மறைந்த விஜே சித்ரா நடித்த திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய கலர்ஸ் தமிழ்!

சித்ரா

2018-ல் விஜய் டிவி-யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் துவங்கிய போது முல்லையாக தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் தனி இடம் பிடித்தார்.

  • Share this:
தமிழ் சின்னத்திரை உலகம் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று கடந்த ஆடிண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. தமிழ் டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை மற்றும் விஜே சித்ரா. இவரது திடீர் மரணம் (தற்கொலை) பல்வேறு தரப்பினரிடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எப்போதும் தானும் கலகலப்பாக இருந்து பிறரையும் மகிழ்விக்கும் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவரது தீவிர ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவரை சித்ரா என்று குறிப்பிடுவதை காட்டிலும் முல்லை என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் ஸ்டார் விஜய் டிவி-யில் தற்போது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவரை தமிழக சின்னத்திரை ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமாக உதவியது. இந்த சீரியலில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் நம் அனைவரின் வீட்டிற்குள்ளும். மனதிற்குள்ளும் முல்லையாகவே வாழ்ந்தார் எனலாம். மக்கள் டிவி-யில் விளையாடு வாகைசூடு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி தொழில் வாழ்க்கையை துவக்கிய சித்ரா, அதன் பின் டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீ டான்ஸ் லீக் உள்ளிட்ட டான்ஸ் ஷோக்களில் பங்கேற்று டான்ஸராக தனது மற்றொரு முகத்தை காட்டினார். இதனை தொடர்ந்து சில சீரியல்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க துவங்கினார்.

குறிப்பாக கடந்த 2014 முதல் - 2018 வரை சன் டிவி-யில் ஒளிபரப்பான சின்னப்பாப்பா பெரியபாப்பா காமெடி சீரியலில், பெரியபாப்பாவாக நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார். சரவணன் மீனாட்சி சீசன் 2-ல் கலையரசி என்ற கேரக்டரிலும், சீசன் 3-ல் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலமும் ஸ்டார் விஜய் டிவி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார் சித்ரா. இந்நிலையில் தான் 2018-ல் விஜய் டிவி-யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் துவங்கிய போது முல்லையாக தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் தனி இடம் பிடித்தார். ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் 9 அன்று சென்னை பூந்தமல்லி அருகே தனியார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் விஜே சித்ரா.

இவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்தை உலுக்கியது. இவரது மறைவிற்கு பின்னர் ஒளிபரப்பான இவர் நடித்த காட்சிகள் அடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்களுக்கான டிஆர்பி ரேட்டிங் எகிறியது. இதனிடையே சித்ரா வெள்ளித்திரையிலும் கால் பதித்து "கால்ஸ்"என்றார் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். Calls திரைப்படம் கடந்த பிப்ரவரியில் ரிலீஸ் ஆனது.சென்னை கால் சென்டர் ஒன்றில் வேலை செய்யும் பெண்ணாக நந்தினி என்ற கேரக்டரில் விஜே சித்ரா மிகவும் அருமையாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்த திரைப்படத்தை டிவி-யில் ஒளிபரப்பும் உரிமையை பிரபல சேனலான கலர்ஸ் தமிழ் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த விஜே சித்ராவை வெள்ளித்திரை படம் மூலம் சின்னத்திரையில் பார்க்க அவரது தீவிர ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கிறார்கள். விரைவில் கலர்ஸ் சேனலில் சித்ராவின் நடிப்பில் வெளியான கால்ஸ் திரைப்படத்தை ஒளிபரப்ப அவரது ரசிகர்கள் கோரியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: