முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்த அர்ச்சனா பிக்பாஸ் 4-வது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார். 75 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அர்ச்சனா ரியோ, அறந்தாங்கி நிஷா, கேபி, சோம் ஆகிய நால்வருடன் அன்புக் கூட்டணி அமைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து 9-வது போட்டியாளராக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் பலரும் அதில் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை ட்ரோல் செய்து சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் சிலர் தரம்தாழ்ந்த விமர்சனங்களையும் முன் வைக்க தவறுவதில்லை. தன்னை வெறுப்பவர்களின் தரம் தாழ்ந்த விமர்சனங்களைக் கண்ட அர்ச்சனா, ட்விட்டரிலிருந்து கொஞ்ச நாட்கள் விலகி இருக்கப்போவதாக அறிவித்தார்.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்களை ஒருங்கிணைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது விஜய் டிவி. அதில் தனது மகளுடன் கலந்து கொண்ட அர்ச்சனா, ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடினர். இருவரது பங்களிப்பும் பிக்பாஸ் கொண்டாட்ட மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக்கியது.
பின்னர் பேசிய அர்ச்சனாவின் மகள் ஜாரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்கள் பலரை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்திருந்தார்கள். தயவு செய்து அப்படி யாரும் செய்யாதீர்கள். எங்களது தலைமுறைக்கு அது வேண்டாம். அம்மா நிகழ்ச்சியில் இருந்த போது அவருக்கு ஆதரவு அளித்த, அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஜாரா சொன்னதற்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். பிக்பாஸ் வின்னர் ஆரியும் தரம் தாழ்ந்த விமர்சனத்தை பதிவிடுபவர்களை அதை வைத்தே அவர்களை புரிந்து கொள்ள முடியும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் எப்போதுமே சிறந்தது” என்று கூறி ஜாராவை பாராட்டினார்.