முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘எஞ்சாய் எஞ்சாமி’கேட்டீங்களா.. ஆதிக்குடியின் ஒப்பாரி காதில் கேட்டதா?

‘எஞ்சாய் எஞ்சாமி’கேட்டீங்களா.. ஆதிக்குடியின் ஒப்பாரி காதில் கேட்டதா?

தெருக்குரல் அறிவு

தெருக்குரல் அறிவு

கூக்கூ கூக்கூ-ன்னு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் இந்த பாட்டு டப்ஸ்மேஷ் செய்றாங்க. ஆலமர வண்ணக்கிளியை கொண்டாடுறாங்க. மண்ணக்கொடுத்த பூர்வக்குடியும், வள்ளியம்மாவும் தெரியலையாங்கிற கேள்வி வருது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

‘எஞ்சாய் எஞ்சாமி’இந்தப்பாட்டு மண்டைக்குள்ள எதோ பண்ணிக்கிட்டு இருக்கு. உண்மையிலே இந்தப்பாட்டு ஒரு எஞ்சாய் பண்ற பாட்டுதானா. யூடியூப்ல லைக்ஸ்களை அள்ளிக்குவிச்சுக்கிட்டு இருக்கு. சந்தோஷ் நாராயணன் இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். தீ, தெருக்குரல் அறிவு இவர்களின் குரலில் ‘எஞ்சாய் எஞ்சாமி’-யை எஞ்சாய் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் நம்ம மக்கள். இண்டிபெண்டண்ட் பாடல்களுக்கு இது நல்ல ப்ளாட்ஃபார்ம் கொடுத்துருக்கு பேசப்படுது.

இந்த பாடல் மூலம் தெருக்குரல் அறிவு, தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் மக்கள்கிட்ட கடத்த நினைத்த விஷயம் சென்றடைந்ததா. கூக்கூ கூக்கூ-ன்னு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் இந்த பாட்டு டப்ஸ்மேஷ் செய்றாங்க. ஆலமர வண்ணக்கிளியை கொண்டாடுறாங்க. மண்ணக்கொடுத்த பூர்வக்குடியும், வள்ளியம்மாவும் தெரியலையாங்கிற கேள்வி வருது. ரீப்பிட் மோடுல இந்தப்பாட்ட கேட்கும்போது இந்த பாடல் வரிகள் நமக்கு எதையோ நினைவூட்டும் விதமாகத் தான் இருக்கு.

சுருக்கு பையம்மா

வெத்தலை மட்டையம்மா

சொமந்த கையம்மா

மத்தாளம் கொட்டுயம்மா

தாயம்மா தாயம்மா

என்ன பண்ண மாயம்மா

வள்ளியம்மா பேராண்டி..

இந்த எஞ்சாய் எஞ்சாமி பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் வள்ளியம்மா பேராண்டி ‘தெருக்குரல்’அறிவுதான். ஒப்பாரி பாடல் வகைதான் இது. வள்ளியம்மா சொன்ன வரிகளையும் இந்தப்பாடலில் விதைத்துள்ளார் அறிவு. இது வள்ளியம்மா சொன்ன கதையல்ல இது வள்ளியம்மாளின் கதைதான் என ஆடியோ வெளியீட்டு விழாவிலே பேசியிருந்தார். பூர்வக்குடி மக்களும், வள்ளியம்மாவும் தான் இந்த பாட்டோட கான்செப்டே.

இந்த மண்ணோட பூர்வகுடிகள் பஞ்ச காலத்தில் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு அடிமைகளாக வேலைக்கு போறாங்க. மனித கால் தடங்களே படாத அந்த அடர்காடுகளை அழித்து நகரங்களை உருவாக்குகிறார்கள். மக்கள் தொகை பெருக்கத்தினால் அந்த மக்கள் மீண்டும் தங்கள் நிலங்களுக்கே அனுப்பப்படுகின்றனர். இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்த மண்ணோட பூர்வகுடிகளுக்கு இங்க வசிக்க நிலம் கிடையாது. மூன்று தலைமுறைகளாக இலை பறித்தவர்களுக்கு வேறு வேலையும் தெரியாது.

கோத்தகிரி, வால்பாறை, உதகைன்னு மலை பிரதேசங்களுக்கு படையெடுக்கிறார்கள். அங்கிருக்கும் தொழிலாளர்கள் காரணமாக தேயிலை வேலைக்கும் டிமாண்டாகிறது. கிடைத்த வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார்கள். கிடைத்த வேலைக்கு சென்று தன் குடும்பத்தை கட்டமைத்த ஆயிரம் ஆயிரம் வள்ளியம்மாவுக்காக இந்தப்பாடலை இயற்றியுள்ளார் அறிவு. ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படியொரு வள்ளியம்மா இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக பொருளாதார முன்னேற்றத்தில் அந்தக்குடும்பத்தின் ஆணி வேராக இந்த வள்ளியம்மாக்கள் திகழ்கிறார்கள்.

அன்னக்கிளி அன்னக்கிளி

அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி

நல்லபடி வாழச் சொல்லி

இந்த மண்ணை கொடுத்தானே

பூர்வக்குடி

கம்மாங்கரை காணியெல்லாம்

பாடித் திரிஞ்சானே

ஆதிக்குடி

நாயி நரி

பூனைக்குத்தான்

இந்த ஏரிக்குளம் கூட சொந்தமடி..

இந்த மண்ணின் பூர்வக்குடிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது இந்த வரிகள். இந்த உலகமே பூர்வக்குடிக்கு சொந்தமாக இருந்தது. நிலத்தை பற்றிய கவலையெல்லாம் அவனுக்கும் கிடையாது. ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது. கம்மாங்கரை, காணியெல்லாம் ஆடிப்பாடி திரிச்ச ஆதிக்குடிக்கு இன்று காணி நிலம் கூட சொந்தம் இல்லை என்ற வேதனை பதிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Album, Music director santhosh narayanan, Songs