` விஜய் டிவியின் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2-வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் சீரியலை விட்டு வெளியேறி உள்ளார். ராஜா ராணி 2-வின் நாயகியான (நிஜ வாழ்க்கையில்) ஆல்யா மானசா 2-வது முறையாக கர்ப்பம் அடைந்து இருப்பதால் அவர் எப்போது வேண்டுமானாலும் சீரியலை விட்டு வெளியேறலாம் என்று அரசல் புரசலாக தகவல் வெளியாகி கொண்டிருக்கும் நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அது ஆல்யா மானசாவின் அண்ணனாக நடித்த சால்சா மணி ஆவார்.
முன்னதாக பாரதி கண்ணம்மா சீரியலில், கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகியாக 'அஞ்சலி' என்கிற கதாபாத்திரத்தில் நடித்த
கண்மணி மனோகரன், அந்த சீரியலை விட்டு வெளியேறினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. சீரியலுக்கு வருவதற்கு முன்பு நான் செய்த வேலை இதுதான்… ஷாக் கொடுத்த கோகுலத்தில் சீதை வசு!
முக்கிய கதாபாத்திரம், துணை கதாபாத்திரம் என பாரபட்சம் பார்க்காமல் கடந்த சில மாதங்களாகவே பல டிவி சீரியல்களில் இருந்து பல நடிகர், நடிகைகள் வெளியேறிய வண்ணம் உள்ளனர். குறிப்பாக விஜய் டிவியில், யாரால் பாரதி கண்ணம்மா சீரியல் ஹிட் ஆனதோ அவரே சீரியலை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்தது. அதனுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசாவிற்கு அண்ணன் ஆக நடித்த சால்சா மணி சீரியலை விட்டு வெளியேறுவதில் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி இருக்காது என்பது வெளிப்படை.
போதாக்குறைக்கு, ராஜா ராணி 2-வில் சால்சா மணிக்கு பெரிய அளவிலான காட்சிகளும் அமைக்கப்படுவதில்லை. தங்கையை யாருக்காவது திருமணம் செய்துகொடுத்து விட்டு, முடிந்த வேகத்தில் அமெரிக்காவிற்கு சென்றால் போதும் என்று எண்ணும் ஒரு அண்ணனாகவே சால்சா மணியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு இவர் வரும் பெரும்பாலான காட்சிகள் அனைத்துமே தங்கை உடன் அமெரிக்காவில் இருந்தபடியே போன் பேசுவது போலவே அமைக்கப்பட்டன. இதற்கிடையில் தான் இவர் சீரியலை விட்டு விலகி உள்ளார்.
ராஜ ராணியில் 2-வில் சால்சா மணிக்கு பதிலாக இனி நடிக்க போவது சின்னத்திரை நடிகர் சுரேஷ் ஆவார். நினைவூட்டும் வண்ணம் இவர் சன் டிவியின் பிரபல சீரியலான தெய்வமகளில் நடித்து உள்ளார். ராஜா ராணி 2-வில் அவ்வப்போது வரும் நாயகியின் அண்ணன் கேரக்டர் திடீரென்று மாற்றப்படுவதன் வழியாக சீரியலில் சில ட்விஸ்ட்களை நாம் எதிர்பார்க்கலாம் அல்லது குறைந்தபட்சம் நடிகர் சுரேஷிற்கு 'பெர்ஃபார்மென்ஸ்' செய்ய வாய்ப்புகள் வழங்கப்படலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஹிட் சீரியல்களில் இப்படி அடிக்கடி கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டால் ரசிகர்களுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டிவிடும், எந்தவொரு கதாபாத்திரத்துடனும் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக ஒன்றிப்போக முடியாது என்பதையும் இயக்குனர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க.. ஒருவழியா ஐபிஎஸ் படிக்க போகும் சந்தியா… அர்ச்சனாவுக்கு தெரிஞ்சா கதையே வேற!
பெரும்பாலான சீரியல்களின் வெற்றி "அட.. இது நம்ம கதை போல இருக்கே... இது நம்ம வீட்டில் நடப்பது போலவே இருக்கே..!" என்கிற ரசிகர்களின் எண்ணத்தில் தான் உள்ளது; சீரியலின் கதையை விட அதில் வரும் கதாபாத்திரங்களும், அவர்களது நடிப்புமே மக்கள் மனதில் அதிகம் நிற்கும். முக்கிய கதாபாத்திரங்களை மாற்றுவதால் எந்தவொரு ஹிட் சீரியலுக்குமே பெரிய சரிவு வந்ததில்லை என்கிற தைரியம் இயக்குனர்களுக்கு அதிகமாகி கொண்டே போகிறது, ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு? என்பது தான் இங்கே கேள்வி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.