லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இத்திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை தமிழில் நடிகர் விஜய் பாடி அசத்தியிருப்பார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அந்தப் பாடலை இதுவரை 80 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 1.8 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களையும் குவித்துள்ளது குட்டி ஸ்டோரி பாடல்.
இந்நிலையில் நேற்று தெலுங்கில் குட்டி ஸ்டோரி பாடல் வெளியிடப்பட்டது. அதில் விஜய்க்கு பதிலாக அனிருத் பாடியிருக்கிறார். இந்த வீடியோவை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை பார்த்திருக்கிறார்கள். மேலும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றிருக்கிறது.
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய மாஸ்டர் திரைப்படம், கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து ‘மாஸ்டர்’ படத்தை தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு யு/ஏ சான்றிதழைப் பெற்றுள்ளது.
பொங்கலை முன்னிட்டு 2021-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் புத்தாண்டு தினத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.