5 வாக்காக, 50 வாக்காக பெருக வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளையாக, கலைஞரின் பேரனாக கேட்கின்றேன். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களியுங்கள்” என கூறி பேச்சை நிறைவு செய்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: EPS, Erode Bypoll, Erode East Constituency, Udhayanidhi Stalin