மெட்ராஸ் கஃபேயும், தி பேமிலி மேனும் - எதிர்ப்பின் காரணங்கள்!

தி பேமிலி மேன், மெட்ராஸ் கஃபே

விடுதலைப் போராட்டத்தை தீவிரவாத செயலாக குறுக்கும் இந்த வேலையை முதலில் செய்தது மெட்ராஸ் கஃபே திரைப்படம். 

  • News18
  • Last Updated :
  • Share this:
தி பேமிலி மேன் சீஸன் 2 ட்ரெய்லர் தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக தலைவருமான வைகோ, தி பேமிலி மேன் சீஸன் 2 தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த சீரிஸை உருவாக்கியவர்கள், நடித்தவர்கள் என அனைவர் மீதும் தமிழக மக்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். 

தி பேமிலி மேன் இரண்டாம் சீஸன் ட்ரெய்லரில் தமிழ் போராளிக்குழு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. போராளிகளைப் போல் சீருடை அணிந்த சமந்தா, எல்லோரையும் சாகக் கொல்லுவேன் என்கிறார். இந்த இரு பருக்கையிலிருந்து அவர்கள் மொத்த கதையையும் எப்படி பொங்கியிருப்பார்கள் என்பதை ஒருவர் யூகித்துவிட முடியும். விடுதலைப் போராட்டத்தை தீவிரவாத செயலாக குறுக்கும் இந்த வேலையை முதலில் செய்தது மெட்ராஸ் கஃபே திரைப்படம்

சூஜித் சிர்கார் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம் நடித்த மெட்ராஸ் கஃபே 2013 இல் வெளியானது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இலங்கை போராளிக்குழுக்களால் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படும் பின்னணியில் கதை எழுதப்பட்டிருந்தது. இலங்கை இனப்பிரச்சனை, இந்திய அமைதிப்படையின் இலங்கை பயணம், முன்னாள் இந்திய பிரதமர் மனித வெடிகுண்டால் சாகடிக்கப்படுதல் ஆகியவை படத்தில் இடம்பெறுகிறது. தமிழகத்தில் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு சந்தித்தது.

இந்தவகை படங்களை நுட்பமாகப் பார்த்தால் சில பொதுவான அம்சங்களை அவதானிக்கலாம்.

1.பிரச்சனைக்கு யார் அல்லது எது காரணம் என்பதை சொல்ல மாட்டார்கள். அல்லது பூசி மெழுகுவார்கள். மெட்ராஸ் கஃபேயில், "பிரச்சனைக்கு யார் காரணமென்றாலும், பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே" என்று ஒரே வரியில் கடந்து செல்கிறார்கள். நீங்கள் பேசுவது அதிதீவிரமான பிரச்சனை. அதற்கு யார் காரணம் என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டும். அதுவே நியாயம். அதற்குப் பதில், 'யார் காரணமாக இருந்தாலும்' என்று பிரச்சனைக்குரியவர், பாதிக்கப்பட்டவர் இருவரையும் ஒரே தராசில் நிறுத்துவார்கள்.

2.பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை சொல்லாமல், நாயகனின் இழப்புகளை பெரிதுப்படுத்துவது. மெட்ராஸ் கஃபேயின் ஆரம்பத்தில் நாயகனின் மன அழுத்தம் பல நிமிடங்களுக்கு காட்டப்படுகிறது. அதேபோல் அவன் மனைவியின் இழப்பும். மாறாக எதிர்தரப்பில் கொல்லப்படும் தமிழர்களில் ஒருவரது வாழ்வுகூட படத்தில் காட்டப்படுவதில்லை. ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அதனுடன் பயணிக்கும் போதே, அக்கதாபாத்திரத்தின் துயரம் பார்வையாளனின் மனதை தொடும். இங்கே நாயகனும், அவனைச் சார்ந்தவர்களும் மட்டுமே அங்ஙனம் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். ஒரேயொரு தமிழனின் வாழ்வோ, துயரமோ படத்தில் பதிவு செய்யப்படவில்லை

3.போராளிக்குழுக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது. இதை மெட்ராஸ் கஃபேயில் வெற்றிகரமாக கையாண்டுள்ளனர். போராளிகள் தலைவர்களுள் ஒருவரான மல்லையாவை அறிமுகப்படுத்துகையில், அவர் சிகரெட் பிடித்துக் கொண்டே துப்பாக்கியை பரிசோதிப்பார். தொழில்முறை கொலைகாரனை அறிமுகப்படுத்துவதற்குரிய காட்சி. போராளிகள் குறித்த காட்சிகள் அனைத்தும் இவ்விதமே கட்டமைக்கப்பட்டிருக்கும்.

4.அவர்கள் போராளிகள் அல்ல தீவிரவாதிகள் என்பதை சொல்லாமல் சொல்லி, கிளைமாக்ஸ் நெருங்குகையில் அதையே பட்டவர்த்தனமாக முன் வைப்பது. மெட்ராஸ் கஃபேயிலும், போராளிகளின் போர் மீதான வெறியே அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள். அப்படியானால் மற்றவர்கள்? அவர்கள் சமாதானம் விரும்பிகள், ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த ஆசைப்படுகிறவர்கள்.

Also read... ஒரு சிபிஐ டைரி குறிப்பு - இந்தியாவின் அதிக பாகங்கள் கொண்ட திரைப்படம்!

5.உண்மையை அப்படியே திருப்பிப் போடுவது. இன அழித்தொழிப்பில் அனைத்தையும் இழந்து, எதிர்காலமே இல்லாத நிலையில், அடுத்த தலைமுறையாவது சுதந்திரத்துடன் வாழ்வதற்காக கழுத்தில் சயனைடு குப்பி மாட்டிக் கொண்டது வரலாறு. அதையே திருப்பிப் போட்டு, சிறுவர்களின் கழுத்தில் சயனைடு மாட்டி, அவர்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்துவிட்டதாக மெட்ராஸ் கஃபே குற்றம்சாட்டுகிறது

பாதிக்கப்பட்டவனின் பார்வையில் சரித்திரத்தை அணுகாமல், நியாயஸ்தன் போர்வையில் வரும் அத்தனை படங்களும் போலியானைவையே. மெட்ராஸ் கஃபே அப்படியான படம். அதுபோன்றதே தி பேமிலி மேன் சீஸன் 2. அதற்கான கூறுகளை அதன் ட்ரெயலர் கொண்டிருப்பதால் தமிழர்கள் அதனை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பில் உள்ள நியாயத்தை தி பேமிலி மேனை உருவாக்கியவர்களும், அதில் நடித்தவர்களும், அதனை வெளியிடுகிறவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: