2006 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் துள்ளித் திரிந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற சீரியல் ‘கனா காணும் காலங்கள்’. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பள்ளி பருவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தான் அதிக அளவில் ரசிகர்களாக இருந்தார்கள். இந்த தொடரில் தோன்றிய ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி, சைனீஸ் போன்றவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.
இதில் ராகவி, இர்பான், பிளாக் பாண்டி, பிருந்தா தாஸ், குயிலி, பாலா சரவணன், கவின், ரியோ ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கனா காணும் காலங்கள் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, கனா காணும் காலங்கள் பருவம் 2, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என மொத்தம் 4 சீசன்கள் ஒளிபரப்பாகின. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ஏப்ரல் 22ம் தேதி முதல் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸ் வடிவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடித்து வருகின்றனர். ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாகவும், ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடித்து வருகின்றனர். வெப் சீரிஸ் தொடங்கியதில் இருந்தே முந்தைய சீசனைச் சேர்ந்த பிரபலங்கள் யாராவது கம்பேக் கொடுக்க மாட்டார்களா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக அசத்தலான நடிகர் ஒருவரை கனா காணும் காலங்கள் டீம் களமிறக்கியுள்ளது.
இந்த சீரியலின் முதல் சீசன் அதாவது பள்ளி காலத்தில் மாணவன் வினித்தாக நடித்து புகழ் பெற்றவர் இர்ஃபான். தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் ஆசிரியராக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக பலரும் இர்பானை தங்களது வீட்டு பிள்ளையாகவே நினைக்க ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் மகன் சக்தி சரவணனாக தோன்றி ரசிகர்கள் மனம் கவர்ந்தார். ஆனால் வெள்ளித்திரையில் கால் பதிக்கும் ஆசையில் அந்த சீரியலை விட்டு விலகியவர் பட்டாளம், சுண்டாட்டம் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக எவ்வித பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
தற்போது தனக்கு புகழ் வெளிச்சம் தேடித்தந்த விஜய் டி.வி.யின் ‘கனா காணும் காலங்கள்’ தொடருக்கே திரும்பியுள்ளார். இயற்பியல் ஆசிரியர் ஜெரின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் வாரங்களில் அவர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. 14 வருடங்களுக்கு முன்பு மாணவனாக போய், இப்போது ஆசிரியராக கம்பேக் கொடுக்க உள்ள இர்பானை காண கனா காணும் காலங்கள் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Published by:Elakiya J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.