இயற்கை ஒளியின் கவிதை பாலு மகேந்திரா!

news18
Updated: February 13, 2018, 11:09 AM IST
இயற்கை ஒளியின் கவிதை பாலு மகேந்திரா!
இயக்குனர் பாலு மகேந்திரா
news18
Updated: February 13, 2018, 11:09 AM IST
தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற ஒளிப்பதிவாளரும், காட்சி ஊடகத்தில் புதுமையைப் புகுத்திய தலைசிறந்த இயக்குனருமான பாலு மகேந்திராவின் 4-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது

1939-ம் ஆண்டு இலங்கையில் பிறந்த பாலு மகேந்திரா, சிறுவயது முதலே புகைப்படம் எடுப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார். தொடர்ந்து புனே இன்ஸ்டியூட்டில் ஒளிப்பதிவு பயின்று தன்னை மெருகேற்றிக் கொண்ட அவர், 1971-ம் ஆண்டு நெல்லு மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரையுலகில் அறிமுகமானார்.

அறிமுக படத்திலேயே முத்திரை பதித்து, கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பாலு மகேந்திரா கைப்பற்றினார். அடுத்தடுத்து மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி 1977-ல் 'கோகிலா' கன்னட படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக கால் பதித்த பாலு மகேந்திரா, தமிழ் சினிமாவின் தொன்றுத்தொட்ட மரபுகளை மாற்றாமல், புதுமையைப் புகுத்தி காட்சி ஊடகத்தின் வசந்த கால கதவைத் திறந்து வைத்தார்.

அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை என இயல்பு வாழ்க்கையை இயல்பாகவும், அதே சமயம் சுவராசியமாகவும் திரையில் பதிவு செய்த பாலு மகேந்திரா, வணிக வெற்றியையும் ருசித்தார். ஒருபக்கம் விருதுகளை இவர் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், இன்னொரு பக்கம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழையை இவருடைய படங்கள் அள்ளிக்கொண்டிருந்தன.

தனது கேமிரா கண்களின் மூலம் பார்வையாளர்களின் மனங்களுடன் உரையாடும் வித்தயை அறிந்தவர் பாலு மகேந்திரா. குறிப்பாக இவர் இயக்கிய மூன்றாம் பிறை படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, தமிழ் சினிமாவின் உயிரோட்டமான காட்சிகளில் ஒன்றாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

தமிழ் சினிமாவின் உயரிய படைப்புகளை பட்டியலிட்டால், அதில் ஒளிப்பதிவாளராகவோ இயக்குநராகவோ இவர் பங்காற்றிய படங்கள் நிச்சயம் முன்னிலையில் இருக்கும். குறிப்பாக வியாபார நோக்கத்துக்கு அப்பாற்பட்டு இவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம் போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் யதார்த்த படங்களுக்கான இலக்கணத்தை வகுத்தவை.
Loading...
செயற்கை கருவிகளை தவிர்த்து, இயற்கை ஒளியின் மூலம் திரையில் கவிதை வடித்த பாலு மகேந்திரா ஒளிப்பதிவுக்காக 2 தேசிய விருதுகளையும், இயக்கத்துக்காக 4 தேசிய விருதுகளையும் மேலும் திரைக்கதை ஆசிரியரென ஒரு தேசிய விருதையும் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் ஆகிய மூன்று துறைகளிலும் தேசிய விருது பெற்ற ஒரே கலைஞன் எனும் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இவ்வுலகை விட்டு மறைந்தாலும், பாலு மகேந்திராவின்படைப்புகள் அழியாத கோலங்களாக என்றென்றும் திரையுலகை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.

 செய்தியாளர் - ராகேஷ் பிரபாகரன்
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்