ஒரு சிபிஐ டைரி குறிப்பு - இந்தியாவின் அதிக பாகங்கள் கொண்ட திரைப்படம்!

ஒரு சிபிஐ டைரி குறிப்பு

மலையாளத்தில் இன்று வெளியாகும் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்களுக்கும், மர்டர் மிஸ்டரி திரைப்படங்களுக்கும் முன்னெத்தி ஏர், ஒரு சிபிஐ டைரி குறிப்பு.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீபமாக ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் அதிகம் வருகின்றன. காஞ்சனா, அரண்மனை போன்ற ஹாரர் படங்கள் மட்டுமின்றி, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, மாயவன் போன்ற படங்களுக்கும் இரண்டாம் பாகங்கள் வருகின்றன. எந்திரனின் இரண்டாம் பாகம் 2.0 வசூலில் சாதனை படைத்தது. பாகுபலி இரு பாகங்கள் குறித்து இந்தியாவுக்கே தெரியும்.

இந்தியில் இது அதிகம். ஹவுஸ்ஃபுல் படத்தின் சீரிஸ்கள் தொடர்ச்சியாக வருகின்றன. அதேபோல் தூம் படத்தின் அடுத்தடுத்தப் பாகங்கள் எடுக்கப்படுகின்றன. தமிழில் எடுக்கப்படும் காஞ்சனா, அரண்மனை சீரிஸ்களில் பெயர்களை தவிர்த்து கதை, கதாபாத்திரங்கள் எல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் மாறுபட்டவை. ஒன்றின் தொடர்ச்சி அல்ல. இந்தி ஹவுஸ்ஃபுல் பட சீரிஸ்களும் அப்படியே. விதிவிலக்கு ஹிர்த்திக் ரோஷன் சூப்பர்ஹீரோவாக நடிக்கும் க்ரிஷ் மற்றும் தூம். தூம் இதுவரை வந்த பாகங்களில் அபிஷேக் பச்சன், ஜெய் தீக்ஷித் என்ற ஏசிபி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் பணிபுரியும் போலீஸ் அதிகாரியாக உதய் சோப்ரா நடித்தார். அந்தவகையில் தூம் சீரிஸில் ஒரே கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன

இந்தப் படங்களுக்கெல்லாம் காட்ஃபாதர், 1988 இல் வெளிவந்த ஒரு சிபிஐ டைரி குறிப்பு திரைப்படம். மம்முட்டி சிபிஐ அதிகாரியாக நடித்த இப்படத்தின் கதையை எஸ்.என்.சுவாமி எழுத, மது படத்தை இயக்கியிருந்தார். இதுவொரு மர்டர் மிஸ்டரி. ஓமனா என்கிற பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்து போகிறாள். போலீஸ் அதனை தற்கொலை என வழக்கை முடிக்கப் பார்க்கிறது. இறந்துபோன பெண்ணின் தங்கையும், தந்தையும் அதை ஏற்க மறுக்கிறார்கள். வழக்கு சிபிஐக்கு செல்ல, சிபிஐ அதிகாரியான மம்முட்டியும், அவரது உதவியாளர்கள் சுரேஷ் கோபி, ஜெயதி ஸ்ரீகுமாருடன் ஓமனாவின் வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஓமனா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது உறுதியானபின், கொலை செய்தது யாராக இருக்கும் என படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்களின் மீது சந்தேகம் பட்டாம்பூச்சியாய் தாவித்தாவி செல்லும்

மலையாளப் படங்கள் என்றால் காலைக்காட்சி படங்கள், பிரமிளாக்களும், ஸ்டெல்லாக்களும் நடிப்பவை என்ற தமிழகத்தின் எண்ணத்தை மாற்றிய முதல் படம் இது என கூறலாம். தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஒரு சிபிஐ டைரி குறிப்பு 100 நாள்கள் ஓடியது. தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான '' சான்றிதழ் பெறாத முதல் மலையாள திரைப்படம் இது. இந்தப் படத்தில், ஓமனா மாடியில் இருந்து அவளாகவே குதித்தாளா இல்லை, யாரேனும் கொன்று வீசியிருப்பார்களா என்பதை அறிய, மனிதர்களை போன்ற டம்மியை பயன்படுத்துவார் மம்முட்டி. அது கேரளாவில் மிகப்பிரபலமானது. அதன் பிறகு வந்த துப்பறியும் கதைகள் கொண்ட படங்களில், 'டம்மி போட்டுப் பார்க்கணும்' என்ற காமெடி வசனம் தவறாமல் இடம்பெற்றது.

மம்முட்டியின் சேதுராம அய்யர் என்ற கதாபாத்திரத்தை ராதா வினோத் ராஜு என்ற ஐபிஎஸ் அதிகாரியை இன்ஸ்பிரேஷனாக வைத்து உருவாக்கினர். வினோத் ராஜு கொச்சின் மட்டாஞ்சேரியை சேர்ந்தவர். ஐபிஎஸ் அதிகாரி. ஜம்மு - காஷ்மீரில் பணிபுரிந்துள்ளார்

Also read... நீங்க ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா போதும் விஜய் அண்ணா - தளபதியிடம் கோரிக்கை வைத்த டிடி!

ஒரு சிபிஐ டைரி குறிப்பின் வெற்றியைத் தொடர்ந்து அதே கதாபாத்திரங்களை வைத்து 1989 இல் ஜாக்ரதா என்ற படம் வெளிவந்தது. அதுவும் ஹிட். அதன் பிறகு 2004 இல் சேதுராம் அய்யர் சிபிஐ திரைப்படம். 2005 இல் நேரறியான் சிபிஐ. இந்த நான்கு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றன. நான்கும் வெற்றி. இந்தப் படத்தின் தாக்கத்தில் மலையாளத்தில் ஏராளமான துப்பறியும் கதைகள் எடுக்கப்பட்டன. அவை ஓடவும் செய்தன. கைகளை பின்னால் கட்டி, வெற்றிலை குதப்பியபடி நடக்கும் சேதுராம அய்யரின் மேனரிஸம் கேரளாவில் பிரபலம். நாம் ஏற்கனவே கூறியது போல், முதல் படத்தில் இடம்பெற்ற அதே சேதுராம அய்யர் கதாபாத்திரத்தில்தான் மம்முட்டி நடித்தார். அவரது உதவியாளராக ஜெகதி ஸ்ரீகுமார். அவர்கள் எடுத்துக் கொள்ளும் வழக்குகள் மட்டுமே வேறு. அந்தவகையில் ஒரு சிபிஐ டைரி குறிப்பை இந்திய சினிமாவின் உண்மையான சீரிஸாக சொல்லலாம்

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணைகிறது. எஸ்.என்.சுவாமி கதை எழுத, மது இயக்க, சேதுராம அய்யர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். இது ஐந்தாவது பாகம். இந்த நேரத்தில் ஒரு வருத்தமும் உண்டு. நான்கு பாகங்களில் ரசிகர்களை சிரிக்கவும், ஆச்சரியப்படவும் வைத்தவர் ஜெகதி ஸ்ரீகுமார். ரகசிய விசாரணைக்காக பலவித வேடங்களில் வந்து கலக்குவார். அவர் இந்த ஐந்தாம் பாகத்தில் இடம்பெறப் போவதில்லை. சில வருடங்களுக்கு முன் நடந்த கார் விபத்தில், அவரது உடல் செயலிழந்து போனது. பேச முடியாது, நடக்க முடியாது. பல வருடங்களாக வீல் சேரில்தான் அவரது வாழ்க்கை கழிகிறது.

மலையாளத்தில் இன்று வெளியாகும் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்களுக்கும், மர்டர் மிஸ்டரி திரைப்படங்களுக்கும் முன்னெத்தி ஏர், ஒரு சிபிஐ டைரி குறிப்பு. சேதுராம அய்யர் ஐந்தாவதுமுறை ரசிகர்களை திருப்தி செய்வாரா....? பொறுத்திருந்து பார்ப்போம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: