ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே விஜய் டிவி தான் என்று கூறும் அளவுக்கு வெரைட்டியான ரியாலிட்டி ஷோக்களை பல ஆண்டுகளாக சேனல் ஒளிபரப்பி வருகிறது. ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள் விஜய் டிவி தொடக்கத்தில் இருந்தே ஒளிபரப்பாகி வருகிறது, உதாரணமாக நீயா நானா! அதே போல ‘நம்ம வீட்டு கல்யாணம்’ என்ற கலக்கலான ரியாலிட்டி நிகழ்ச்சியும் பல மிகப்பெரிய ஹிட் ஆனது.
சின்னத்திரை கலைஞர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருப்பவர்கள், பாடகர்கள், கதையாசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என்று நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பிரபலமாக வலம் வரும் கிரிக்கெட் வீரரையும், நடிகரையும் நமக்குத் தெரியும். ஆனால் பிரபலங்களின் குடும்பத்தை பற்றி பெரிதாக தெரிந்திருக்காது. இந்த நிகழ்ச்சியில் ஜோடிகளாக கலந்து கொண்டு தங்கள் திருமணம் எப்படி நிகழ்ந்தது, திருமணத்தில் ஏற்பட்ட கலாட்டாக்கள், நெகிழச்செய்த சம்பவங்கள் என்று சுவாரஸ்யமான பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களை பார்த்து தான் இவருக்கு திருமணம் ஆகி விட்டதா என்றே பல ரசிகர்கள் தெரிந்து கொண்டனர். அதேபோல ஒருசிலருக்கு இவ்வளவு வயதாகிவிட்டதா, இவர்களுக்கு திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதா என்றெல்லாம் தெரியாத பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தி, நம்ம வீட்டு கல்யாணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
2008 ஆம் ஆண்டில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கியது. நடிகை மற்றும் தொகுப்பாளினி ஷில்பா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்குப்பிறகு சின்னத்திரையின் பிரபலமான தொகுப்பாளினியான அர்ச்சனா இந்த நிகழ்ச்சியின் சில சீசன்களில் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான திவ்யதர்ஷினி பல சீசன்களை தொகுத்து வழங்கினார். இவருடைய திருமணத்தை ஸ்பெஷல் எபிசோடுகளாக விஜய் டிவி ஒளிபரப்பியது.
Also read... மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி இடையில் நிறுத்தப்பட்டிருந்தாலும், சில மாதங்களுக்கு முன் கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகாவின் திருமணத்தை கொண்டாடினார்கள். கவிஞர் சினேகன் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியான அனைத்து எபிசோடுகளும் ஹாட்ஸ்டாரில் இருக்கிறது. விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்த பார்வையாளர்களுக்கு சேனல் ஒரு சிறிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. புதிய நம்ம வீட்டு கல்யாணம் சீசன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகவில்லை. அதற்கு மாறாக விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமின்றி இந்த சீசனின் முதல் தம்பதிகளாக பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் மற்றும் நடிகரான ஆரியும் அவரது காதல் மனைவி நதியாவும் கலந்து கொண்டுள்ளனர் என்று தகவல் கசிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் என்பதைப் பற்றிய தகவல் மற்றும் நிகழ்ச்சி எப்போதிலிருந்து விஜய் மியூசிக் சேனலில் ஒளிபரப்பாகும் என்பதை பற்றிய தகவலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.