சன் டிவியில் பிரமாண்ட சமையல் நிகழ்ச்சி - விஜய் சேதுபதி தான் தொகுப்பாளரா... ப்ரமோ வீடியோ ரிலீஸ்

சன் டிவி ப்ரமோ

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிரமாண்ட சமையல் நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
சமையல் கலை மற்றும் விதவிதமான உணவு வகைகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் பல முன்னணி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதேபோல் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பெரும்பாலானோர் சமையலை மையப்படுத்தி வீடியோக்கள் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்.

ஆண்கள், பெண்கள் என அனைவரிடத்திலும் சமையல் நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதில் நகைச்சுவையைச் சேர்த்து வித்தியாசம் காட்டியது விஜய் டிவி.

விஜய் டிவியில் அறிமுகப்படுத்தப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமிருக்கிறது. ஒரு சமையல் நிகழ்ச்சி அத்தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியாக மாறியிருப்பதோடு ஆண்டுக்கு ஒருமுறை ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல் மக்களால் பேசப்படும் ஒரு ரியாலிட்டி ஷோவாக மாறியிருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்போர் அதன் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருப்பதோடு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். தமிழில் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கும் செல்கிறது குக் வித் கோமாளி.

இந்நிலையில் பிரபல பொழுதுபோக்கு சன் தொலைக்காட்சியும் சமையல் நிகழ்ச்சியை கையிலெடுத்துள்ளது. உலகின் 40 நாடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாஸ்டர் செஃப்’ என்ற நிகழ்ச்சியை தமிழில் ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி.



அதற்கான ப்ரமோ வீடியோவை யூடியூபில் வெளியிட்டிருக்கும் சன் டிவி விரைவில் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதை சன் தொலைக்காட்சி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Published by:Sheik Hanifah
First published: