அன்று தொடங்கி இன்று வரை எல்லா வகையான டிவி சீரியல்களையும் இரண்டே பிரிவுகளாக பிரித்து விடலாம். ஒன்று - "வேற வழியே இல்ல.. அடுத்த அரை மணி நேரத்திற்கு.. இல்லனா ஒரு மணி நேரத்திற்கு.. எவ்ளோ மொக்கையா இருந்தாலும், எவ்ளோ ரம்பம் போட்டாலும்.. இதை பார்த்து தான் ஆகவேண்டும்" என்று ஆடியன்ஸ் பல்லைக்கடித்து கொண்டு பார்க்கும் 'சொதப்பல்' சீரியல்கள்! இன்னொன்று - இருக்கும் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு.. "முதல்ல இன்னைக்கு எபிசோட்ல என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.. அப்புறமா சமைக்கலாம், சாப்பிடலாம்!" என்கிற அளவிற்கு ஆடியன்ஸின் 100% என்கேஜ்மென்ட்-ஐ உறுதி செய்யும் 'சூப்பர்' சீரியல்கள்!
அப்படியாக சுவாரஸ்யமான கதைக்களம், அட்டகாசமான அல்லது பிரபலமான நடிகர்கள், ப்ரைம் டைமில் ஒரு ஸ்லாட், பொழுதுபோக்கு போன்ற எல்லைகளை தாண்டி இந்த உலகம் எப்படி இயங்குகிறது? நம்மை சுற்றி உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? போன்ற படிப்பினைகளை வழங்கிய பல சீரியல்கள் இங்கே உள்ளன.
அதில், குடும்பம் மற்றும் வியாபாரத்தில் பெண்கள் சந்திக்கும் போராட்டத்தை அக்குவேறு ஆணிவேராக பிரித்து காட்டிய 'கோலங்கள்' சீரியலுக்கும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மையமாக கொண்ட 'தென்றல்' சீரியலும் தனி இடம் உண்டு. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றெல், கோலங்கள் சீரியல் முடிந்த பிறகு, அதற்கு பதிலாக, அதாவது கோலங்கள் ஒளிபரப்பட்ட அதே 9 மணிக்கு (இரவு) ஒளிபரப்பான சீரியல் தான் - தென்றல்!
இந்த இரண்டுமே சன் டிவியின் சூப்பர் ஹிட் நாடகங்கள் ஆகும். 24 நவம்பர் 2003 முதல் 4 டிசம்பர் 2009 வரை ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் ஆனது மொத்தம் 1,533 எபிசோடுகளை உள்ளடக்கியது. மறுகையில் உள்ள தென்றல் சீரியல் ஆனது டிசம்பர் 7, 2009 முதல் ஜனவரி 17, 2015 வரை மொத்தம் 1,340 எபிசோட்களுடன் நிறைவு பெற்றது.
also read : நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரல்..
கோலங்கள் சீரியலில் நடித்த தேவயானிக்கு 2003 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. உடன் நடித்த தீபா வெங்கட், அஜய் கபூரும் கூட இந்த சீரியலில் நடித்ததற்காக விருதுகள் வென்றுள்ளனர். மறுகையில் உள்ள தென்றல் சீரியல் இன்னும் ஒருபடி மேலே சென்று, விகடன் விருதுகள் 2010, தமிழ்நாடு தேசிய விருது 2010, மைலாப்பூர் அகாடமி விருதுகள் 2011 மற்றும் சன் குடும்பம் விருதுகள் போன்ற பல விருது நிகழ்வுகளில் சிறந்த நாடகம், சிறந்த கதாநாயகி, சிறந்த ஜோடி, சிறந்த வில்லன் போன்ற 35 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு 25 விருதுகளை வென்றுள்ளது.
இப்படியான வெற்றிகளை கண்ட, இந்த 2 ஐகானிக் சன் டிவி சீரியல்களும் தற்போது மறுஒளிபரப்பிற்கு தயாராகி விட்டன. ஆனால் நீங்கள் நினைப்பது போல, எதிர்பார்ப்பது போல, கோலங்கள் மற்றும் தென்றல் சீரியல்களின் மறுஒளிபரப்பு சன் டிவி வழியாக நடக்கப்போவதில்லை. மாறாக கலர்ஸ் தமிழ் சேனல் வழியாக மறுஒளிபரப்பாக உள்ளது. ஆனால் எப்போது என்கிற நேரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.