என்னை எதிர்ப்பவர்களால் ஐ.எம்.டி.பி ரேட்டிங்கைத்தான் மாற்ற முடியும். என்னுடைய எண்ணத்தை மாற்ற முடியாது என்று தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷமி அகர்வாலின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் சப்பாக். அந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. அந்தப் படம் வெளியாவதற்கு ஒரிரு நாள் முன்னதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தீபிகா படுகோன் கலந்துகொண்டார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் தீபிகா படுகோன் கலந்துகொண்டதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. மேலும், அவரது படமான சப்பாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தம் வகையில் #boycottchhapaak என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. மறுபுறம் #ISupportDeepika என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
மேலும், தீபிகா படுகோன் எதிர்பாளர்கள் சினிமா படங்கள் குறித்த இணையதளமான ஐ.எம்.டி.பியில் சப்பாக் படத்துக்கு குறைந்த ரேட்டிங்கைக் கொடுத்தனர். அதனால், ஐ.எம்.டி.பி.யில் சப்பாக் படத்துக்கு ரேட்டிங் 4.6 மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், தீபிகாவுக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஐ.எம்.டி.பியில் ரேட்டிங் குறைந்தது குறித்து பேசிய தீபிகா, ‘அவர்களால் ஐ.எம்.டி.பி ரேட்டிங்கைத்தான் மாற்ற முடியும். என்னுடைய எண்ணத்தை மாற்ற முடியாது’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய பதிலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.