நேரடி ஓடிடி வெளியீடு - அமெரிக்காவில் டிஸ்னிக்கு எதிராக திரையரங்குகள் போர்க்கொடி

பிளாக் விடோ திரைப்படம்

திரையரங்கில் வெளியான அதே நாளில் ஓடிடியில் படங்கள் வெளியாவதால் எதிர்பார்த்த வசூல் இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் டிஸ்னி நிறுவத்தை குற்றம்சாட்டியுள்ளனர்.

  • Share this:
    pகொரோனா பேரிடர் காலத்தில் ஓடிடியின் வளர்ச்சி, திரையரங்குகளை ஸ்வாக செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. திரையரங்கில் நல்ல வசூலை பெறும் சாத்தியமுள்ள படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள், ஓடிடி தளங்கள் அதிக பணம் தர முன்வருகையில் ஓடிடியில் படத்தை வெளியிட முன்வருவதில் வியப்பில்லை. அதனை தடுக்கவும் இயலாது. இந்தப் போக்கு தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர் இடையே உரசலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமில்லை அமெரிக்காவிலும்.

    வார்னர் பிரதர்ஸ் தங்களின் Godzilla vs. Kong, Mortal Kombat  படங்களை திரையரங்குடன் சேர்த்து, HBO Max தளத்திலும் வெளியிட்டது. இதற்கு யுஎஸ்ஸில் திரையரங்குகள் வைத்துள்ள பல நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன. வார்னர் பிரதர்ஸின் படங்களை பாய்காட் செய்ய வேண்டியிருக்கும் என எச்சரித்தன

    இந்நிலையில் டிஸ்னி தனது புதிய படமான Black Widow வை ஜுலை 9 திரையரங்கிலும், டிஸ்னி ஓடிடி தளத்திலும் வெளியிட்டது. இதற்கு அமெரிக்காவின் National Association of Theatre Owners (NATO) கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதல் வார இறுதியில் பிளாக் விடோ யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 80 மில்லியன் டாலர்களை வசூலித்தது. கொரோனா பேரிடருக்குப் பிறகு முதல்வார இறுதியில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமை பிளாக் விடோவுக்கு கிடைத்தது. இதற்குமுன் F9: The Fast Saga திரைப்படம் முதல்வார இறுதியில் 70 மில்லியன் டாலர்கள் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. அதனை பிளாக் விடோ முறியடித்தது

    ஆனால், இரண்டாவது வார இறுதியில் இந்த வசூல் 69 சதவீதம் குறைந்து, 26 மில்லியன் டாலர்களை மட்டுமே பிளாக் விடோ வசூலித்தது. இந்த வசூல் வீழ்ச்சிக்கு NATO டிஸ்னி நிறுவத்தை குற்றம்சாட்டியுள்ளது. திரையரங்கில் வெளியான அதேநாள் படத்தை டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியிட்டதாலேயே இந்த வசூல் வீழ்ச்சி என அது டிஸ்னியை கண்டித்துள்ளது.. இந்தப் போக்கு தொடர்ந்தால், டிஸ்னியின் படங்களை வெளியிடப்போவதில்லை என சில திரையரங்கு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன

    Also Read: சூர்யா 40 பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்.. ரசிகர்கள் உற்சாகம்

    டிஸ்னி இந்த எதிர்ப்பை சென்ற வருடமே எதிர்கொண்டது. அதன் கிளை நிறுவனமான Pixar தயாரித்த Soul அனிமேஷன் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டது. இதற்கு Pixar ஊழியர்கள் தங்களின் அதிருப்தியை வெளியிட்டனர். பிறகு அவர்களின் Luca திரைப்படத்தையும் நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதாக அறிவிக்க, வெளிப்படையாகவே ஊழியர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். Mulan போன்ற திரைப்படங்களை இப்படி நேரடியாக ஓடிடியில் வெளியிடுகையில், டிஸ்னி ஓடிடி தளத்தின் சந்தாதாரராக  இருந்தாலும் 30 டாலர்கள் பணம் கட்டினால் மட்டுமே படத்தை பார்க்க முடியும். Luca படத்துக்கு அதுவும் இல்லை. சந்தாதாரர்கள் கூடுதல் பணம் கட்டாமல் இலவசமாகவே பார்க்கலாம். இதுவும் Pixar ஊழியர்களை கொதிப்படைய செய்தது.

    பிளாக் விடோ திரைப்படத்தை இந்தியாவில் டிஸ்னி நிறுவனம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியிடுகிறது. திரையரங்கு வெளியீடு இல்லை.



    இந்த வருடம் இந்திய திரையரங்கில் அதிகம் வசூலான படங்களில் ஆங்கிலப்படமான Godzilla vs. Kong திரைப்படமும் ஒன்று. பல இந்திப் படங்களைவிட அதிகம் வசூலித்தது. மார்வெலின் பிளாக் விடோ படத்துக்கும் இந்தியாவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். திரையரங்கில் வெளியிட்டால் வசூல் அள்ளும். டிஸ்னியின் ஓடிடி அறிவிப்பால் திரையரங்குகள் லாபம் தரும் ஒரு படத்தை இழக்கின்றன. டிஸ்னியையும் சொல்லி குற்றமில்லை. இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டும் திரையரங்குகள் செயல்படுகின்றன. அதுவும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திரையரங்கில் பிளாக் விடோவை எப்படி வெளியிட முடியும்?

    Also Read: ஷங்கர் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் தமன்!

    டிஸ்னி மட்டுமின்றி வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல் பிக்சர்ஸ் போன்ற ஹாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் இனிவரும் காலங்களில் திரையரங்கு, ஓடிடி இரண்டிலும் ஒரேநேரத்தில் படத்தை வெளியிடவே விரும்புகின்றன. திரையரங்கு உரிமையாளர்களின் எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்துவார்கள் என தெரியவில்லை. கொரோனா கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு திரையரங்குகளின் கை ஒருவேளை  ஓங்கலாம். அதுவரை ஓடிடிக்கு அவர்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். அதுதான் யதார்த்த கள நிலவரம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: