• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அப்படி என்னப்பா இருக்கு அந்த சன் டிவி சீரியலில்? எந்த பக்கம் திரும்பினாலும் கயல் குறித்த பேச்சு தான்!

அப்படி என்னப்பா இருக்கு அந்த சன் டிவி சீரியலில்? எந்த பக்கம் திரும்பினாலும் கயல் குறித்த பேச்சு தான்!

சன் டிவி கயல் சீரியல்

சன் டிவி கயல் சீரியல்

கயல் சீரியல் முதல் வாரத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருப்பது குழுவினரிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சன் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி, முன்னணி இடத்தில் இருக்கும் அனைத்து சீரியல்களையும் பின்னுக்குத்தள்ளி 10.66 புள்ளிகள் டிஆர்பி ரேட்டிங் பெற்று கயல் தொடர் முதலிடத்தில் வகிக்கிறது

    சமீப காலமாக பல சேனல்களிலும் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன. கோவிட் தொற்றுக்கு பின்பு மந்தமான நிலையில் இருந்த சின்னத்திரை தற்போது மீண்டும் புதுப்பொலிவு பெற்று வருகின்றது. புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, டிஆர்பி ரேட்டிங்கில் குறிப்பிட்ட ரேங்க் பெறுவதற்கு சில வாரங்களாவது ஆகும். ஆனால், சன் டிவியில் ஒளிபரப்பான புதிய சீரியல் ஒன்று, முதல் வாரத்திலேயே டிஆர்பியை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கும் கயல் சீரியல்தான் சன் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக முதல் வாரத்திலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக சஞ்சீவ் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் அறிமுகமானார். விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். ராஜா ராணி தொடர் சூப்பர் ஹிட் சீரியலானது. அதைத் தொடர்ந்து, நடிகர் சஞ்சீவுக்கு மிகப் பெரிய அளவு ரசிகர் கூட்டம் உருவானது.

    குறிப்பாக, ஏகப்பட்ட ரசிகைகள் சஞ்சீவுக்கு உண்டு. முதல் சீரியல் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் டிவியின் காற்றின்மொழி தொடரிலும் நாயகனாக நடித்தார். 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய காற்றின்மொழி தொடர், ஏப்ரல் 2021ல் முடிந்தது. பிறகு, சில வாரங்களுக்கு எந்த புதிய சீரியல்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார் சஞ்சீவ். விஜய் டிவியில் தொடர்ந்து நடித்து வந்தவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தபோது அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.

    விஜய் டிவியின் புதிய சீரியலில் நாயகனாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த போது, சன் டிவியின் புதிய சீரியலில் நடிக்கப் போவதாக செய்தி வெளியானது. கயல் சீரியல் பற்றிய செய்தி முன்னோட்டம் அதை உறுதி செய்து, படபிடிப்புத் தொடங்கி தற்போது சீரியலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தொடரில் சஞ்சீவுக்கு ஜோடியாக ஜீ தமிழ் சேனலின் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த சைத்ரா ரெட்டி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கயல் சீரியல் தினமும் இரவு 7.30 மணிக்கு, ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி, முன்னணி இடத்தில் இருக்கும் அனைத்து சீரியல்களையும் பின்னுக்குத்தள்ளி 10.66 புள்ளிகள் டிஆர்பி ரேட்டிங் பெற்று கயல் தொடர் முதலிடத்தில் வகிக்கிறது. சன் டிவியில் கயல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி முதல் வாரத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருப்பது குழுவினரிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: