விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் ‘க/பெ.ரணசிங்கம்’. குணச்சித்திர நடிகரான பெரிய கருப்பத்தேவரின் மகன் பெ.விருமாண்டி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஜீ ப்ளக்ஸ் என்ற ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
திரையரங்குகளைப் போலவே காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக க/பெ.ரணசிங்கம் அமைந்துள்ள நிலையில் அக்டோபர் 2-ம் தேதி படம் வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.
ஆரம்பத்தில் ஓடிடி தளத்தில் வெளியிடமாட்டோம் என்று க/பெ.ரணசிங்கம் படக்குழு தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையில் திரையரங்குகள் திறக்க தாமதமாவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.