அஜித் - விஜய் நட்பின் கதை - இருவர் கடந்து வந்த பயணத்தின் தொகுப்பு!

அஜித் - விஜய் நட்பின் கதை - இருவர் கடந்து வந்த பயணத்தின் தொகுப்பு!
விஜய் - அஜித்
  • Share this:
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுறைக்கும் இரண்டு உச்ச நடிகர்கள் இரு துருவங்களாக பிரிந்து போட்டி போட்டப்படியே கோலோச்சி வந்துள்ளார்கள். அந்தவரிசையில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமலை தொடர்ந்து இன்றைய தலைமுறையினரின் ஆதர்ச நாயகர்களாக உருவெடுத்தவர்கள் விஜய் – அஜித்.

1992-ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் விஜய்யும் 1993-ம் ஆண்டு 'அமராவதி' படத்தின் மூலம் அஜித்தும் தமிழில் அறிமுகமாகிறார்கள். ஆரம்பத்தில் தொடர்ந்து தனது தந்தை இயக்கத்தில் மட்டுமே நடித்துவந்த விஜய், 1995-ம் ஆண்டு வெளியான 'ராஜாவின் பார்வையிலே' மூலம் முதன்முதலாக தனது தந்தையை தவிர்த்து வேறொரு இயக்குநரின் படத்தில் நடித்தார். இதே படத்தில் விஜய்யின் நண்பராக இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜித் நடித்தார்.

'ராஜாவின் பார்வையிலே' படப்பிடிப்பின்போது விஜய்யின் தாயார் ஷோபா, அஜித்துக்கும் சேர்த்தே சமைத்து கொடுப்பார். அந்தளவு அந்நாளில் விஜய்யும் அஜித்தும் குடும்ப நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். பின்னர் பூவே உனக்காக, லவ் டுடே என விஜய்யும் காதல் கோட்டை, காதல் மன்னன் என அஜித்தும் மாறிமாறி பல வெற்றிகளை கொடுத்து முன்னனி இடத்தை நோக்கி ஒன்றாக நகர்ந்துக்கொண்டிருந்தார்கள்.
இது ரஜினி, கமல் ரசிகர்கள் வயதில் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்திருந்த சமயம். எனவே அப்போதைய இளைஞர்கள் விஜய்க்கும் அஜித்துக்கும் ரசிகர்களாக மாற தொடங்கினார்கள். இன்னும் சொல்லப்போனால் 90-களின் இளைஞர்களும், சிறுவர்களும் விஜய், அஜித் என இரு பிரிவுகளாக பிரிந்து தங்கள் ஆதர்ச நாயர்களுக்கு ரசிகர்களாக மாறிய தருணம் அது.

ஆரம்ப காலத்தில் விஜய்யின் துள்ளலான நடிப்பும் நம்ம வீட்டு பையன் என்கிற இமேஜும்தான் அவருக்கு பெரும் ரசிகர் வட்டாரத்தை கூட்டியது. அதற்கு அப்படியே நேர்மாறாக காதல் மன்னன், ஆசை நாயகன் என்கிற இமேஜ் அஜித்துக்கு உருவாகி இருந்தது. குறிப்பாக அஜித்துக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருந்த காலக்கட்டம் அது. “அஜித் போல மாப்பிள்ளை வேண்டும்” என்கிற பேச்சும் அப்போது வழக்கத்தில் இருந்தது.புது நூற்றாண்டின் தொடக்கத்தில் விஜய் நடித்த பெரும்பாலான படங்களில் அவர் ரஜினி ஸ்டைலை கடைப்பிடிக்கத் தொடங்கினார். அதேசமயம் அஜித் வாலி, சிட்டிசன், வில்லன் என வித்தியாசமான வேடங்களில் நடித்து வந்தார். இது அடுத்த ரஜினி விஜய், அடுத்த கமல் அஜித் எனும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் விதைத்தது.

விஜய்யை அடுத்த ரஜினியாகவும் அஜித்தை அடுத்த கமலாகவும் பார்க்கத் தொடங்கிய இவர்கள், ரஜினி – கமல் ரசிகர்களை போலவே விஜய் Vs அஜித் எனும் போக்கை உருவாக்கினார்கள். இப்படியான ஒரு தருணத்தில்தான் விஜய் நடித்த பகவதி படமும் அஜித் நடித்த வில்லன் படமும் ஒரேநாளில் திரைக்கு வந்தது. ஏற்கனவே ஒருமுறை தீனாவும் பிரெண்ட்ஸ் படமும் மோதி இருந்தாலும் அப்போது இரண்டு படங்களும் வெற்றி பெற்றதால் பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த முறை பகவதி படம் தோல்வியடைந்து வில்லன் மாபெரும் வெற்றியை ருசித்தது.அதுவரை இரு பிரிவுகளாக பிரிந்து தங்கள் ஆதர்ச நாயகர்களை கொண்டாடிக் கொண்டிருந்த ரசிகர்கள், முதல்முறையாக தங்கள் விருப்ப நாயகனுக்காக இன்னொரு தரப்பினரை எதிர்க்க தொடங்கி இருந்தார்கள். அதுவரை கருத்து ரீதியில் மட்டுமே இருந்த இவர்களுடைய மோதல், வில்லன் – பகவதி சமயத்தில் திரையரங்குகளில் கைக்கலப்பில் முடியும் அளவு வீரியம் பெற்றது.

அதுவரை விஜய்யும் அஜித்தும் நட்பு பாராட்டி வந்த போதிலும் ரசிகர்கள் இரு தரப்பாக பிரிந்ததால் அவர்களுடைய படங்களில் தெரிந்தோ தெரியாமலோ ரசிகர்களின் மோதலை ஆதரிக்கும் வகையில் ஒருவரை ஒருவர் சீண்டி வசனம் இடம்பெறுவது போன்ற காட்சிகள் இடம்பெறத் தொடங்கின.

திரைப்படங்களில் இந்த போக்கை முதன்முதலில் தொடங்கி வைத்தது விஜய் என்கிறது வரலாறு. புதிய கீதை படத்தின் ஒரு காட்சியில், “உன் தல, வாலு எல்லாத்தையும் கூட்டிட்டு வா.. நான் இங்கேயே நிக்கிறேன்”ன்னு வசனம் பேசி இருப்பார் விஜய். அந்த சமயத்தில்தான் தீனா வெளியாகி, அஜித் ரசிகர்கள் அவரை ‘தல’ என அழைக்கத் தொடங்கி இருந்தார்கள்.

இதைத்தான் விஜய் மறைமுகமாக புதிய கீதை படத்தில் தாக்கி இருப்பார் என ஒரு தரப்பு தற்போது வரை நம்பி வருகிறது.
அதற்கடுத்து வெளியான திருமலை படத்தில் விஜய் பேசிய “வாழ்க்கை ஒரு வட்டம்டா.. அதுல தோக்குறவன் ஜெய்ப்பான், ஜெய்கிறவன் தோற்பான்” என்கிற பன்ச் இன்றுவரை பிரபலம். ஆனால் இந்த பன்ச்சுக்கு ஜனா படத்தில் பதிலடி கொடுத்திருப்பார் அஜித். ஜனா தோல்வி அடைந்ததால் இது பலரது கவனத்திற்க்கும் வராமல் போனது.

அடுத்து வெளியான அட்டகாசம் படத்தின் அறிமுக பாடலில் ”ஹிட்லராக வாழ்வது கொடிது. புத்தனாக வாழ்வது கடிது. ஹிட்லர், புத்தர் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன?” என பாடியிருப்பார் அஜித். இந்த பாடல் முழுக்க கேமிராவை நோக்கி ’உனக்கென்ன உனக்கென்ன’ என அஜித் பாடியது விஜய்யை பார்த்துதான் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இதுகுறித்து இயக்குநர் சரண் விளக்கமளித்தார். அதில் அட்டகாசம் பட சமயத்தில் அஜித்துக்கு அரசியல் ரீதியாக சில அழுத்தங்கள் வந்ததாகவும் அவர்களை குறிவைத்தே அந்த பாடல் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆரம்பம் முதலே அஜித்தை பிடிக்க அவரது ரசிகர்கள் சொல்லும் காரணங்களில் முதன்மையானது அவருடைய ‘தன்னம்பிக்கை’. அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் விஜய்க்கே அஜித்திடம் பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை என அவரே ஒரு மேடையில் கூறியிருக்கிறார்.அதேபோல் அபூர்வமாக பத்திரிகையாளர்களை சந்திக்கும் அஜித்திடம் ஒருமுறை உங்களுக்கும் விஜய்க்கும் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதானமாக பதிலளித்த அஜித், விஜய் என்றைக்குமே எனக்கு எதிரி கிடையாது.. எல்லா துறைகளை போலவே எங்களுக்குள்ளும் போட்டி உண்டு.. பொறாமை இல்லை என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.

விஜய்யும் அஜித்தும் மாறி மாறி தங்களுக்குள் பிரச்னைகள் இல்லை என கூறி வந்தாலும் ரசிகர்கள் அதை ஏற்பதாய் இல்லை. புது நூற்றாண்டின் தொடக்கத்தில் அலைபேசியின் தாக்கம் நாடெங்கும் பரவி கிடந்தது. அதுவரை திரையரங்குகளிலும் நட்பு வட்டாரத்திலும் சண்டை போட்டு வந்த விஜய், அஜித் ரசிகர்கள், நவீன வளர்ச்சியை தங்கள் ஆயுதமாக கையில் எடுக்க தொடங்கினார்கள். விஜய்யை கேலி செய்யும் வகையில் எஸ்.எம்.எஸ்-கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்து ஹிட்டடிக்கவும் செய்தன. ஒருகட்டத்தில் சர்தார்ஜி ஜோக்குகளுக்கு இணையாக விஜய் ஜோக்குகள் அதிகளவில் வெளிவரத்தொடங்கியது. இதில் அஜித் ரசிகர்களுக்கு பெரும் பங்குண்டு என்பதும் கசக்கும் உண்மை.

ரசிகர்களின் இந்த மோதல் வீரியம் பெறுவதை உணர்ந்த திரையுலகைச் சேர்ந்த சிலர், அஜித்தும் விஜய்யும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் எனவும் அதுவே ரசிகர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் எனவும் அறிவுரை கூறினர். இதுகுறித்தும் விஜய்யும் அஜித்தும் வெளிப்படையாகவே பேசினர்.இயக்குநர்கள் நல்ல கதையுடன் வந்தால் இணைந்து நடிக்கலாம் என விஜய்யும்.. ரசிகர்கள் ஒத்துழைத்தால் இணைந்து நடிக்கலாம் என அஜித்தும் வெளிப்படையாகவே தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்.

இடையில் மங்காத்தா படப்பிடிப்பில் விஜய்யும் அஜித்தும் எதேச்சையாக சந்தித்துக் கொண்டார்கள். அப்போது விஜய்க்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறினார் அஜித். பிரியாணி சமைத்த கைக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார் விஜய். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அந்நாளில் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த சந்திப்புக்கு பிறகு மங்காத்தா படத்தில் காவலன் பட காட்சியும் வேலாயுதம் படத்தில் மங்காத்தா பட பாடலும் இடம்பெற்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. விஜய்யும் அஜித்தும் பழையபடி நட்பு பாராட்டிவிட்டார்கள், இனி அவர்களிடையே மோதல் இல்லை என்பதை உணர்ந்து ரசிகர்களும் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.

இதுவரை திரையரங்குகளிலும் எஸ்.எம்.எஸ்-களிலும் மோதிவந்த இந்த கும்பல், தற்போது ‘அதுக்கும் மேல’ என வேறொரு வடிவில் மோதிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு இணையத்தின் அசூர வளர்ச்சியை தமிழகம் கண்டது. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் எல்லோருக்கும் அறிமுகமான காலக்கட்டம் அது. இதை தங்களுடைய களமாக மாற்றிக் கொண்ட ரசிகர்கள், முன்பிருந்ததை விட பன்மடங்கு வீரியத்துடன் இதில் மோதிக்கொண்டார்கள்.

வெளியில் ரசிகர்கள் வெறிக்கொண்டு மோதிகொண்டாலும் உள்ளே அஜித்தும் விஜய்யும் குடும்ப நண்பர்கள் என்பது திரை வட்டாரத்தில் இருக்கும் பலரும் அறிந்த விவரம்தான். இன்னும் சொல்லப்போனால் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே நடிகை ஷாலினி, விஜய் குடும்பத்தில் ஓர் அங்கமாகவே இருந்து வந்துள்ளார். கண்ணுக்குள் நிலவு பட சமயத்தில்தான் விஜய்க்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. அப்போது தொடங்கி தற்போது வரை விஜய்யின் மனைவியும் ஷாலினியும் குடும்ப நண்பர்களாகவே நட்பு பாராட்டி வருகின்றனர். அவ்வப்போது இவ்விரு குடும்பங்களும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளிக்கும்.

அரசியலை பொருத்தவரை ஆரம்பம் முதல் பத்தடி தள்ளியே நிற்கிறார் அஜித். சமூதாய பிரச்சனைக்கு குரல் கொடுப்பது, அரசியல் தலைவர்களை அவ்வப்போது சந்திப்பது போன்ற விஷயங்களில் அஜித் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் இதில் விஜய்யின் நிலைபாடு வேறு. தலைவா பட பிரச்சனைக்கு பிறகு அரசியல் ரீதியான சந்திப்புகளையும் பேச்சுக்களையும் நிறுத்தியிருந்தாலும்கூட, சமீப காலமாக எந்த கட்சியையும் சாராமல் Demonetisation, ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளில் தைரியமாக தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார் விஜய்.

தமிழகத்தில் விஜய் vs அஜித் போல பாலிவுட்டில் ஷாருக்கான் vs சல்மான்கான் எனும் போக்கு ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. விஜய், அஜித் போலவே ஷாருக்கானும் சல்மான்கானும் ஆரம்பத்தில் முட்டிக்கொண்டார்கள். ஆனால் தற்போது ஒருவர் படத்தில் இன்னொருவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவு நட்பு பாராட்டுகிறார்கள்.

தமிழகத்தில் அந்த சூழல் உருவாகுமா என பல நாட்களாக ஒரு கேள்வி எழுந்து வந்தது. இதற்கு விடையளிக்கும் விதமாக அண்மையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தை ‘நண்பர் அஜித்’ என கூறி இரண்டு தரப்பு ரசிகர்களுக்குமிடையே பரவசத்தை ஏற்படுத்தியிருக்கிறார் விஜய்.

அதேபோல் அஜித்தும் தன்னுடைய நேர்கொண்ட பார்வை படத்தில் ரசிகர்களின் மோதலுக்கு எதிராக ஒரு வசனத்தை பேசியிருப்பார். பல ஆண்டுகளாக பேட்டி கொடுப்பதையும் மேடை ஏறுவதையும் தவிர்த்து வரும் அஜித், இப்படி தன் படத்தின் மூலம் தன்னுடைய எண்ண ஓட்டத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எது எப்படி இருந்தாலும் ஆரம்பத்தில் ரசிகர்களின் இந்த மோதலை விரும்பி ஆதரித்த அஜித்தும் விஜய்யும் தற்போது இதை நினைத்து பெரிதும் வருந்துகிறார்கள். தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தை ‘நண்பர் அஜித்’ என கூறியதையும் தன்னுடைய படத்தில் ரசிகர்களின் மோதலுக்கு எதிராக அஜித் வசனம் பேசியதையும் இதன் வெளிப்பாடாகவே பார்க்கமுடியும். இது காலம் அவர்களுக்கு உணர்த்திய பாடம். அதேபோல் ரசிகர்களையும் காலமே மாற்றும். அந்த காலம் எப்போது வரும் என்பதுதான் இங்கே பலரது கேள்வியாக உள்ளது.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading