கவுதம் மேனனிடம் உதவியாளராக பணியாற்றி ‘வெப்பம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஞ்சனா அலிகான். இவர் தற்போது ‘வெற்றி’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் மூலம் பிக்பாஸ் முகென் ராவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக 2018-ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்ட அனு க்ரீத்திவாஸ் நடிக்கிறார். மேலும் நடிகர் கிஷோர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது, “இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. “வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது மனதிற்கு நெருக்கமானது, மிகவும் உணர்வுப்பூர்வமானது.
இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும். வெற்றி என்பது நாயக கதாப்பாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. படத்தின் மொத்த கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பது தான். வாழ்வின் இடர்பாடுகளை கடந்து நாயகன் எப்படி மனித்தத்தோடு தன் லட்சியத்தை அடைகிறான் என்பதே கதை.
முகென் ராவை இக்கதாபாத்திரத்திற்கு ஏதேச்சையாகத்தான் தேர்ந்தெடுத்தோம். தோற்றத்தில் இறுக்கத்துடன், முரட்டுதனமாக இருப்பவர். தன்னுடன் பழகும் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும் அன்பான குணமுடையவர். அப்படியே இந்தப் படத்தின் கதாப்பத்திரத்தின் குணத்துடன் ஒத்துபோககூடியவர். முகென் ராவ் உணர்வுகளை எளிதாக கையாளும் அதே நேரம், ஆக்சன் காட்சிகளையும் எளிதாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார்.
அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாட்டிலிருந்து 2018-ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. தான் இருக்கும் இடத்தை ஜொளிக்க வைப்பவர், கடும் உழைப்பாளி. படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். அவர் அழகும், திறமையும் கொண்டவர் மட்டுமல்ல, வெகு சரளாமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்.
மிகச்சிறந்த தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிப்பது எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது. “வெற்றி” திரைப்படம் இந்த அனைத்து நம்பிக்கைளும் பூர்த்தி செய்து பெரு வெற்றி பெருமென நம்புகிறேன்” இவ்வாறு இயக்குநர் அஞ்சனா அலிகான் தெரிவித்துள்ளார்.