இந்தியில் செம்ம பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து தமிழில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன் லால் ஆகியோரைத் தொடர்ந்து பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழை, உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் இந்நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்தது.
14 போட்டியாளர்கள், 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் தங்க வைத்து அவர்களிடையே தோன்றும் சண்டை, சச்சரவு, நட்பு, துரோகம், காதல் ஆகிய உணர்வுகளை, சற்றே காரசாரத்துடன் ஒளிபரப்பியதால், இந்நிகழ்ச்சிக்கு பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
5 சீசன்களை முடித்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஓடிடி தளத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி கிராண்ட் ஃபினாலே கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இதில் ராஜூ முதலிடத்தையும், பிரியங்கா, பாவனி ஆகியோர் இரண்டு மற்றும் 3வது இடத்தையும் பிடித்தனர். அந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே கமல் ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்ட காட்சிகளை மட்டுமே பார்வையாளர்கள் கண்டு களிக்க முடியும். அதிலும் நிகழ்ச்சிக்குத் தேவையான சுவாரஸ்யம் தரக்கூடிய விஷயங்களை மட்டுமே எடிட் செய்து ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னர் சில ‘அன் சீன்’ காட்சிகள் மட்டும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் செயலியில் மறுநாள் பதிவேற்றப்படும்.
அப்படியிருக்க பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 24x7 போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆப் மூலமாக கண்டுகளிக்கலாம் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியது. அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 5 சீசன்களில் பங்கேற்ற முக்கிய போட்டியாளர்களே இதில் பங்கேற்பார்கள் என கமல் அறிவித்தது, ரசிகர்களுக்கு கூடுதல் போனஸாக அமைந்தது.
இதனிடையே நேற்று நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கவிஞரும் நடிகருமான சிநேகன், வனிதா, ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா, தாடி பாலாஜி, ஷாரிக், சுஜா வருணி, பாலாஜி முருகதாஸ் ஆகியோரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு முடித்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நிரூப், சுருதி, அபிநய், தாமரை செல்வி ஆகிய 4 பேர் என மொத்தம் 15 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த லிஸ்டில் பெரும்பாலானோர் முந்தைய சீசன்களில் சர்ச்சை நாயகன், நாயகியாக வலம் வந்து பட்டையைக் கிளப்பியவர்கள் என்பதால், ‘இனி பிக்பாஸ் வீட்டிற்குள் மிகப்பெரிய சம்பவம் இருக்கு’ என மரண வெயிட்டிங் உடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.
Also Read : குக் வித் கோமாளி சீசன் 3-யில் இதை கவனிச்சீங்களா?
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளைப் போல் இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக முதல் நாளான நேற்று ட்ரோன் மூலமாக கமல் ஹாசன் வீட்டை சுற்றிக்காண்பித்தார். அதன் பின்னர் சில இயற்கையான பொருட்களுடன் அவர்களது குணத்தை ஒப்பிட்டு, வீட்டிற்குள் அனுப்பிவைத்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என அறிவித்தார்.
வனிதா, அனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, தாமரைச்செல்வி என கடந்த சீசன்களில் கொளுத்தி போட்டவர்கள் முதல் வெடித்துச் சிதறியவர்கள் வரை பெரிய தலைகள் அனைவரும் ஆஜரானதால், வீட்டிற்குள் சண்டை, சச்சரவுக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் அனைவரும் கண்ட கனவு முதல் நாளே புஷ் வானம் ஆகியுள்ளது.
Also Read : முதல் நாளிலேயே ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா!
நேற்று இண்ட்ரோ மற்றும் கலைநிகழ்ச்சி நிறைவடைய, இன்று காலை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஆப்பை ஓபன் செய்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அதாவது காலையில் ஆப்பை ஓபன் பண்ணா சினேகன் வாக்கிங் போவதை மட்டுமே 2 மணி நேரம் காட்டி கடுப்பேற்றியுள்ளனர்.
மற்ற போட்டியாளர்கள் எல்லாம் குளிருக்கு இதமாக இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டிருக்கிறார்களாம். இதை பார்க்கவா இவ்வளவு காத்திருத்தோம் என நொந்து போன ரசிகர்கள், 24 மணி நேரமும் இப்படியே போனால் தாங்காது பிக்பாஸ், தயவு செஞ்சி நீங்க எடிட் செஞ்சே போட்டுடுங்க என சோசியல் மீடியாவில் கதறி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.