சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிக தைரியமான பெண் என்று அறியப்பட்ட சித்ரா, தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவரது கணவர் மற்றும் தாய் கொடுத்த மன அழுத்தமே என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சித்ராவின் மரணம் தற்கொலையே என்று பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டாலும், சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டாரம் அதை ஏற்க மறுக்கிறது.
இந்த நிலையில் சித்ரா தற்கொலை வழக்கில், போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சித்ராவுடன் பணியாற்றிய நடிகர்-நடிகைகள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஹேமநாத்திடம் 4வது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் முரண்பட்ட தகவலை அளிப்பதாக சொல்லப்படுகிறது. ஹேம்நாத் மற்றும் அவரது தந்தை ரவிச்சந்திரனிடம் அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்யன் சனிக்கிழமை தனியறையில் சுமார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். குளிப்பதற்காக தன்னை சித்ரா வெளியே இருக்குமாறு கூறினார் என போலீஸாரிடம் ஹேம்நாத் கூறியிருந்தார்.
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் எஃப்.ஐ.ஆர். வெளியானது - முரண்பட்ட தகவல்களால் குழப்பம்
அதேநேரத்தில், காரில் இருந்த கவரை எடுத்து வர ஹேம்நாத்தை வெளியே அனுப்பியதாக சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற முன்னுக்குப் பின் முரணான தகவலால், ஹேம்நாத் உண்மையில் என்னதான் செய்தார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஆர்,டி.ஓ விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில், தெளிவு கிடைக்கும் பட்சத்தில் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இவை எல்லாமே ஆர்டிஓ விசாரணை தொடங்கப்பட்டு, அது முழுமை அடைந்த பின்னரே இறுதி செய்யப்படும் என்கின்றது போலீஸ் தரப்பு.
அந்த வகையில்தான் 4-வது நாளாக ஹேம்நாத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர் போலீசார். மற்றொரு புறம், சித்ரா கடைசியாக கலந்து கொண்ட சீரியல் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடந்துள்ளது.
குறிப்பாக சித்ரா நடித்து வந்த சீரியலின் இயக்குநர் சிவசேகர், நடிகர்கள் ஸ்டாலின், சுஜிதா, குமரன், தங்கராஜன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த 5 பேரும்தான், கடைசியாக சித்ரா நடித்த காட்சியின்போது, ஒன்றாக இருந்துள்ளனர்.
மேலும் படிக்க...
நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேமந்த், தாயார் அளித்த மன அழுத்தம் முக்கிய காரணம்: காவல்துறை தகவல்
படப்பிடிப்பு தளத்தில் சித்ரா எப்படி இருந்தார்? என்ன மனநிலையுடன் காணப்பட்டார்? என்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன. சித்ரா இயல்புடன் காணப்பட்டதாகவும், எந்த வித்தியாசமும் தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் பதிலளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, நடிகர்கள் வெங்கட், ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவணன், விக்ரம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதைதவிர, ஹேம்நாத்தின் அப்பாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, அவரிடம் வாக்குமூலம் பெறும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.