• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தொலைக்காட்சியில் தொடர்ந்து 8 மணி நேரம் ஒளிபரப்பான தமிழ் படம்!

தொலைக்காட்சியில் தொடர்ந்து 8 மணி நேரம் ஒளிபரப்பான தமிழ் படம்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் சுமார் 8 மணி நேரம் ஒளிபரப்பாகி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது நடிகர் கமல் ஹாசனின் படம்.

  • Share this:
    டிஜிட்டல் உலகில் பொழுதுபோக்கிற்கு குறைவே இல்லை. எந்த நாட்டு, எந்த மொழிப் திரைப்படமாக இருந்தாலும் நம்முடைய மொபைல் திரையில் பார்க்கும் வசதி இப்போது இருக்கிறது. அது மட்டுமின்றி பல புதிய திரைப்படங்கள் பல்வேறு OTT தளத்தில் வெளியிடப்படுகின்றன. எவ்வளவு நவீனமாக தொழில்நுட்ப பொழுதுபோக்கு மாறினாலும் வீட்டில் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். தொண்ணூறுகளின் மத்தியில் கேபிள் சேனல்கள் அறிமுகமாகி அவ்வப்போது திரைப்படங்களும், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக தொடங்கின. பண்டிகை தினங்களில் சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

    தொலைக்காட்சிகளில் திரைப்படத்தை பார்க்கும் போது இடையில் வெளியிடப்படும் விளம்பரங்கள் காரணமாக திரைப்படத்தின் நீளம் 3 மணி முதல் மூன்றரை மணி நேரம் வரை ஆகக்கூடும். சில நேரங்களில், அதிகமான விளம்பரங்கள் இருக்கும் பட்சத்தில் நான்கு மணி நேரம் வரை ஒளிபரப்பப்படலாம்.

    பொதுவாக, பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது சேனல்களுக்கு இடையே யார் அந்த திரைப்படத்தை வாங்குவது என்று கடும் போட்டி நிலவும். இப்போதெல்லாம் ஒரு படத்தின் வெளியீட்டு தேதிக்கு முன்னரே, ஏதேனும் ஒரு சேனலால் தொலைக்காட்சியில் அதன் வெளியீட்டு உரிமை வாங்கப்பட்டு வருகிறது. அதேபோல முன்பு மாதிரி புதிய திரைப்படங்கள் பார்ப்பதற்கு மாதக்கணக்காக, வருடக்கணக்காக காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

    மேலும், படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நாம் விரும்பாத பகுதிகளை ஃபார்வார்ட் செய்து பார்க்கும் அமைப்பும் இப்போது உள்ளது. விளம்பரங்கள் தடையின்றி, விரும்பிய படத்தை பார்த்து ரசிக்கலாம். ஆனால், இரண்டரை அல்லது மூன்று மணி நேர திரைப்படத்தை வீட்டில் பொறுமையாக எட்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியுமா?

    அப்படி ஒரு சாதனையை செய்துள்ளது ஒரு மெகா ஹிட் தமிழ் திரைப்படம். தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் சுமார் 8 மணி நேரம் ஒளிபரப்பாகி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் தான் 8 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது.

    1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் ஒளிபரப்பும் உரிமையை ராஜ் டிவி நிறுவனம் பெற்றிருந்தது. மிகப் பெரிய ஹிட்டான இந்தியன் திரைப்படம் 17.11.1999 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பானது. மாலையில் 4 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கிய இந்தியன் திரைப்படம் கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணிக்கு தான் முடிந்தது.

    இதனாலேயே தொலைக்காட்சி வரலாற்றில் அதிக நேரம் ஒளிபரப்பான முதல் தமிழ் திரைப்படம் இந்தியன் என்ற பெருமை இந்த படம் பெற்றுள்ளது. ஏகப்பட்ட சேனல்கள் உள்ள நிலையில், ஒரு படமோ சீரியலோ பிடிக்கவில்லை என்றால் எளிதாக மாற்றி விடலாம். இப்போதெல்லாம் இவ்வளவு பொறுமையாக மணிக்கணக்கில் ஒரு திரைப்படத்தை பார்க்க முடியுமா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: