நடிகர் அஜித் குமார் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழில் முதல் படமாகும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அஜித்தின் 60-வது படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் துவங்கியுள்ளன. இந்தப் படத்தையும் இயக்குநர் ஹெச்.வினோத்தே இயக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்த போனி கபூர் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
படம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த போனி கபூர், “தல 60 படத்தில் அஜித், அஜித்தாகவே இருப்பார். படத்தில் ரேஸிங் காட்சி, ஸ்போர்ட்ஸ் என்று அவருக்கு பிடித்த அனைத்தும் இருக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.
இந்த கெட்டப் ‘தல 60’ படத்துக்கான கெட்டப்பாக இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற உள்ளதாகவும், 2020-ம் ஆண்டின் பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ பார்க்க : கார்த்தியை எதிர்த்து போட்டியிடும் பிரசாந்த்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.