கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்று ‘திருமணம்’. இத்தொடரில் சந்தோஷ் மற்றும் ஜனனி கேரக்டர்களில் சித்து - ஸ்ரேயா ஜோடி நடித்திருந்தது. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீரியலைத் தாண்டி உண்மையிலும் இவர்கள் காதலர்களாகவே வலம் வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த திருமணம் தொடர் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக கலர்ஸ் தமிழ் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். மீண்டும் இத்தொடரை ஒளிபரப்ப வேண்டும் என்று சமூகவலைதளத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து 2020-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் மீண்டும் திருமணம் தொடரை மறுஒளிபரப்பு செய்து வருகிறது கலர்ஸ் தமிழ்.
திருமணம் தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான சித்து - ஸ்ரேயா ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது ‘என் நெஞ்சோரமா’ என்ற மியூசிக் ஆல்பத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்துள்ளது. இதுகுறித்து சித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “உன்னுடன் சேர்ந்து பணியாற்றுவதை நான் மிஸ் செய்கிறேன் ஸ்ரேயா. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு நாள் இருவரும் இணைந்து ஒன்றாக பணியாற்றக்கூடிய வாய்ப்பு அமையும்” என்று கூறியுள்ளார்.