த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகவுள்ள சாதி ஆணவப் படுகொலை திரைப்படம்!

நடிகை த்ரிஷா

சுந்தர் பாலு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் த்ரிஷா நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
த்ரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, ராங்கி ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கும் வழியில்லை என்பதால் ஓடிடியில் இப்படங்களை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இதில் கர்ஜனை சாதி ஆணவப் படுகொலை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. சுந்தர் பாலு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் த்ரிஷா நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முழுநீள ஆக்ஷன் படம் இதுவாகவே இருக்கும். இந்தியில் வெளியான என்ஹெச் 10 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் இது.

சாதி அரசியலை பேசும் அசுரன், பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இந்தி ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். கர்ணனைப் பார்த்துவிட்டு இயக்குனர் ஆனந்த் எல்.ராய் வியந்து பாராட்டியுள்ளார். நாம் வியந்து பாராட்ட வேண்டிய ஒரு இந்திப் படம் என்ஹெச் 10. 2015 இல் வெளியானது. டெல்லியையும் பஞ்சாபிலுள்ள பஸில்கா நகரையும் இணைக்கும் சாலை என்ஹெச் 10 எனப்படுகிறது. படம் நடக்கும் களம் ஹரியானாவில் உள்ள குர்கான்

மீராவின் பிறந்தநாள் அன்று அவளும், அவளது கணவன் அர்ஜுனும் ஒரு ரோடு ட்ரிப் செல்கிறார்கள். வழியில் சாலையோர தாபாவில் வைத்து பிங்கி என்ற பெண்ணை சந்திக்கிறார்கள். தன்னையும், தனது கணவனையும் சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக பிங்கி அவர்களிடம் உதவி கேட்கிறாள். அந்த நேரம் அங்குவரும் கும்பல் அவர்களை இழுத்துப் போகிறது. அந்த கும்பலின் தலைவனாக இருப்பவன், பிங்கி தனது சகோதரி என்கிறான்.

அடித்து இழுத்துச் செல்லும் அந்த தம்பதியை மீராவும், அர்ஜுனும் தங்கள் காரில் பின் தொடர்கிறார்கள். பிங்கி மற்றும் அவளது கணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் அந்தக் கும்பல், இருவருக்கும் விஷத்தை புகட்டி விடுகிறது. இருவரும் துடிக்கத் துடிக்க இறந்து போகிறார்கள். இந்த நேரம் மீரா, அர்ஜுன் அவர்கள் கண்ணில் மாட்டிவிட, கும்பல் இருவரையும் துரத்துகிறது. காயம்பட்ட அர்ஜுனை ஓரிடத்தில் அமர்த்திவிட்டு உதவிக்காக மீரா ஓடுகிறாள்

Also read... தி பேமிலி மேன் 2 சீரிஸிற்கு எதிர்ப்பு - சமந்தாவிற்கு நெட்டிசன்கள் கண்டனம்!

போலீஸ் ஸ்டேஷனில் அவள் சந்திக்கும் அதிகாரி முதற்கொண்டு அனைவரும் சாதிய வன்மத்தில் ஊறியவர்களாக இருக்கிறார்கள். ட்ராபிக் விதிமுறைகளைப் போலத்தான் மனுநீதியும் என்கிறார் அந்த அதிகாரி. அவரிடமிருந்து தப்பித்து கடைசியில் ஒரு வீட்டில் அடைக்கலம் புகுகிறாள். மீரா. அன்பாக உபசரிக்கிறார் வயதான வீட்டுத் தலைவி. பிறகுதான் பிங்கியின் வீடு அது என்பதும், பிங்கியையும், அவள் கணவனையும் கொலை செய்ய அவளது சகோதரர்களையும், உறவினர்களையும் அனுப்பியதே பிங்கியின் தாய்தான் என்பதும் மீராவுக்கு தெரிய வருகிறது.

மீரா யார் என்பது அவர்களுக்கும் தெரியவர, மீரா எப்படி அங்கிருந்து தப்பிக்கிறாள் என்பது என்ஹெச் 10 படத்தின் கிளைமாக்ஸ். இதில் பிரதானமான மீரா கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். அனுராக் காஷ்யபின் பாண்டம் பிலிம்ஸ், அனுஷ்கா சர்மாவின் க்ளீன் சிலேட் பிலிம்ஸ், ஈராஸ் இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தன. சுதீப் சர்மா படத்தின் கதையை எழுத, நவ்தீப் சிங் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தையே தமிழில் கர்ஜனையாக்கியிருக்கிறார்கள். அனுஷ்கா சர்மா நடித்த வேடத்தை த்ரிஷா தமிழில் செய்துள்ளார்

என்ஹெச் 10 குறித்து முக்கியமான தகவலையும் சொல்ல வேண்டும். 2008 இல் ஈடன் லேக் என்ற படம் வெளியானது. யுகே தயாரிப்பு. பள்ளி ஆசிரியரான ஜென்னி தனது பாய் ப்ரெண்ட் ஸ்டீவ் உடன் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஏரி ஒன்றுக்கு வார இறுதியை கழிக்க செல்கிறாள். மரங்களடர்ந்த அந்தப் பகுதியில் சில டீன்ஏஜ் பையன்கள் அவர்களை தொந்தரவு செய்கிறார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக கொலைவெறி தாக்குதலாக மாறுகிறது. ஸ்டீவ் ஓரிடத்தில் காயத்துடன் மாட்டிக் கொள்ள, ஜென்னி உதவிக்காக ஓட ஆரம்பிக்கிறாள். இறுதியில் ஒரு வீட்டை கண்டடைகிறாள். அங்குள்ளவர்கள் அவளுக்கு உதவ முன் வருகிறார்கள். பிறகுதான், அந்த வீடு, அவர்களை தாக்கிய பையன்களுடையது என்பது தெரிய வருகிறது. சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாகிறது ஜென்னியின் நிலை

ஈடன் லேக்கின் பின்னணியை அப்படியே என்ஹெச் 10 இல் பார்க்கலாம். அதனுடன், சாதி ஆணவப்படுகொலை என்ற சமூகப் பிரச்சனையை சேர்க்கையில் என்ஹெச் 10 புதிய பரிமாணம் கொள்கிறது. என்ஹெச் 10 அளவுக்கு கர்ஜனையில் பிரச்சனையை வலுவாக பேசியிருக்கிறார்களா, மனுநீதி குறித்த விளக்கம் இடம்பெறுகிறதா என்பதெல்லாம் மில்லியன் டாலர்கள் கேள்விகள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: