சமீபகாலமாக ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் புத்தம் புதுக்காலை, வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் இயக்கிய ‘பாவக்கதைகள்’ உள்ளிட்ட ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
அதேபோல் மணிரத்னம் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் ‘நவராசா’ என்ற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளது.
சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர். இந்தப் படம் கொரோனா கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் உருவாகிறது.
இந்நிலையில் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி, இயக்குநர் விஜய் ஆகியோர் இணைந்து பணியாற்றியிருக்கும் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படம் பிப்ரவரி 12-ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அமலா பால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், நடிகர் வருண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. குட்டி ஸ்டோரி என்ற டைட்டிலுடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.