அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் 'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் கூட்டணி இணைந்துள்ளது. இவர்களுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், 'கோப்ரா', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
கடந்த ஜூலை மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பார்த்திபனுக்கு ராசிமான் என பெயரிடப்பட்டு அவரது கட்சிக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு என நாம் தமிழர் கட்சியின் பிரதான வண்ணமே பயன்படுத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தும் டீசர் காட்சிகளில் இடம்பெற்றிருந்தன. மேலும் போஸ்டரில் ‘புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்’ என்றும் எழுதப்பட்டிருந்தது.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சீமான் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை விஜய் சேதுபதி சீண்டியிருப்பதாக சமூகவலைதளங்களில் சர்ச்சைகள் எழ நாம் தமிழர் கட்சியினரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நண்பர் சீமானிடம் நேரிடையாக‘துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.
(புதிய பாதை நமது) இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும் ‘நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர்பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்” இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.