விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ். அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்த செந்திலுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொரோனா காலத்தில் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் சென்னைக்கு வந்து செல்வதில், சிரமம் ஏற்பட்டது. அதனால் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன.
அந்த வகையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் இரண்டாம் பாகமான ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் தொடங்கப்பட்டது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்திலே ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ’சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா நடித்து வருகிறார்.
சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 செட்டுக்கு வந்த ராஷ்மி ஜெயராஜ் அதை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார். இதனால் மீண்டும் அரவிந்த் - தாமரை ஜோடி இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது இருவரும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், விரைவில் ராஷ்மிக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு அழைப்பிதழ் கொடுக்கவே அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததாக நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக விஜய் டிவியின் சீரியல் ஒன்றில் அவர் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.