Home /News /entertainment /

ராஜா ராணி சீரியல் நடிகையின் ஆபாசப் புகைப்படம் - சைபர் கிரைமில் புகார்!

ராஜா ராணி சீரியல் நடிகையின் ஆபாசப் புகைப்படம் - சைபர் கிரைமில் புகார்!

ராஜா ராணி சீரியல்

ராஜா ராணி சீரியல்

தொடர்ந்து இச்செயலை எதிர்கொண்டு வந்ததால் அந்த மர்ம நபரை பல முறை எச்சரித்ததாகவும் கூறினார்.

    திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் அல்லது செய்யப்பட்ட ஆபாசமாக மார்பிங் புகைப்படங்களை அவ்வப்போது சில விஷமிகள் சமூக வலைதளங்களில் பகிர்வது உண்டு.

    அந்த வகையில் சமீபத்தில் சீரியலில் அம்மா வேடத்தில் நடிக்கும் ஒரு நடிகையின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசமான புகைப்படம் வெளியானது. நடிகை உடனே காவல் துறையிடம் புகார் தெரிவித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார்.

    விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நாயகனின் அம்மா பாத்திரத்தில் நடிகை பிரவீணா நடித்து வருகிறார். இவரின் புகைப்படம் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மார்பிங் புகைப்படமாக இருந்தாலும், இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை பிரவீணா உடனடியாக இதைப்பற்றி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

    பார்ப்பதற்கு பாந்தமாக தோற்றமளிக்கும் நடிகை பிரவீணா தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து மிகவும் பரீட்சயமான முகம். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய பேரை கொடுப்பதற்காகவே ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்கள் என்று சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் கணக்கில் பல நடிகர் நடிகைகளைப் போலவே நடிகை பிரவீணாவும் ஆக்டிவாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்று முகம் தெரியாதவர்களால் தொந்தரவு செய்யப்படுகிறார்கள். இதில் பக்கத்து வீட்டுப் பெண் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். நடிகை பிரவீனாவும் அதைப் போன்ற ஒரு மர்ம நபரால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    பொதுவாகவே பிரபலமாக இருக்கும் நடிகைகள் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு வெளி வருவது இயல்புதான். ஆனால், இதன் பரபரப்பு ஓரிரு நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதால் பல நடிகைகள் இதனை இயல்பாக கடந்து விடுவார்கள். சைபர் கிரைமில் புகார் அளிக்கும் அளவுக்கு அவ்வளவு தீவிரமாக கொண்டு செல்லும் அளவுக்கு, என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நடிகை பிரவீணா விளக்கமாக தெரிவித்துள்ளார்.

    மர்ம நபர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை வெகுகாலமாகவே பின்தொடர்ந்து வந்ததாகவும், தன் கணக்கில் உள்ள ஃபாலோயர்களுக்கு தேவையில்லாத படங்கள் மற்றும் மெசேஜ்களை அனுப்பியதாகவும், தன்னுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் இதேபோல முறைகேடான புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இச்செயலை எதிர்கொண்டு வந்ததால் அந்த மர்ம நபரை பல முறை எச்சரித்ததாகவும் கூறினார்.

    ஆனால் தற்போது எல்லை மீறி, மார்பிங் செய்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் அளவுக்கு சென்று விட்டதால், போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். மேலும், தன்னுடைய பெயரில் இயங்கும் போலி கணக்கை பின்தொடர வேண்டாம் என்றும், எச்சரிக்கையாக இருக்குமாறும் ரசிகர்களிடம் கூறினார்.

    நடிகை பிரவீணாவின் இந்த அறிக்கை சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கொடுத்த சைபர்கிரைம் புகாரின் அடிப்படையில் போலீசார் கன்னியாகுமரியை மற்றும் டெல்லியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

    நடிகை பிரவீணா போலீசில் தைரியமாக புகார் அளித்தது பல பெண்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்றும், இதைப் போல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொண்டால், தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி