ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அதிரடி சோதனை... சிக்கலில் மாட்டிய புஷ்பா பட தயாரிப்பு நிறுவனம்.. பின்னணி என்ன?

அதிரடி சோதனை... சிக்கலில் மாட்டிய புஷ்பா பட தயாரிப்பு நிறுவனம்.. பின்னணி என்ன?

புஷ்பா பட தயாரிப்பாளர்கள் மீது ஐடி ரெய்டு

புஷ்பா பட தயாரிப்பாளர்கள் மீது ஐடி ரெய்டு

இந்த நிலையில், திடீர் வருமானவரித்துறை சோதனை தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Hyderabad, India

புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் மெகா ஹிட் படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடி ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்புக்காக சோதனை நடத்தப்படுவதாகக் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அதிரடி சோதனையின் பின்னணி என்ன?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் டோலிவுட்டில் பிரபலமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடித்த ஸ்ரீமந்துடு திரைப்படத்தின் மூலம் 2015ம் ஆண்டு தெலுங்கில் இந்த தயாரிப்பு நிறுவனம் அறிமுகமானது.

அதன்பின், ரங்கஸ்தலம், டியர் காம்ரேட், உபென்னா, புஷ்பா, சர்க்காரு வாரி பாட்ட உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து தெலுங்கு திரைப்பட உலகில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தது.இந்த நிறுவனம் தற்போது பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி, சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா ஆகிய படங்களை தயாரித்து சங்கராந்தி அன்று வெளியிட உள்ளது.

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்திற்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதனிடையே அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி போன்ற 100 கோடி பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. தெலுங்கு திரையுலகின் முக்கிய திரைப் பிரபலங்கள் அனைவரும் மைத்ரி மூவி மேக்கர்சின் தயாரிப்பில் நடித்து வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், அவர்களது

அலுவலகங்களில் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 15 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் காலை முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ரவிசங்கர், நவீன் யெர்னேனி மற்றும் மோகன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்புக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாகக் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேசளவில் வெற்றிப்படமான புஷ்பா திரைப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை ஈட்டித்தந்துள்ளது. செலவு மற்றும் வருவாய் கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா என்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் எந்தவொரு வரி ஏய்ப்பு சர்ச்சையிலும் சிக்கவில்லை.

திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எந்த பாக்கியும் வைக்காமல் உடனடியாக பணம் வழங்கும் நிறுவனம் என்ற நல்ல பெயரை எடுத்துள்ளது. இந்த நிலையில், திடீர் வருமானவரித்துறை சோதனை தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தொடர்புடைய இடங்களில் நடக்கும் சோதனையின் குறித்து விரைவில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cinema, IT Raid, Telugu