பரியேறும் பெருமாள் திரைப்படம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பார்த்தனர்.
இதற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன்:
படத்தை இரண்டு புரட்சிகரமான இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இது ஒரு செவ்வியல் திரைப்படம். வழக்கமாக கதாநாயகன் அடிவாங்குவது போல் படம் இருக்காது. இந்த திரைப்படம் காட்சிக்கு காட்சி வித்தியாசமாக, இயல்பு நிறைந்த ஒன்றாக இருக்கிறது. சாதிய முரண் இந்தச் சமூகத்தில் எத்தகைய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதை இந்தப் படம் வலியுறுத்தியுள்ளது. இளைஞர்கள் மற்றும் பழமையில் ஊறிப் போன சாதிய வாதிகளுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. கண்டிப்பாக படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் ஏராளமான விருதுகளை பெறுவார்.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலர் சுப.வீரபாண்டியன் பேசும்போது :
இந்த திரைப்படம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதுவும் திராவிட இயக்கத்தின் உயிர் நாடியான ஒன்று. சமூக நீதி இல்லாமல் திராவிட இயக்கம் இல்லை. அந்த வகையில் இந்த திரைப்படம் திராவிட, அம்பேத்கரிய இயக்கங்கள் செய்ய வேண்டிய பணியைச் செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது:
இந்த திரைப்படத்தில் சமூகத்தில் சாதி வெறி எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை காண்பித்துள்ளனர். சாதி மறுப்பு திருமணத்தால் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றை மிகச் சிறப்பாக காண்பித்து, பின்னர் சாதி மறுப்பு திருமணம் செய்தும் வெற்றி பெற்று வாழ முடியும் என்பதை மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளனர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் பேசும்போது:
இந்தப் படம் ஆதிக்க சமூகத்தினரின் அத்து மீறல்களை மிக சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. இந்த சமூகம் ஒன்றுப்பட்டு வாழ வேண்டும் என்பதை மிக சிறப்பாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கதை தமிழகத்தின் மனசாட்சியை அறைந்தது போல் உள்ளது. இதை பார்த்து மேதாவிகளாக உள்ள இயக்குநர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்:
சாதிய பிரச்னைகளை மிக சிறப்பாக எடுத்து காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் ஆழமான செய்தியை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தன்னுடைய முதல் படத்திலேயே மிகச் சிறப்பாக மாரி செல்வராஜ் தனக்கான முத்திரையை பதிவு செய்துள்ளார். சுய மரியாதையை மிகச் சிறப்பான கதை அம்சமாக உருவாக்கி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் :
இந்தப் படம் திரையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. சாதி என்பது சமூகத்தில் உள்ள நோய் என்பதை மிகச் சிறப்பாக எடுத்து காட்டியுள்ளது. நம் முன்னோர்கள் சாதியை ஒழிக்க எவ்வளவோ போராடி உள்ளனர். ஆனால் தான் பட்ட துன்பத்தை தனது படைப்பாக வைத்துள்ளார் இயக்குநர். படைப்பாளியாக மாரியின் கதையை நிறைய பேர் மறுத்த நிலையில் பா.ரஞ்சித் வாய்ப்பு கொடுத்தது மகிழ்ச்சியான ஒன்று.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pariyerum perumal, Political leaders praise, Seeman, Thirumavalavan, Velmurugan